கடந்த சில வாரத்திற்கு முன்னர் கரூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் ''கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க தான் ஜெயிக்கும், அதுவும் ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும், இதற்கு பந்தயம் கட்ட தயாரா? கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுகவினர் ரெடியா?'' என்று கரூர் மாவட்ட திமுகவினர் ஒரு வீடியோவை வெளியிட்டு அதிமுக வட்டாரத்தினை அலற விட்டனர்.
பதிலுக்கு ''நாங்கள் ரெடி'' என்று அதிமுக வட்டாரத்திலும் சிலர் வீடியோ பதிவு செய்து வைரலாக வெளியிட்டாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதற்கு அடுத்ததாக போஸ்டர் யுத்தம், சுவர் விளம்பரம் என்று இரண்டு கட்சியினரும் மாறி மாறி கரூரில் அரசியல் நடத்த அது சமீபத்தில் திமுக தரப்பில் ஒரு கொலையில் முடியும் அளவுக்கு போனது.
நாம் இது சம்பந்தமாக மேலும் விசாரித்தபோது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்பு அதிமுகவில் இருந்தபோது தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்தார். சசிகலா ரூட் எடுத்து அவர் பண்ணிய அட்ராசிட்டி, மூத்த அமைச்சர்களையே முகம் சுழிக்க வைத்தது.
இந்த நிலையில் தான் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் மூத்த அமைச்சர்கள் சிலர் செந்தில்பாலாஜியின் தனி ஆவர்த்தனத்தைப் பற்றி சொல்ல, செந்தில் பாலாஜிக்கு செக் வைத்து விஜய்பாஸ்கரை களம் இறக்கினார் ஜெயலலிதா. சரி இவராவது ஒழுங்கா இருப்பார் என்றால் அது தான் இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவரும் தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்து விட்டார்.
சுவர் விளம்பரங்களில் எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்தியே, அதாவது காலிங்கராயரே, வல்லவனே என்று பல வசனங்களை போட்டு விளம்பரப் படுத்துகிறார். அதேபோல் தான் வைத்திருக்கும் ஒரு அறக்கட்டளை பெயரில் நல்லத்திட்ட உதவிகள் வழங்கி அந்த அறக்கட்டளையை முன்னிறுத்தி செயல்படுகிறாரே தவிர கட்சியை முன்னேற்ற எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் கரூர் மாவட்ட அதிமுகவினரே இவர் மாவட்ட செயலாளராக இருந்தால் நான்கு தொகுதியையும் இழப்பதை தவிர வேறு வழியில்லை என்று தலைமைக்கு புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.
அதேபோல் அம்மாவால் ஆசிர்வதிக்கப்பட்ட முன்னாள் இளம்பெண்கள் பாசறை மாநில துணை தலைவராக இருந்த செந்தில்நாதன், அரவக்குறிச்சி தொகுதியில் நின்று முன்பு செந்தில்பாலாஜியுடன் தோல்வியுற்றார். இந்த தடவை எப்படியும் அவர் அரவக்குறிச்சி தொகுதிக்கு சீட் கேட்பார். அப்படி கேட்டு ஜெயித்து விட்டால் எப்படியும் அமைச்சர் பதவி வாங்கிவிடுவார் என்று நினைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமையில் இல்லாததும் பொல்லாததுமாக சொல்லி தற்சமயம் செந்தில்நாதன் வகித்து வந்த இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பதவியை பிடுங்க வைத்து விட்டார். இதே போல் தனக்கு எதிராக இருக்கும் பலரையும் பழிவாங்க காத்திருக்கிறார் என்கின்றனர் அம்மாவட்ட அதிமுகவினர்.
இப்படியே அமைச்சர் விஜயபாஸ்கர் செயல்பட்டால் கரூர் அமராவதி ஆற்றிலேயே அதிமுகவை புதைத்து விட்டு அவருடைய அறக்கட்டளையை அமோக வளர்ப்பார் என்ற தகவலே கரூர் மாவட்ட அதிமுகவினர் மத்தியில் ஒரே பேச்சாக உள்ளது என்கின்றனர் அதிமுகவினர்.
மாவட்டத்தில் அதிமுகவில் நடக்கும் விஷயங்கள் குறித்து பரமத்தி ஒன்றியம் தென்னிலை கிளைச் செயலாளர் குழந்தைவேல் நம்மிடம், செந்தில்பாலாஜி இருந்தபோதும் கட்சிக்குள் அடித்துக்கொண்டார்கள். விஜயபாஸ்கர் இப்போது இருக்கும்போதும் அடித்துக்கொள்கிறார்கள். நாங்கள் ஓட்டு இவர்களுக்காக போடவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்காக போடுகிறோம். இவர்களை அடக்கும் ஆளுமை உள்ளவர்கள் வந்தால்தான் இந்தப் பிரச்சனைகள் தீரும் என்றார்.