Skip to main content

அதெல்லாம் முடியாது இப்பவே எங்களோட காரில் வாங்க... விஜய் வீட்டின் ரெய்ட் பின்னணி வெளிவராத தகவல்!

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு ஆதரவளித்த தீபிகா படுகோனை பாகிஸ்தான் தீவிரவாதி என்று பா.ஜ.க. விமர்சித்தது. அதன்பின், பாலிவுட் நட்சத்திரங்கள் யாரும் மாணவர் ஏரியாவுக்கு வரவில்லை.

ஆனால், தென்மாநிலங்களில் -குறிப்பாக தமிழகத்தில் பா.ஜ.க. எதிர்ப்புணர்வும் கசப்புணர்வும் வேரூன்றிப் போயிருப்பதால், அரசியல்வாதிகளை மிரட்டுவதற்கு அமலாக்கத்துறை, சி.பி.ஐ., சினிமா நட்சத்திரங்களை மிரட்டுவதற்கு வருமானவரித்துறை என வகை பிரித்து வைத்திருக்கிறது மோடி சர்க்கார்.

 

vijay



இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து எதுவுமே பேசாத நடிகர் விஜய்யின் சென்னை சாலிகிராமம் வீட்டிலும் பனையூரில் உள்ள பண்ணை வீட்டிலும் பிப்.05ஆம் தேதி காலை ஐ.டி.ரெய்டை ஆரம்பித்து 06—ஆம் தேதி மாலை வரை கிட்டத்தட்ட 48 மணி நேரம் அலறவிட்டுவிட்டார்கள். விஜய் எதுவும் பேசாவிட்டாலும் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த ஜனவரி மாதமே இப்படி ஏதாவது நடக்கும் என்பதை எதிர்பார்த்திருந்தார் என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர்.

 

vijay



ஜன.20—ஆம் தேதி மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி இன்பராஜின் மகள் திருமணம் மதுரையில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திர சேகரும் அம்மா ஷோபாவும் 19—ஆம் தேதி மாலையே மதுரை வந்துவிட்டனர்.

 

vijay

எஸ்.ஏ.சி. வருவதைத் தெரிந்து கொண்டு தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மதுரை வந்துவிட்டனர். பிரபல ஓட்டல் ஒன்றின் தனியறையில் அவர்களைச் சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர், "விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார், ஆனால் இப்போது சூழல் சரியில்லை. மாநில அரசும் மத்திய அரசும் அவருக்கு எதிராக இருக்கு. விஜய் அரசியலுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக பயங்கரமாக நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.


இந்த நேரத்தில் நான் ஏதாவது பேசப்போக, அது விஜய்க்கு சிக்கலாகிவிடும். அதனால் எல்லோரும் அமைதியாக இருங்கள், சீக்கிரம் நல்ல சேதி சொல்வார் விஜய்'' என ஓப்பனாக பேசியுள்ளார் எஸ்.ஏ.சி.

விஜய் அரசியலுக்கு வந்தால், அது பா.ஜ.க.வுக்கு எதிரான நிலைப்பாடாக இருக்கக் கூடாது என நினைக்கிறது டெல்லி. அதன் எதிரொலிதான் ஐ.டி. ரெய்டு என்கிறார்கள். கடந்த 05—ஆம் தேதி காலை சாலிகிராமத்தில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு (ஐ.டி. டிபார்ட்மெண்டின் ரெக்கார்டுகளின்படி இதுதான் விஜய் வீட்டு முகவரி ) ஐந்துக்கும் மேற்பட்ட ஐ.டி.அதிகாரிகள் சென்று விபரத்தைக் கூறியுள்ளனர். அப்போது வீட்டிலிருந்த ஊழியர்கள், "சார் எப்பவாவது தான் இந்த வீட்டிற்கு வருவார். பெரும்பாலும் பனையூரில் இருக்கும் பண்ணை வீட்டில்தான் தங்குவார். ஆனால் இப்ப "மாஸ்டர்' ஷூட்டிங்கிற்காக நெய்வேலியில் இருக்கார்'' என்ற தகவலைச் சொல்லியுள்ளனர்.

இருந்தாலும் வீட்டை மூன்று மணி நேரம் சலித்துவிட்டு, தங்களது சினிமா சோர்ஸ்கள் மூலமே ஷூட்டிங் லொக்கேஷனை தெரிந்து கொண்டு, வண்டியை நேராக நெய்வேலிக்கு விட்டுள்ளனர். தாங்கள் வந்த விபரத்தையும் நோக்கத்தையும் புரொடக்ஷன் மேனேஜர் மூலம் விஜய்க்கு பாஸ் பண்ணியுள்ளனர்.

