Skip to main content

நீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்!

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

கடந்த ஆண்டு ப்ராக்ரஸ் கார்டில் பெயில்மார்க் வாங்கிய வடகிழக்குப் பருவமழை, இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் டிஸ்டிங்ஷனில் பாஸானதோடு, போதும் போதுமென சொல்லுமளவுக்கு கொட்டிக்கொண்டிருக்கிறது. இவ்வாண்டு தென்கிழக்குப் பருவமழை முதலே தமிழகம் முழுவதும் சுமாரான மழைப்பொழிவு இருந்த நிலையில், கடந்த நவம்பர் 28 முதல் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியது. வட- தென் தமிழகம் என பேதமில்லாமல் அடித்துக் கொட்டிய மழையில் இதுவரையிலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

incident



வங்கக் கடலில் உருவான மேலடுக்குச் சுழற்சி பருவ மழையாக உருவெடுத்து தமிழகமெங்கும் தொடர் மழைக்குக் காரணமாகியுள்ளது. தமிழகத்தில் மழைக்காலத்தில் 44 செ.மீ. மழைப்பொழிவு காணப்படுவது இயல்பு என்ற நிலையில் கடந்த மூன்று தினங்களில் மட்டும் 39 செ.மீ. மழை பொழிந்துள்ளது. எளிதில் வெள்ள, புயல் தாக்குதலுக்கு இலக்காகக்கூடிய கடலூர் மாவட்டம் இம்முறையும் தப்பவில்லை. கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி பகுதிகளில் கனமழை பெய்ததில், 10,000 ஏக்கர் நிலப்பரப்பிலான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கிட்டத்தட்ட 10 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட, அவர்கள் பத்திரமாக அங்கிருந்து அகற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
 

incident



மணிமுத்தாறில் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கொக்கிரகுளத்தில் மூன்று வீடுகள் இடிந்துவிழுந்தன. கயத்தாறு, ஆறுமுகநேரியிலும் மழையில் வீடுகள் இடிந்துவிழுந்துள்ளன. திருநெல்வேலி பேருந்து நிலையம் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஒரே நாளில் 19 மி.மீ. மழைபெய்ததால், விஜய அச்சம்பாடு கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் பாதுகாப்பாக வேறிடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
 

incident



மயிலாடுதுறை வரகடை கிராமத்தின் அருகேயுள்ள பழவாற்றில் வெள்ளம் வந்ததால் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மாப்படுகை கிராமத்தில் தண்ணீர் வெளியேறும் வடிகாலை, அரசியல் பிரமுகர்கள் ஆக்கிரமித்துள்ளதால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கெதிராக பொதுமக்கள் சாலைமறியலில் ஈடு பட்டுள்ளனர். மன்னம்பந்தலருகே ஆற்றில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு சில கிராமங்கள் நீரில் மூழ்கின. திருவாரூர் மாவட்டத்தில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

 

incident



ராமேசுவரத்தில் வடகிழக்குப் பருவமழை தன் தாராளத்தைக் காட்டியுள்ளது. ஒரேநாளில் 112 மி.மீ. மழைபெய்ததில் பல மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன. மீனவர்கள் மழை காரணமாக மீன்பிடிக்கச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைச் சேர்ந்த 200 பேர் மீட்கப்பட்டு அரசுப் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

incident



நாங்குநேரி அருகே குசவன்குளத்தைச் சேர்ந்த கந்தசாமி மழையால் வீடு இடிந்தும், புதுக்கோட்டை கந்தசாமி மழையில் கால்வாய் எனத் தெரியாமல் தன் டூவீலரை விட்டதிலும் உயிரிழந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் சேதி கிராமத்தில் துரைக்கண்ணு என்பவர் மழையாலும், சென்னை அம்பத்தூரில் வெள்ளத்தால் மழைநீர்க் கால்வாயில் விழுந்து ஷேக்அலி என்பவரும் உயிரிழந்துள்ளனர். திரூவாரூர் மாவட்டம் பரவக்கோட்டையில் ரவிச்சந்திரன் என்பவரும், அரியலூர் மாவட்டத்தில் பூங்கோதை என்பவரும் மழையால் வீடிடிந்து பலியாகியுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் மருத்துவமனையில் அழையா விருந்தாளியாக நுழைந்தது மழைவெள்ளம். அங்கு சிகிச்சை பெற்றவர்களை தீயணைப்பு வீரர்கள் துணையுடன் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றையும் விட பேரவலமாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் கிராமம் கண்ணப்பன் நகரில், விடாமல் பெய்த மழையால் அதிகாலை 5 மணியளவில் சக்கரவர்த்தி துகில் மாளிகை உரிமையாளர் வீட்டு 20 அடி தடுப்புச் சுவர் சரிய, அதையொட்டி இருந்த நான்கு வீடுகள் அப்பளம்போல் நொறுங்கிச் சரிந்தன. அதிகாலை என்பதால் அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் தூக்கத்திலேயே இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.


தீயணைப்புத் துறை வந்து இடிபாடுகளை அகற்ற அகற்ற உயிர்ப்பலி 5, 9 என அதிகரித்து 17-ல் வந்து நின்றது. ஒபியம்மாள், மங்கம்மாள், அருக்காணி, சின்னம்மாள் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள், 10 பெண்கள், ஐந்து ஆண்கள் மழைக்குப் பலியாகியிருக்கின்றனர். இது வெறும் மழைப்பலி மட்டுமல்ல… இதன் பின்னணியில் சாதியப் பின் புலமும் இருப்பதாகக் கூறுகின்றனர் அப்பகுதியினர்.

