Skip to main content

அரிதான அந்த நிகழ்வை அமெரிக்க மக்கள் நடத்திக் காட்டுவார்களா?

Published on 05/11/2020 | Edited on 05/11/2020

 

trump

 

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ஆம் தேதி நடந்து முடிந்தது. அதன்பின் வாக்கு எண்ணிக்கை, அன்றே தொடங்கப்பட்ட நிலையில், தற்போதுவரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

 

கீழவை மற்றும் மேலவை என இரண்டு அவைகளையும் சேர்த்து மொத்தம் 538 இடங்களில், 270 பெரும்பான்மை பெறுபவரே அமெரிக்காவை அடுத்த நான்கு வருடம் வழிநடத்தப்போகும் அதிபராவார். உலக வல்லரசு நாடுகளில் முதன்மையாக இருக்கும் அமெரிக்காவுக்கு அதிபராவது என்பது லேசுபட்ட காரியம் இல்லை. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல லட்சக்கணக்கானோர் வாக்குச்சாவடிக்கு நேராக வந்து வாக்கு செலுத்தாமல், இந்தமுறை தபால் முறையில் வாக்கு செலுத்தியுள்ளனர். இதனால்தான் வாக்கு எண்ணிக்கை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. பல மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவின்போது இரண்டு வேட்பாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சி கொடுக்கும் அளவிற்கு விறுவிறுப்பான திரைக்கதையைப் போலச் சென்றுகொண்டிருக்கிறது, ஒரு வல்லரசு நாட்டின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.

 

தற்போதைய சூழலில் அதிகப்படியான 'எலக்டோரல் காலேஜ்' எண்ணிக்கையில் முன்னிலை வகிப்பவர், ஜோ பைடன். இவருக்கே அதிபராகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக, அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், வாக்கு எண்ணிக்கை அனைத்தும் முடிவடைந்து பெரும்பான்மையை யார் பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்தே பார்க்க வேண்டும். தற்போது அமெரிக்காவின் அதிபராக இருப்பவர் டொனால்ட் ட்ரம்ப். 

 

அமெரிக்க அரசியலில் ஒரு எழுதப்படாத வழக்கம் உள்ளது. அமெரிக்க அதிபராக ஒருவர் இருமுறை பதவி வகிக்கலாம் அதற்கு மேல் பதவி வகிக்க முடியாது. அந்த வகையில் போட்டியிட்டு முதல் முறை அதிபராக பதவி வகிப்பவரே, அடுத்த தேர்தலிலும் வெற்றிபெற்று அதிபராவார். இப்படிப்பட்ட ஒரு எழுதப்படாத வழக்கம் அமெரிக்காவில் இருக்கிறது. 1788ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை நடைபெற்று வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தொடர்ச்சியாக இருமுறை அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றவர்களே அதிகம். கடந்த நூறு ஆண்டுகளில் இதுவரை நான்கு அதிபர்கள்தான் மறு தேர்தலில் வெற்றிபெறாமல் தோல்வியடைந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை தற்போதைய நிலவரப்படி முன்னிலை வகிக்கும் ஜோ பைடன் வெற்றிபெற்றால், கடந்த நூறு ஆண்டுகளில் அதிபராக இருந்து போட்டியிட்ட மறுதேர்தலில் வெற்றிபெறாதவர்கள் பட்டியலில், ட்ரம்பும் ஐந்தாவது நபராக இணைந்துகொள்வார். கடந்த 30 ஆண்டுகளில் ட்ரம்ப்தான் முதல் அதிபர். 

 

cnc

 

கடைசியாக 1992ஆம் ஆண்டு ரிபப்பிளிக்கன் கட்சி சார்பாக போட்டியிட்ட ஜார்ஜ் HW  புஷ், அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதற்கு முந்தைய தேர்தலில் வெற்றிபெற்றிருந்த புஷ், இரண்டாவது முறையாக அதிபராகும் வாய்ப்பைத் தவறவிட்டார். 1980ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக டெமாக்ரடிக் கட்சி சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜிம்மி கார்டர், மோசமாகத் தோல்வியடைந்தார். இதற்கு முந்தைய 1976ஆம் ஆண்டு தேர்தலில், ஜெரால்ட் ஃபோர்ட் இரண்டாவது முறையாக தொடர்ந்து அதிபராகும் வாய்ப்பைத் தவறவிட்டார். 1932ஆம் ஆண்டு ஃப்ராங்க்ளின் டி ரூஸ்வெல்ட், ஹெர்பர்ட் ஹூவர் என்பவரின் இரண்டாவது முறை அதிபர் வாய்ப்பை தவுடுபொடி ஆக்கினார். 

 

இப்படி கடந்த நூறு ஆண்டுகளில் நான்கே முறை அல்லது இத்தனை வருட அதிபர் தேர்தல் வரலாற்றில் அதிகம் நடைபெறாத ஒரு சம்பவத்தை, தற்போது நடைபெறும் அதிபர் தேர்தலின் மூலம் அமெரிக்க மக்கள் நடத்திக் காட்டுவார்களா?