Skip to main content

நீங்கள்லாம் யாரு? எதுக்கு ஓடுறீங்க? குளிர்ல இந்த நேரத்துல எதுக்கு... சிக்கிய இசை பிரபலம்... பதற வைத்த ரிப்போர்ட்!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

போதையின் உச்சத்தில்... "கிளுகிளு உலகமான குளுகுளு கொடைக்கானல்'’ என்னும் தலைப்பில் கடந்த (பிப். 12-14) இதழில், தனிமனித ஒழுக்கம் என்றால் என்ன விலை?’ எனக் கேட்கும் டொமினிக் ரிபப்ளிக் போன்ற நாடுகளைப் போல், தமிழகத்திலும், குறிப்பாக கொடைக்கானலைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலும், "செக்ஸ் டூரிஸம்'’கைது செய்யப்பட்ட கற்பகமணி, ஹரீஷ்குமார், தருண்குமார் போன்ற சமூக விரோதிகளால் சத்தமில்லாமல் அரங்கேறி வந்ததைப் புலனாய்வு செய்து வெளியிட்டிருந்தோம்.

நாங்களே அடித்து விரட்டுவோம்! 

270 ஆண்களும் 6 பெண்களும் பங்கேற்ற போதை விருந்து’என, சமூக ஆர்வலர் திருமுருகன், நக்கீரனுக்குப் பேட்டி அளித்திருந்த நிலையில், கொடைக்கானலில் இருந்து 27 கி.மீ. தொலைவிலுள்ள, கூக்கால் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குண்டுபட்டி கிராமத்திலிருந்து நம்மைத் தொடர்புகொண்டு, “நிஜக் கணக்கை நாங்க சொல்லுறோம்...''’என்று கூற, அங்கு விரைந்தோம்.
 

incident



குண்டுபட்டி ஊர்த்தலைவரான சரவணன் “எங்க மக்கள் மொத்தபேரும் கொதிச்சுப்போய் இருக்காங்க. இனி யாரா இருந்தாலும், எந்த ஸ்டேட்காரனா இருந்தாலும், இங்கே வந்து தப்பு பண்ண இனி விடமாட்டோம். அடிச்சி விரட்டுவோம்னு ஒரு முடிவோடு இருக்காங்க. வயசுப் பசங்கதான... பாட்டு, டான்ஸுன்னு ஜாலியா இருக்காங்கன்னு கண்டும் காணாம இருந்தது ரொம்ப தப்பா போச்சு. அங்கே என்னென்ன நடந்துச்சுன்னு இப்பத்தான் ஒண்ணொண்ணா சொல்லுறாங்க''’என்றார் வேதனைக்குரலில்.

குண்டுபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சூசை ஜான், “இந்த ஸ்கூல்ல கேர்ள் ஸ்டூடண்ட்ஸ் நெறய பேரு படிக்கிறாங்க. என்னென்னமோ நடக்குதுன்னு கேள்விப்படறோம். பாதுகாப்பு இல்லியேங்கிற அச்ச உணர்வோடுதான் எங்களோட ஒவ்வொரு நாளும் கடந்துபோகுது''’என்றார்.

நள்ளிரவில் தப்பி ஓடிய போதைக் கூட்டம்! 

கூக்கால் பஞ்சாயத்து 4-வது வார்டு மெம்பரான சுமித்ரா, "அன்னிக்கு ராத்திரி 2 மணி இருக்கும். முப்பது நாப்பது பேரு ஆண்கள். ஏழெட்டு பேரு பெண்கள். எங்க வீட்டு வழியா தலைதெறிக்க ஓடினாங்க, மறிச்சி கேட்டேன். "நீங்கள்லாம் யாரு? எதுக்கு ஓடுறீங்க?'ன்னு. திருதிருன்னு முழிச்சாங்க. அதுல ஒருத்தன் வாக்கிங் போறோம்னு சொன்னான். இந்தக் குளிர்ல அதுவும் இந்த நேரத்துல எதுக்கு நம்ம கிராமத்து வழியா இவங்க வாக்கிங் போகணும்னு குழப்பமா இருந் துச்சு. மறுநாள்தான் தெரிஞ்சது. இவங்கள்லாம் போலீஸ்கிட்ட இருந்து தப்பி ஓடியாந்த வங்க''ன்னு’என்றார். ஆக, எச்சரித்து அனுப்பப் பட்டவர்களின் எண்ணிக்கை 270 என்று போலீஸ் சொன்ன கணக்கு தவறானது’ என்பதை சுமித்ரா உறுதிப்படுத்த, முருகானந்தம் என்பவர், ""இந்த ரெண்டு ஏக்கர் நிலத்துல ஆயிரக்கணக்குல கூடியிருக்க முடியும். இங்கே தப்பிச்சு ஓடறதுக்கு எல்லா பக்கமும் வழியிருக்கு''’என்றார். சரஸ் என் பவர், ""நாலஞ்சு வருஷமா இது நடந்துக்கிட்டிருக்கு. இவங்கள பார்த்து எங்க பசங்களும் கெட்டுப் போயிருவாங்க''’என்றார் ஆதங்கத்துடன்.
 