"இன்னும் ஒரு மணி நேரத்தில் ஷூட்டிங் முடிஞ்சுரும், அதன் பின் நானே கிளம்பி வந்துடுறேன்'' என விஜய் சொல்லியும் "அதெல்லாம் முடியாது இப்பவே எங்களோட காரில் வாங்க'' என வலுக்கட்டாயமாக அழைத்து, காரின் பின்சீட்டில் நடுவில் விஜய், இருபக்கமும் அதிகாரிகள் என நெருக்கியடித்து உட்கார்ந்து பனையூருக்கு அழைத்து வந்துள்ளனர். விடிய விடிய சோதனை நடத்தி, விடிந்த பின்னும் சோதனை நடத்தி, 06—ஆம் தேதி மாலை மேலும் 4 ஐ.டி. அதி காரிகள் கூடுதலாக சேர்ந்து கொண்டு, விஜய்யை ரொம்பவே கொதிக்க வைத்துவிட்டார்கள்.
 

மோடி சர்க்காரின் ரெய்டு பீதி இப்போது இப்படி என்றால் இங்கிருக்கும் எடப்பாடி சர்க்காரின் இம்சை சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டது. "மாஸ்டர்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் சில லொக்கேஷன்களை செலக்ட் பண்ணி, அதிகாரிகள் மற்றும் காவல்துறை பெர்மிஷனுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

முதலில் ஓ.கே. சொன்ன அதிகாரிகள் தரப்பு, ஷூட்டிங்கிற்கு முதல் நாள் நோ சொல்லிவிட்டதாம். அடுத்தடுத்து மூன்று லொக்கேஷன்களுக்கும் இதே மாதிரி நடந்து ஷூட்டிங் கேன்சலானதால் எரிச்சலாகிவிட்டாராம் விஜய். ஒரு வழியாக பூந்தமல்லியில் உள்ள பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் ஷூட்டிங்கை நடத்த கிளம்பியிருக்கிறார்கள். அப்போதும் விடாத அதிகாரிகள் தரப்பு, "தயாரிப்பாளர் வெயிட் பார்ட்டி, பெரிய ஹீரோ அதனால ஷூட்டிங் நடத்த மூணு மடங்கு பில் போடுங்க'' என ஊதிவிட்டுள்ளனர். வேறு வழியே இல்லாமல் அதையும் கொடுத்து ஷூட்டிங் நடத்தியுள்ளனர்.
 

"இன்னொரு மெகா ப்ளானும் இருக்கிறது'' என நம்மிடம் பேச ஆரம்பித்தார் பிரபல தயாரிப்பாளர் ஒருவர். “கடந்த ஜனவரி 22-24 தேதியிட்ட உங்க நக்கீரனில் ‘மாஸ்டர் ப்ளான்! சினிமா வினியோகத்தில் சி.எம்.ஆட்கள் அதிரடி'ன்னு ஒரு நியூஸ் போட்டிருந்தீங்க. அதில் "மாஸ்டர்' படத்தின் திருச்சி,—தஞ்சை ஏரியாக்களின் வினியோக உரிமையை வாங்கியிருந்த ஆர்.விஸ்வநாதனின் மருமகனை மிரட்டி வேற ஒரு குரூப் கைப்பத்திட்டதா எழுதியிருந்தீங்க. இப்ப என்னடான்னா ‘"மாஸ்டர்'’ படத்தின் ஒட்டுமொத்த தமிழக வினியோகத்தையும் கைப்பத்த நினைக்குறாங்களோன்னு எனக்கு தோணுது'' என்றார்.
 

அந்த தயாரிப்பாளர் குறிப்பிட்ட அதே செய்தியில், சசிகலா வகையறாக் களின் சில நூறு கோடிகள் மதுரை அன்புச் செழியன் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து பல நூறு கோடிகளாக பெருகியதையும் எழுதியிருந்தோம். இப்போது விஜய் வீட்டில் ரெய்டு நடத்திய அதே இரு நாட்களில் மதுரை அன்புவின் சென்னை தியாகராய நகர் வீடு, அலுவலகம், மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள அன்புவின் அலுவலகம், அன்புவின் தம்பி சரவணனின் வீடு என அனைத்து ஏரியாக்களிலும் ரவுண்டு கட்டி அடித்தனர் ஐ.டி.அதிகாரிகள்.

