Skip to main content

ஆர்.ஜே.டியிடம் இருந்து பாடம் கற்குமா தி.மு.க? - களம் சொல்லும் உண்மை இதுதான்!

Published on 16/11/2020 | Edited on 16/11/2020

 

gh

 

கடந்த 10ம் தேதி பீகாரில் வெளியான தேர்தல் முடிவுகளால், இரண்டு கட்சிகள் இந்தியாவில் அன்று தூக்கத்தை தொலைத்து என்றால், அதில் இருவேறு மாற்றுக்கருத்துக்கு இடமிருக்க வாய்ப்பில்லை. ஒன்று, முதல்வர் நாற்காலியை நெருங்கிப் போய் அதனைத் தொட முடியாமல் போன ஆர்.ஜே.டி. மற்றொன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இதே போன்றதொரு நிலையை சந்தித்த தி.மு.க.

 

எப்படியாவது அள்ளிக்கொடுத்தாவது ஆட்சியில் அமர வேண்டும் என்ற எண்ணத்தில் தேஜஸ்வி யாதவ் காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்களை வாரிக்கொடுத்ததால், தற்போது ஆர்.ஜே.டி கூப்பில் உட்கார வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, பாதி இடங்களில் ஜெயித்திருந்தால் கூட இன்னேரம் தேஜஸ்வி யாதவ் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பார். 70 இடங்களில் வெறும் 19 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. வெற்றி சதவீதம் 28க்கும் கீழாக உள்ளது. காங்கிரஸ் கூட்டணி இல்லாமல், தேர்தலைச் சந்திருந்தால் கூட, எங்கள் கட்சி ஆட்சியில் அமர்ந்திருக்கும் என்று இன்றைக்கு அக்கட்சியின் தலைவர்கள் புலம்பத் தொடங்கி விட்டார்கள். எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்த கட்சி, கூட்டணிக் கட்சி மீது குறைசொல்வது வாடிக்கையான ஒன்றாக இதனை எடுத்துக்கொள்ள முடியாது. 

 

ஏனென்றால், பீகார் மக்கள் 75 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொடுத்து ஆர்.ஜே.டியை தனிப்பட்ட பெரிய கட்சியாக உருவாக்கி உள்ளனர். ஆட்சி அமைக்கும் ஜனதா தளமோ, அல்லது பா.ஜ.கவோ ஆர்.ஜே.டியை விட தனிப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைவாகவே பெற்றுள்ளன. ஆனால், பா.ஜ.கவின் புத்திசாலி தனம் என்று சொல்வதைக் காட்டினாலும் காங்கிரஸின் அலட்சியத்தால், இன்றைக்கு ஆர்.ஜே.டியின் வெற்றிவாய்ப்பு கைநழுவிப் போயுள்ளது. ஆனால், அசதுத்தீன் ஒவைசி பிரித்த ஓட்டுக்கள் தான், இந்தத் தோல்விக்குக் காரணம் என்று காங்கிரஸ் தரப்பில் சொல்வதோடு, ஓவைசியை பி.ஜே.பி-யின் பி டீம் என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

 

hj

 

அப்படி என்றால் ஜனதா தளத்துக்கு வர வேண்டிய ஓட்டுகளைப் பிரித்த சிராக் பாஸ்வான் யாருடைய பி டீம் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. 6 லட்சம் வாக்குகள் பெற்ற ஓவைசி பா.ஜ.க பி டீம் என்றால், 23 லட்சம் வாக்குகள் பெற்ற சிராக், மகா கூட்டணியின் பி டீமா என்ற கேள்வியை எதிர்தரப்பும் எழுப்பும். எனவே பி டீம் என்பதில் உண்மை மூடி மறைக்கப்படுகிறது. ஜனதா தளத்தின் தோல்விக்கு சிராக்கும், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு அக்கட்சியின் அக்கறையற்ற தன்மையே காரணம் என்றால், அது மிகையல்ல.

 

கட்சித் தலைவரை கைது செய்தால் அமைதியான முறையில் போராட்டம் கூட செய்ய முன்வராத தலைவர்களை வைத்துக்கொண்டு தேர்தலில் வெற்றியை எதிர்பார்ப்பது என்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதை விடவும் மிக அதிகம் என்பதே உண்மை! எனவே பீகாரில் ஆர்.ஜே.டி தன்னை தனியாக வளர்த்துக்கொள்ளும் முயற்சியிலும், காங்கிரஸ் கட்சி இனியாவது தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ளும் முயற்சியிலும் ஈடுபட வேண்டும் என்பதே இந்தத் தேர்தல் முடிவு சொல்லும் உண்மை.

 

ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நடக்கும் ஒரு மாநிலத் தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் என்ன பாதிப்பை காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்திவிடப் போகிறது என்று அரசியலின் ஆழத்தை அறியாதவர்கள் நினைக்கலாம். ஆனால், தமிழகத்தில் பீகார் தேர்தல் முடிவைப் போல் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நடந்து முடிந்துள்ளது. 2016ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 41 இடங்களில் களம் இறங்கிய காங்கிரஸ் 8 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. வெற்றி சதவீதம் என்பது 20க்கும் கீழே! பலருக்கு தற்போது பீகார் தேர்தல் முடிவு நினைவில் வந்து நிழலாடும். கிட்டதட்ட 89 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று தமிழ்நாட்டில் அதற்கு முன்பு எதிர்க்கட்சி ஒன்று இதுவரை பெற்றிராத சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றும் நாற்காலியைப் பிடிப்பதில் தி.மு.க கோட்டை விட, மிக முக்கியக் காரணம் சாட்சாத் காங்கிரஸ் என்ற பேரியக்கம்தான்!  

 

hj

 

தி.மு.க பெற்றதைப் போல போட்டியிட்ட இடங்களில், பாதி இடங்களை வெற்றி பெற்றிருந்தால் கூட அதிமுகவுக்கு திமுக கடும் நெருக்கடி கொடுத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் பெயரையே வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாளுக்கு முன்தினம் அறிவிக்கும் போது, தேர்தல் வெற்றியை எப்படி எதிரப்பார்ப்பது என்கிறார்கள் பழைய கதர்சட்டையினர். காங்கிரஸ் தன்னை மெருகேற்றாவிட்டாலும், எரிய தயாராக இருந்த தி.மு.க, ஆர்.ஜே.டி போன்ற தீப்பந்தங்களை தண்ணீர் ஊற்றி அணைத்த பெருமை அக்கட்சியையே சாரும்.

 

cnc

 

எனவே இன்றைக்கு தேஜஸ்விக்காக அக்கட்சித் தொண்டர்கள் அடையும் வருத்தத்தை, தி.மு.க தொண்டர்கள் மீண்டும் ஒரு முறை அடையாமல் பார்த்துக்கொள்ளும் மிக முக்கியப் பொறுப்பு தி.மு.க தலைமைக்கு அதிகம் உண்டு. ஏனென்றால் சமீப காலமாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வெற்றி வரலாறு என்பது மாநில கட்சிகளுக்குக் கோளாறாகவே தொடர்ந்து இருந்து வருகிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!