Skip to main content

பதவி... நீக்கம்... நியமனம்! சேலம் திமுகவில் பரபரப்பு!!

Published on 31/07/2020 | Edited on 31/07/2020

 

 

திமுகவில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத ஒருவரை முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்பட்டதற்கு, சேலம் கிழக்கு மாவட்டத்தில் உடன்பிறப்புகள் கொதித்து எழ, பத்தே நாளில், அவரை நீக்கிவிட்டு புதியவரை நியமித்திருக்கிறது அக்கட்சி தலைமை.

 


சேலம் மாவட்டத்தில் திமுக அமைப்பு ரீதியாக சேலம் மத்தி, கிழக்கு, மேற்கு என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில், பஞ்சாயத்துகளில் ஆளுங்கட்சியை வீழ்த்தி பரவலாக வெற்றி பெற்ற திமுக, 20 ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பதவிகளில் ஒன்றைக்கூட கைப்பற்ற முடியாமல் கோட்டை விட்டது.

 

குறிப்பாக, சேலம் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியத்தில் 'வாஷ் அவுட்' ஆனது திமுக. திமுக வலுவாக இருக்கும் ஓமலூர், ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி, அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி ஆகிய ஒன்றியங்களில்கூட தலைவர் பதவியை நழுவவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு, சேலம் மாவட்டத் திமுகவில் அதிரடியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

 

அதுவரை சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்த வீரபாண்டி ராஜா தடாலடியாக நீக்கப்பட்டார். அந்தப் பதவியில் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த எஸ்.ஆர்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டார். சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக முன்னாள் எம்.பி., டி.எம்.செல்வகணபதியை நியமித்தது அக்கட்சி தலைமை. 

 

இது ஒருபுறம் இருக்க, சேலம் கிழக்கு மாவட்டத்தில் சில நிர்வாகிகள் நீக்கம் மற்றும் நியமனங்களில் உள்குத்துகள் இருப்பதாக உடன்பிறப்புகளிடையே தொடர்ந்து சலசலப்புகள் கிளம்பிய வண்ணம் இருந்தன. அதன் தொடர்ச்சியாக, மல்லூர் பேரூர்க் கழக பொறுப்பாளராக கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, வி.கே.சீனிவாசன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவருடைய நியமனம், பனமரத்துப்பட்டி ஒன்றிய திமுகவில் பெரும் புகைச்சலை உருவாக்கியதுடன், ஒட்டுமொத்த திமுகவினரும் மாவட்டத் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் அளவுக்கும் சென்றது. 

 

ஏனெனில், சீனிவாசன், திமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை என்கிறார்கள். அவர், வீர வன்னியர் பேரவை என்ற சாதி அமைப்பை சேர்ந்தவர் என்றும் கூறுகின்றனர். கட்சியினர் மட்டுமின்றி சீனிவாசனே குடிபோதையில், தான் வீர வன்னியர் பேரவையைச் சேர்ந்தவர் என்று கூறி, திமுகவை விமர்சிக்கும் காணொலி பதிவு ஒன்றும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின.

 

இதையடுத்து, மல்லூர் பேரூர் திமுக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக திரண்டு வந்து, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்திடம் முறையிட்டனர். இந்த நிலையில்தான் சீனிவாசன், குடும்ப சூழ்நிலை காரணமாக பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாகவும், அவருக்கு பதிலாக மல்லூர் பேரூர்க்கழக புதிய பொறுப்பாளராக சுரேந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், வியாழக்கிழமை (ஜூலை 30) முரசொலியில் ஓர் அறிவிப்பை வெளியிட்டது, கட்சி தலைமை.

 

பத்தே நாளில் பதவி... நீக்கம்... நியமனம்... என அடுத்தடுத்து கச்சேரிகள் நடந்ததன் பின்னணி குறித்து சேலம் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசினர்.

 

surendran-dmk

 

                                                                                          சுரேந்திரன்


''சீனிவாசன் நியமிக்கப்படுவதற்கு முன்பு, மல்லூர் பேரூர்க் கழக பொறுப்பாளராக விஜயகுமார் என்பவர் இருந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவரை நாய் கடித்து விட்டதால், அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார். அதனால், அவர் கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டாமல் சற்று ஒதுங்கி இருந்தார். இது தொடர்பாக அவரிடம் கருத்துக்கூட கேட்காமல் திடீரென்று அவரை நீக்கிவிட்டு சீனிவாசன் என்பவரை கட்சி தலைமை நியமித்துள்ளது. 

