Skip to main content

“செவ்வாயில் கால் பதிப்பேன்!” – சாதனைத் தமிழச்சியின் வெற்றிப் பயணம்!

உலகம் முழுவதும் ஜொலிக்கின்ற சாதனையாளர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால்,  அதில் தமிழர்களுக்கோர் தனிஇடம் நிச்சயம் இருக்கும். அத்தகைய சாதனைத் தமிழர்கள் வரிசையில், செவ்வாய் கிரகத்தை நோக்கிய பயணத்தில் வேகத்தைக் கூட்டிவருகிறார் தென்றல் கமல் எனும் 17 வயது சிறுமி.

 

tamil girl in space travel mission

 

 

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் தன் குடும்பத்தினருடன் வசித்துவரும் தென்றல் கமல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராகவே சாதனைகளைப் புரிந்துவருகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் மிளிரும் இளம் நட்சத்திரங்களில் இவரும் ஒருவராக அங்கீகரிக்கப் பட்டிருக்கிறார். சிறுவயதில் இருந்தே தென்றல் கமலுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் அதிக நாட்டம். பெற்றோரின் ஒத்துழைப்புடன், வானவியல் தொடர்பான பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

2018-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் இயங்கிவரும் ஜீரோ-ஜி எனும் நிறுவனம், நுண் ஈர்ப்புவிசை ஆராய்ச்சி தொடர்பான போட்டி ஒன்றை நடத்தியது. இந்தப் போட்டியில் கலந்துகொள்பவர் பேரபோலிக் ஃப்ளைட் எனப்படும் விமானத்தில் கூட்டிச் செல்லப்படுவார். விமானம் அதிக உயரத்துக்கு சென்றபின் அரைவட்ட வடிவில் வளைந்து திரும்பும். அந்தத் தருணத்தில் விமானத்தில் பயணிப்பவர்கள் விண்வெளியில் இருப்பதைப் போல ஈர்ப்பு விசையற்ற நிலையை உணர்வார்கள். ஜீரோ-ஜி நடத்திய இந்தப் போட்டி செவ்வாய்க் கிரகத்திற்கு செல்வது தொடர்பான ஆராய்ச்சியின் ஒரு பகுதி. இதில் முகமது பின் ரஷீத் விண்வெளி மையத்தின் சார்பில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற 20 பேரில் தென்றல் கமல் முக்கியமானவர்.

வானவியல் தொடர்பான இவரது ஆர்வத்தைக் கண்டு ‘விண்வெளி ஆய்வுக்கான மகளிர் சமூகம்’ என்ற அமைப்பின் தூதுவராக அறிவிக்கப்பட்டுள்ளார். ‘மார்ஸ் ஜெனரேஷன் ஸ்டூடண்ட் ஸ்பேஸ்’ என்ற அமைப்பும் தென்றல் கமலை தூதுவராக அறிவித்து கவுரவப்படுத்தி உள்ளது.

இதுபோக, ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியிலும் தென்றல் கமல் சாதனைகள் படைத்து வருகிறார். இதனைப் பாராட்டி PADI (Professional Association of Diving Instructors) எனும் அமைப்பு தென்றல் கமலை கவுரவித்துள்ளது. “ஜீரோ-ஜி மற்றும் ஸ்கூபா டைவிங் ஆகிய இரண்டு மிகக்கடுமையான தளங்களிலும் மிகச்சிறந்து விளங்கும் தென்றல், கூடிய விரைவில் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வார்” என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அவரது பெற்றோர். 

 

tamil girl in space travel mission

 

“தற்சமயம், விண்வெளியில் இருக்கும் கிரகங்களின் புவியியல் அம்சங்கள் குறித்த ஆய்வு வேலையில் தீவிரமாக இயங்கிவருகிறேன். உலகப் புகழ்பெற்ற வானியற்பியல் வல்லுனர் டாக்டர்.நிதல் கஸ்ஸம் வழிகாட்டுதலில் இந்த ஆராய்ச்சி தொடர்கிறது. விண்வெளிப் பயணம் தொடர்பான எனது எண்ணங்கள் ஒருநாள் உண்மையாகும் என்று உறுதியாக நம்புகிறேன். செவ்வாய்க் கிரகத்தில் முதன்முதலில் கால்வைத்த இந்தியப் பெண் என்ற பெருமையை, நான் நம் நாட்டிற்குத் தேடித் தருவேன்” என்கிறார் உற்சாகம் பொங்கும் குரலில்.

‘வானமே எல்லை என்பதெல்லாம் பழைய கதை. நான் அதற்கு மேலும் செல்வேன், வெல்வேன்’ என்று உறுதிகாட்டும் தென்றல் கமலை உங்களோடு சேர்த்து நக்கீரனும் வாழ்த்துகிறது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்