incident



மகாதேவன், கவியரசன், ஏசுதாஸ், அருண்குமார், அஜித் போன்ற இளைஞர்கள் நம்மிடம், கொடைக்கானல் டாக்ஸி டிரைவர்கள் சிலரும் “வெளி மாநில ஐ.டி. பசங்களுக்கு சவாரியே போகக்கூடாதுன்னு இங்கே கட்டுப்பாடெல்லாம் இருக்கு. ஏன்னா, அவங்க தேடி வர்றது போதைக்காளான்கிறது னால.. நடந்தது கொஞ்சநஞ்ச அக்கிரமம் இல்ல...''’என்று விளக்கினர். போதைக்காளான்கள் குறித்து, தான் அறிந்தவற்றை சமூக ஆர்வலர் ஒருவர் விளக்கினார்.

சங்கேத வார்த்தைகளில் இயங்கும் உலகளாவிய நெட்வொர்க்! 

ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களில் போதைக்காளான்கள் கிடைப்பதில்லை. கொடைக் கானல் சீதோஷ்ண நிலைக்கு, வட்டக்கானல், மன்னவனூர், வில்பட்டி, பெரும்பள்ளம் போன்ற பகுதிகளில் இயற்கையாகவே இவை வளர்கின்றன. இதனை உட்கொண்டால் tnவிலங்குகள் பறக்கக்கூடும் என்ற மாயை ஒருகாலத்தில் பழங்குடிகளிடையே இருந்தது. போதைக்காளன் "மேஜிக் காளான்' என்றழைக்கப்படுகிறது. போதையூட்டும் வேதிப் பொருளான சிலோசைப்பின் உள்ளதால், போதைக் காளான் தடை செய்யப்பட்ட கருப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பயத்தை அழிக்கக்கூடிய பக்கவிளைவை ஏற்படுத்தும் மேஜிக் காளான்கள் ஒருவரது ஆளுமையை மாற்றிவிடக் கூடியவை. ஆய்வு ஒன்று, மூளையின் நடுவில் உள்ள ஆழமான கட்டமைப்பான தாலமஸ் போன்ற பரிமாற்றப் பகுதிகளின் செயல்பாட்டை குறைப்பதாக, இதுகுறித்து விவரிக்கிறது.

 

 

incident



‘ஒருநாள் மட்டும் சாகணும்..’ என்பதுதான் போதைக்காளானைத் தேடி கொடைக்கானலுக்கு வரும் இளைஞர்களின் தீவிர சிந்தனையாக உள்ளது. ஏனென்றால், போதைக்காளானை உட்கொண்டால் குறைந்தபட்சம் 12 மணி நேரம், அதிகபட்சம் ஒருநாள் வரை, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே அறிந்திடாத மாயம்’அதீத போதையால் ஏற்படும் என்ற நம்பிக்கை. அதுதான், வலைத்தளங்கள் மூலம் கொடைக்கான லுக்கு இழுக்கிறது, குறிப்பிட்ட ஒரு வட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும் சங்கேத வார்த்தைகளைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் இயங்கிவரும் மிகப்பெரிய நெட்வொர்க்.