 

மல்லூர் பேரூர்க்கழக முன்னாள் செயலாளர் சுரேந்திரன், கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். அதனால் அவர் பேரூர்க் கழக செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டு, தனது ஆதரவாளரான விஜயகுமாருக்கு அந்த பதவியை விட்டுக்கொடுத்தார். எனினும், கடந்த முறை சுரேந்திரனுக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்படவில்லை. 


கட்சிக்காக எப்போதும் சின்சியராக உழைக்கக் கூடியவர் மட்டுமின்றி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட எந்த ஒரு வம்புதும்புக்கும் போகாதவர். அவர், சேலம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் எம்எல்ஏவின் ஆதரவாளர் என்பதால், அவரை கிழக்கு மாவட்டத்தில் இருந்து ஓரங்கட்ட முயற்சிக்கின்றனர். அவர் பொறுப்பில் இருந்தால், அடுத்து வரும் தேர்தலில் சீட் கேட்டு, குடைச்சல் கொடுப்பார் என 'சிலர்' கருதுகின்றனர்.

 

அதனால்தான் சுரேந்திரனுக்கு 'செக்' வைக்கும் உள்நோக்கத்துடன் அவருடைய ஆதரவாளரான விஜயகுமாரை சொல்லாமல் கொள்ளாமல் மாவட்டத் தலைமை பரிந்துரை செய்து, அவரை நீக்கம் செய்ய வைத்திருக்கிறது. பனமரத்துப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் பரிந்துரையின்பேரில், மல்லூர் பேரூர்க் கழக பொறுப்பாளராக கட்சியில் உறுப்பினராகக்கூட இல்லாத சீனிவாசனை நியமிக்க வைத்துள்ளனர். தெரிந்தே கட்சி தலைமையை ஏமாற்றியுள்ளதாக கருதுகிறோம்.

 

சீனிவாசன் நியமனம் குறித்து, கழக நிர்வாகிகள் பலர் ஒரு வாரத்திற்கு முன்பு, கிழக்கு மாவட்ட பொறுப்பாளரை நேரில் சந்தித்து முறையிட்டோம். அதன்பிறகே, தற்போது சீனிவாசன் நீக்கப்பட்டு, அந்தப் பதவியில் சுரேந்திரனை புதிதாக நியமித்து தளபதி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்,'' என்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.

 

 

sivalingam-sr

                                                                               எஸ்.ஆர்.சிவலிங்கம்

 

இது தொடர்பாக சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்திடம் கேட்டபோது, ''பனமரத்துப்பட்டி ஒன்றிய திமுக பொறுப்பாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் பரிந்துரை கடிதம் கொடுத்ததன் பேரில்தான் மல்லூர் பேரூர் கழகத்திற்கு பொறுப்பாளராக சீனிவாசன் என்பவரை நியமிக்கக்கோரி கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பினேன். நானாக எதையும் செய்யவில்லை. 

 

இதுகுறித்து ஆட்சேபணைகள் வந்த உடனேயே, சீனிவாசனை நீக்கிவிட்டு புதியவரை நியமித்து விடலாம் என கட்சிக்காரர்களிடம் அப்போதே சொல்லி விட்டேன். கட்சியை வளர்ப்பதும், வரும் தேர்தலில் திமுக வேட்பாளர்களை வெற்றிபெற செய்து, தளபதியை முதல்வராக்குவதும்தான் என்னுடைய ஒரே லட்சியம்,'' என்றார். 

 

மறைந்த திமுக தலைவர் கலைஞர், கட்சி கூட்டங்களில் பேசுகையில், ''கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பால் வளர்ந்த இயக்கம், திமுக. அவர்களின் வளர்ச்சிக்கு எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் எப்போதும் உதவியாக இருக்க வேண்டும்,'' எனக்குறிப்பிடுவார். ஆனால், அண்மைக் காலங்களாக உழைக்கும் தொண்டர்களுக்கு கட்சியில் மரியாதை இல்லை என புலம்புகின்றனர் சேலம் மாவட்ட திமுகவினர். மேலும், 71 ஆண்டு கால திமுக வரலாற்றில், அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத ஒருவருக்கு முக்கிய பதவி கொடுத்திருக்கும் விந்தையும் இப்போதுதான் நடந்திருக்கிறது என்றும் குமுறுகிறார்கள் கழக உடன்பிறப்புகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.