அ.தி.மு.க.வின் மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளராக இருக்கும் அன்புச் செழியன், மாவட்ட மந்திரிகள் இருவர், கொங்குமண்டல மந்திரி ஒருவர், தலைமையின் ஆட்கள் பலர் என சகல திசைகளையும் வஞ்சகமில்லாமல் கவனிப்பவர். மந்திரிகள் மூவர், தலைமை ஆட் களின் கரன்சி என மொத்தம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அன்பு மூலம் சினிமாவில் புழங்கிக் கொண்டிருக்கிறது.

05—ஆம் தேதி மாலை தி.நகர் ராக வேந்திரா கோவில் எதிரில் உள்ள மதுரை அன்புவின் அலுவலகத்திற்குச் சென்று டாகுமெண்டுகளை அலசி ஆராய்ந்த ஐ.டி.அதிகாரிகள், அலுவலக மேனேஜர் செல்வனை விசாரணைக்காக அழைத் துள்ளனர். "என்னை எதுக்கு கூப்பிடுறீங்க, நான் எதுக்கு வரணும்'' என கோபப்பட்ட செல்வனை சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்துள்ளனர். வெளியே வந்த செல்வன், அதிகாரிகள் வந்திருந்த இன்னோவா காரின் கதவை ஆவேச மாக திறந்து, படுவேகமாக சாத்தினார். அப்போது கடுப்பான காரின் டிரைவர், "ஹலோ இது டிராவல்ஸ் வண்டிங்க. ஒங்க கோபத்தை இதுமேல காட்டாதீங்க'' என காட்ட மானார். காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த செல்வனை நமது ஃபோட்டோகிராபர் படம் எடுக்க முயன்ற போது, கண்ணாடியை இறக்கியபடி காரிலிருந்து டென்ஷனாக இறங்கிய செல்வன், “எடுத்துக்க எத்தனை போட்டோ வேணும்னானும் எடுத்துக்க'' என சிடுசிடுத்தார். "கூல் டவுன் செல்வன், கூல்டவுன்'' என சாந்தப்படுத்தி, அழைத்துச் சென்றனர் ஐ.டி.அதிகாரிகள்.

இதே போல் மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள அன்புவின் அலுவலகத்தில் நடத்திய ரெய்டில் ஏகப்பட்ட டாகுமெண்டுகளை அள்ளிய அதிகாரிகள், சரவணன் வீட்டில் மட்டும் 17 கோடி ரூபாய் ரொக்கத்தைக் கைப்பற்றியுள்ளனர். நெய்வேலிக்கே சென்று விஜய்யை அழைத்து வந்த அதிகாரிகளால் மதுரை அன்புவை மட்டும் நெருங்க முடியாதது ஆச்சர்யம்தான்.

நடிகர் விஜய், ஃபைனான்சியர் அன்பு ஆகியோரை அடுத்து ஐ.டி.அதிகாரிகள் குறிவைத்தது விஜய்யை வைத்து "பிகில்' படத்தைத் தயாரித்த கல்பாத்தி அகோரத்தைத்தான். கேரளாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை டோல்கேட் மூலம் ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பார்ப்பவர் கல்பாத்தி அகோரம்.

அதனால் தமிழ் சினிமாவில் வட்டிக்கு பணம் வாங்காமல் சொந்த ஃபைனான்சை வைத்து படம் எடுக்கும் ஒரே தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம்தான். "பிகில்' படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம், டைரக்டர் அட்லீ வாங்கிய சம்பளம், தயாரிப்புச் செலவு என அனைத்தையும் தோண்டித் துருவி அகோரத்தை ஆட்டம் காண வைத்துள்ள ஐ.டி.அதிகாரிகள், அடுத்ததாக லைக்கா புரொடக்ஷன் சுபாஷ்கரண் அல்லிராஜாவுக்கு புள்ளி வைத்துள்ளனராம். இப்போது விஜய்யை டார்கெட் பண்ணியிருக்கிறார்கள். அடுத்ததாக, மதுரை அன்புவிடம் பணம் கொடுத்து வளம் கொழித்த மந்திரிகள் சிக்கப் போகிறார்கள்.

-ஈ.பா.பரமேஷ்வரன், தாவீதுராஜ், அண்ணல்