திருப்பூரில் பள்ளி கழிவறையைப் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள குமாரபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி உள்ளார். இந்நிலையில் பள்ளியில் பயின்று வந்த இரண்டு பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகள் பேசும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் வருவாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். இதில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை நிர்பந்தித்து கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக அறிவியல் ஆசிரியை சித்ராவும் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்தச் சிறுமிகள் பேசி வெளியிடப்பட்ட வீடியோவில், 'யார் ஸ்கூல் பாத்ரூமை சுத்தம் செய்தது; நாங்க ரெண்டு பேரும்தான் பண்ணுவோம். யார் உங்களை பண்ண சொல்வது; எச்.எம் மிஸ், சயின்ஸ் மிஸ். நீங்கள் கழுவ மாட்டேன் எனச் சொல்ல வேண்டியது தானே; சொன்னா திட்டுவாங்க. எதிர்த்தா பேசுறனு குச்சியை எடுத்து வெளுப்பாங்க. உங்கள் வீட்டில் சொல்ல வேண்டியது தானே; வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு' எனப் பேசும் அந்த வீடியோ மேலும் வைரலாகி வருகிறது.