Skip to main content

விஜயகாந்திற்குப் பத்மபூஷன் - எம்.ஜி.ஆர் பாடலை பாடி சத்யராஜ் வாழ்த்து

Published on 09/05/2024 | Edited on 09/05/2024
sathyaraj and prabhu wishes for vijayakanth padma bhushan

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்கு, மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, எனப் பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களைப் பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 22ஆம் தேதி, நடந்த நிகழ்வில், 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது. ஆனால் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று (09.05.2024) விஜயகாந்துக்கு விருது வழங்கப்படவுள்ளது. அவர் சார்பில் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் பெறுகிறார். 

sathyaraj and prabhu wishes for vijayakanth padma bhushan

இதனிடையே, விஜயகாந்துக்கு பத்பபூஷன் விருது வழங்குவது தொடர்பாக சத்யராஜ் மற்றும் பிரபு, விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் அவரது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சத்யராஜ் கூறுகையில், “என் அன்பு நண்பர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது கிடைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி. அவரது குடும்பத்தாருக்கும், சொந்தங்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். எனக்கு மிகவும் பிடித்தமான எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளை சொல்லி வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்றார். 

பிரபு பேசுகையில், “என் அன்பு சகோதரர், இனிய நண்பர் கேப்டனுக்கு விருது. பத்பபூஷன் விருதை எங்க கேப்டனுக்கு கொடுக்கிறதுல எங்க திரையுலகமே ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுகிறோம். எங்க அன்னை இல்லம் சார்பாக அவரது குடும்பத்தாருக்கும் லட்சக்கணக்கான புரட்சி கலைஞரோட விசிறிகளுக்கும், என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்.

சார்ந்த செய்திகள்