மேஜிக் மஷ்ரூம் போதைக்காக முதன்முத லில் கொடைக்கானலுக்கு வந்தவர்கள், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்களே. வட்டக்கானல் பகுதியில் மாதக்கணக்கில் தனியார் காட்டேஜில் தங்கியிருந்து, போதையில் திளைத்த அவர்கள்தான், இந்தத் தீய பழக்கத்துக்கு வழிகாட்டி, இளைஞர்கள் பலரையும் காளான் போதைக்கு அடி மைகள் ஆக்கியவர்கள். வனத்துறையும், காவல் துறையும் நடவடிக்கைகள் எடுக்காமல் இல்லை. காட் டேஜுகளுக்கு சீல் வைத்த சம்பவங்களும் நடக்காமல் இல்லை. ஆனால், நேர்மை யான அதிகாரிகள் இருந்த போது மட்டுமே, இத்தகைய கெடுபிடிகள் இருந்தன.


மிதமிஞ்சிய போதையில்! இருட்டு உலகத்தில்! 

போதைக்காளான் விற்பனையின் பின்னணியில், சமீபத்தில் கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே ஒரு கொலையே நடந்தது. போதைக்காளான் மட்டுமல்ல, கஞ்சா விற்பனையும் இங்கே அமோகமாக நடக்கிறது. உள்ளூர் போலீசார் இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காததால், சென்னை டீம் ஒன்று இறங்கி கஞ்சா விற்பவர்களை அதிகாலை 6 மணிக்கு அள்ளிக்கொண்டுவந்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் போட்டது. கொடைக்கானல் நகருக்கு வெகு தொலைவில், ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில், ஏக்கர் கணக்கில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அங்கெல்லாம் போதை விருந்து நடத்துகின்றனர். கடந்த ஓணம் பண்டிகையின்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், அதில் சரிபாதியாகப் பெண்கள், இங்கு வந்து உற்சாகமாகக் கலந்துகொண்டனர். அவர்களின் விலையுயர்ந்த கார்கள், என்ஃபீல்டு பைக்குகள் அங்கங்கே நிற்கும். பார்ப்பதற்கு ஏதோ சினிமா ஷூட்டிங் போலவே தெரியும். பெரிய பெரிய ஸ்பீக்கர்களைக் கட்டி நள்ளிரவில் அலறவிடுவார்கள். அந்த ஸ்பாட்டில் குடில்கள் எனப்படும் டெண்ட்டுகளும் முளைத்திருக்கும்.

 

 

incident



டெண்டுக்குள் அத்துமீறல்!

கொடைக்கானலில் நபர் ஒருவருக்கு ரூ.250 வாடகை அல்லது டெண்ட் ஒன்றுக்கு ரூ.750 வாடகை என மின் இணைப்பு எதுவும் இல்லாத குடில்களை வாடகைக்கு விடுவது வழக்கம். படுக்கை வசதியுடன் கூடிய போதை விருந்து டெண்ட் அந்த ரகமல்ல. போதையின் உச்சத்தில் உள்ள பெண்களை குடிலுக்குள் திணிப்பதற்கென்றே திட்டமிட்டு அழைத்துவரும் மனித வடிவ ‘ஓநாய்கள்’, தாங்கள் நினைத்ததை நிறைவேற்றிய பிறகே, குடிலைவிட்டு வெளியே வரும். தனக்கு என்ன நடக்கிறதென்ற பிரக்ஞையே இல்லாமல் போதையில் உள்ள பெண்களிடம் தொடர்ந்து அத்துமீறல்கள் நடக்கும். கூட்டுப் பாலியல் கொடுமைக்கு ஆளாவோம் என்பது தெரியாமலே, நட்பின் மீது நம்பிக்கை வைத்து வரும் பெண்கள் சிதைக்கப்படுகிறார்கள். குடில் கிடைக்காதவர்கள், பரந்த காட்டுப் பகுதியான திறந்தவெளியில், அங்குமிங்குமாகப் பெண்களைத் தள்ளிக்கொண்டுபோய், தங்கள் இஷ்டத்துக்கு நடந்துகொள்கின்றனர்.

பெண்களை அழைத்துவரும் ஆண்களில் ஒருசிலர், போதைக் காளானைத் தாங்கள் உட்கொள்ளாமல் ‘ஸ்டெடி’ ஆகவே இருப்பார் களாம். போதையின் உச்சகட்டத்தில் சுயநினைவு இல்லாமல் இருக்கும் பெண் நண்பர்களைத் தங்களுக்கு இரையாக்கிவிடுவார்களாம்.

மாட்டிக்கொண்ட இசையுலகப் பிரபலம்! 