"சார்... இந்த வீடுகள் இடியறதுக்குக் காரணமே சக்கர வர்த்தி துகில் மாளிகை தான். இந்த இடத் துல 20 அடிக்கு காம்பவுண்டு சுவர் எதுக்கு கட்டறீங்கன்னு நாங்க கேட்ட போதே... "நீங்க எல்லாம் எங்ககூட பேசவே கூடாது. தீண்டத்தகாத ஆட்கள். இது எங்களுக்குச் சொந்தமான இடம். நாங்க எப்படி வேணாலும் கட்டுவோம். யாரும் தலையிடக்கூடாது'ன்னு மெரட்டனாங்க. மழைபெய்யும்போதெல்லாம் இந்த தடுப்புச் சுவரால இந்தப் பகுதில தண்ணி தேங்குறதும்… வீட்டுச் சுவர்கள் மழையுல ஊறுறதும் வழக்கம்தான். இன்னைக்கு பலி விழுந்துடுச்சு'' என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த தண்டபாணி.


17 பேர் இறப்புக்குக் காரணமான துணிக் கடை நிர்வாகிகளை கைதுசெய்ய வேண்டுமென மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி முன்பு அப்பகுதி மக்கள் சாலைமறியல் செய்ய ஆரம்பித்து விட்டனர். முதல்வர் எடப்பாடி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் நான்கு லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்திருக்கிறார். சென்னையில் பெய்த தொடர் மழையால் சென்னைக்கு நீர் வழங்கும் செம்பரம் பாக்கம், பூண்டி, சோழவரம், புழல் ஏரிகள் விரைவாக நிறைந்துவருகின்றன.

2015-ல் இதே போல வடகிழக்குப் பருவமழையின்போது, மழைவெள்ளமும் நிர்வாகக் குளறுபடியும் சேர்ந்து சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கக் காரணமாயின. மீட்பு பணிக்கு தமிழகமே கைகொடுக்க வேண்டிய நிலை உருவானது. தனியார் நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியது விமர்சனத்துக்கு ஆளானது. அதை நினைவில் கொண்டு முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால், ஜெ., செய்யத் தவறியதை எடப்பாடி செய்தார் எனும் பேர் கிடைத்திருக்கும். ஆனால் முதல்வர் கோட்டைவிட்டுவிட்டார்.

2015-ல் பட்ட பின்பாவது மழைநீர் வடிகால்கள் உரிய பராமரிப்புக்கு உட் படுத்தப்பட்டு, மழைக்காலத்துக்கு மாநில அரசு ஆயத்தமாக இருக்குமென எதிர்பார்க்கப் பட்ட நிலையில் நவம்பர் 30, டிசம்பர் 1 ஆம் தேதியன்று பெய்த தொடர்மழையில் சென்னையில் கிட்டத்தட்ட 400 இடங்களில் அடைப்பு ஏற்பட்டு, உடனடியாக நீர் கழிவோடைகளில் ஓடிச்செல்ல முடியாத நிலை உருவானது. தாம்பரம், முடிச்சூர், பெருங் களத்தூர் பகுதிகளில் பெய்த பெருமழையால் சாலைகளில் வெள்ளநீர் ஓட, போக்குவரத்து தடைப்பட்டு தாமதமானது. மாநகராட்சியின் மழைநீர் சேத தடுப்பு நடவடிக்கையின் லட்சணத்தை, இம்மழை திரைவிலக்கிக் காட்டியுள்ளது. பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததோடு, மழைநீரும் தேங்கியதால் போக்குவரத்து நெருக்கடியும், இரு சக்கர ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதும் அதிகளவில் காணப்பட்டதாக புகார் எழுந்தது.

மழைப்பொழிவின் தீவிரத்தையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி, மழைச் சேத பாதிப்புகளைத் தணிக்கும் முயற்சிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளாகவே ஆளும் கட்சி உள்ளாட்சித் தேர்தலை ஒத்திப்போட்டு வந்த நிலையில், உச்சநீதிமன்ற கிடுக்கிப்பிடியை அடுத்து கிராம, ஊராட்சி அளவில் மட்டும் டிசம்பர், 27, 30 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததன் பாதகத்தை, வடகிழக்குப் பருவமழை தோலுரித்துக் காட்டியுள்ளதாகவே மழைவெள்ள சேதங்களையும், உயிரிழப்புகளையும் கருதவேண்டும். தமிழகத்தில் கனமழை நீடிக்குமென வானிலை அறிவிப்புகள் எச்சரிக்கும் நிலையில் மேட்டுப்பாளையம் நடூர் போன்ற உயிர்ப்பலிகள் நடக்காமல் தவிர்க்கவேண்டியது அரசின் கடமையாகும்.

சில மாதங்களுக்கு முன் போதிய மழையில்லாத நிலையில், மழைவேண்டி யாகம் நடத்த உத்தரவிட்ட தமிழக அரசு, மழையை நிறுத்த தவளைகளுக்கு விவாகரத்து என இறங்கவில்லையே என சந்தோஷப்பட வேண்டும் என்கிறார்கள் அரசை விமர்சிப்பவர்கள். கோடை வந்தால் குடிநீருக்குத் தவிப்பதும், மழைக்காலத்தில் வெள்ளப் பாதிப்புக்கு அஞ்சுவதும் நிர்வாக மேலாண்மை சீரழிந்துவரும் தமிழகத்தில் வாடிக்கையாக மாறத் தொடங்கியிருக்கிறது.

-க.சுப்பிரமணியன், பரமசிவன், செல்வகுமார்.