கர்நாடகா இடைத்தேர்தல்களை சந்திப்பதற்காகவே காங்கிரஸின் செல்வாக்கு மிக்க தலைவரான சிவக்குமாரை கைது செய்து திஹார் சிறையில் அடைத்தது பாஜக அரசு. ஆனால், அதனால் பெரிய அளவில் பாஜகவுக்கு பலன் இருக்காது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பொருளாதா சீர்குலைவுகளை வலுவான குரலில் எதிரொலிப்பார் என்பதால் ஸ்ட்ராங்கான ஆதாரம் எதுவும் இல்லாமலேயே முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்து சிறைக் காவலை நீடித்து வருகிறது மத்திய அரசு.
கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 11 பேர், மஜத எம்எல்ஏக்கள் 4 பேர் ஆக 15 எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டால், அதை எதிர்கொள்வதற்காக சிவக்குமாரை கைது செய்தது பாஜக அரசு. கைது செய்த பிறகு அவருக்கு எதிராக 200 புகார்கள் பெறப்பட்டிருப்பதாக சிபிஐ தெரிவித்தது.
கர்நாடாகா காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவரான சிவக்குமாரை கைது செய்திருப்பதால், அந்த சாதியினர் மிகுதியாக உள்ள தொகுதிகளில் உள்ள காங்கிரஸ் முக்கிய புள்ளிகளை விலைக்கு வாங்கி பாஜக எளிதில் வெற்றிபெறலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், சிவக்குமார் கைதுக்கு எதிராக கர்நாடகாவில் ஏற்பட்ட கொந்தளிப்பு பாஜகவின் எண்ணைத்தை தவிடுபொடியாக்கியது.
சிவக்குமார் கைது, குமாரசாமி ஆட்சிக்கவிழ்ப்பு ஆகிய இரண்டுமே ஒக்கலிக்கர் வகுப்பினரை ஆத்திரமடையச் செய்துள்ளது என்கிறார்கள். சிவக்குமார் கைதுக்கு முன்னரே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிகளில் கட்சி நிர்வாகிகளின் கூட்டம் நடத்தப்பட்டு, காங்கிரஸ் வெற்றிபெற்ற 11 தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்றுவது என்று உறுதி மேற்கொள்ளப்பட்டது.
கடந்த மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் மத்தியில் ஒற்றுமையில்லாமல் போனதால் தோல்வி ஏற்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், மஜத, பாஜக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டிருந்தன. அப்போது காங்கிரஸ் பெற்ற 11 தொகுதிகளிலும், மஜத பெற்ற 4 தொகுதிகளிலும்தான் இப்போதும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
எனவே, அந்தத் தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுவது காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதை பிரச்சனை என்று காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமய்யா கூறியிருக்கிறார். சிவக்குமார் இல்லாத நிலையில், சித்தராமய்யா, ஜி.பரமேஸ்வரா, தினேஷ் குண்டுராவ் ஆகியோர்தான் இப்போது தேர்தல் பொறுப்பாளர்களாக செயல்பட வேண்டும். இதற்காக, சனிக்கிழமை ஹோஸ்கேட் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுயமரியாதை பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் ஒக்கலிகர் பகுதிகளில் பாஜக கூடுதல் வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால், இப்போது, குமாரசாமி ஆட்சிக் கவிழ்ப்பும், சிவக்குமார் கைது விவகாரமும் பாஜகவுக்கு பின்னடைவையே ஏற்படுத்தியிருப்பதாக கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி, கடந்த இரண்டு மாத ஆட்சியில் எடியூரப்பாவின் நிர்வாகம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. காபி டே அதிபர் தற்கொலை விவகாரம், பொருளாதார சீர்குலைவுகள், வெள்ள நிவாரண பணிகளில் குளறுபடிகள், சித்தராமய்யா தொடங்கிய சமூகநலத் திட்டங்களுக்கான நிதியை குறைத்தது, இந்திப் பிரச்சனை என பல்வேறு அம்சங்கள் எடியூரப்பாவுக்கு எதிராக இருக்கின்றன.
எனவே, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 15 தொகுதிகளுமே பாஜகவுக்கு சிக்கலைத்தான் ஏற்படுத்துகின்றன. காங்கிரஸ் தனது 11 தொகுதிகளைப் பெற்றால் எடியூரப்பா ஆட்சி கவிழ்வது உறுதி என்கிறார்கள். ஆனால், அதற்கு மஜதவின் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் பார்க்க வேண்டும். ஒருவேளை எடியூரப்பாவின் ஆட்சியைக் கவிழ்த்தாலும், மீண்டும் யார் தலைமையில் ஆட்சி அமைப்பது என்பதில் ஒரு சிக்கல் உருவாகும்? அப்படி ஏற்படும் சிக்கலை காங்கிரஸ் எப்படி கையாளும் என்பதும் கேள்விக்குறிதான் என்கிறார்கள்.