முறையான அனுமதி எதுவும் பெறா மல் சட்ட மீறலான இந்தக் காரியங்களை அரங்கேற்றிவந்த கற்பகமணி, இளசுகளை இழுப்பதற்காக ஒரு காரியம் செய்தார். பிரேசிலில் இருந்து சென்னையில் நிகழ்ச்சி நடத்த வந்திருந்த இசையுலகப் பிரபலமான மாரம்பாவை, இங்கே வரவழைத்தார். போலீஸ் சுற்றிவளைத்தபோது இசை நிகழ்ச்சி நடத்திய மாரம்பாவும் மாட்டிக்கொண்டார். காக்கிகள், அவரையும் எச்சரித்து பத்திரமாக திருப்பி அனுப்பினர்.

 

music



எதிர்ப்புத் தீர்மானம்! 

போதை விருந்துக்கு ஆன்-லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை போன்ற பகுதிகளில் இருந்து ஆட்களை அழைத்துவரும் கொடைக்கானல் ஏஜெண்ட் தான், தற்போது கைதாகியிருக்கும் கற்பகமணி. தனது மனைவி தீபாவை கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது தலைவர் பதவிக்குப் போட்டியிட வைத்து பெரும் தொகை செலவழித்துள்ளார். தன் மனைவி mmதலைவராகிவிட்டால், கூக்கால் பஞ்சாயத்து பகுதியை, செக்ஸ் டூரிஸத்துக்கு ஏற்ற இடமாக சத்தமில்லாமல் ஆக்கிவிடும் திட்டம் அவருக்கு இருந்தது. கற்பகமணியின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடமளித்ததால், மக்கள் அவரது மனைவி தீபாவை தோற்கடித்துவிட்டனர்.

போதை விருந்து நடந்த இடத்தில் கிடந்த ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் இரண்டு பக்கம் துளையிட்டு, ஒரு துளை வழியாக போதைப் புகையை இழுப்ப தற்கு குழாய் மாட்டியிருந்தனர். கூக்கால் பஞ்சாயத்து தலைவர் வளர்மதியும், அந்த ஊராட்சி மன்ற உறுப்பினர்களும். ஒருமித்த குர லில் “வரும் மே 1-ஆம் தேதி, எங்கள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடங் களில் சட்டவிரோதமாக நடந்து வரும் போதை விருந்து நிகழ்ச்சிகளைத் தடுத்து நிறுத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றி, முதலமைச் சர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம்'' என்றனர். கொடைக்கானல் காவல் நிலையம் சென்றோம். அதிகாரிகள் வெளியே சென்றுவிட்டதால், இன்ஸ்பெக்டர் ராஜசேகர், டி.எஸ்.பி. ஆத்மநாதன், எஸ்.பி. சக்திவேல், திண்டுக்கல், தேனி மாவட்ட சரக டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் போன்ற காவல்துறை அதிகாரிகளை பலமுறை தொடர்பு கொண்டோம். நம் லைனில் யாரும் வரவே இல்லை. பூம்பாறை பகுதியில் உள்ள "கிளப் இந்தியா' ஏற்பாடு செய்திருந்த இதேபோன்ற நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட் டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். மற்ற கிளப்புகளும் கண்காணிக்கப்படுகிறதாம்.

 

admk



திண்டுக்கல் தொகுதி எம்.எல். ஏ.வும் தமிழக வனத்துறை அமைச்ச ருமான சீனிவாசனிடம் இது குறித்து பேசினோம். ""ஆமாமா… நக்கீரன்ல படிச்சேன். ஆனா... என்கிட்ட எந்தத் தகவலும் வரல. போதைக்காளான் அங்கேயிருக்கா? மாவட்ட வனத்துறை அதிகாரி கிட்ட விசாரிக்கிறேன். அது உண் மையா இருந்தால், நிச்சயம் நட வடிக்கை எடுக்கிறேன். இளைஞர்கள் சீரழிந்துவிடக் கூடாதல்லவா?''’’ என்றார் வேதனையுடன்.

போதை உலகத்தின் கொடூ ரங்களை மனதில் சுமந்தபடியே கொடைக்கானலில் இருந்து திரும்பியபோது நமக்கும் கண்ணைக் கட்டியது.


ராம்கி & சக்தி
படங்கள்: அண்ணல்



 

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.