
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் கடந்த 2ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை(ஏப்ரல் 6) வரை நடக்கவுள்ள இந்த மாநாட்டில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் திரை பிரபலங்களும் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய நிகழ்வில் திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், சமுத்திரக்கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் சமுத்திரக்கனி பேசியதாவது, “எங்க அப்பா காந்தியவாதி. எங்க மாமா கம்யூனிஸ்ட். எங்க அப்பாவை பார்த்தால் எல்லாரும் பழுவாங்க, பேசுவாங்க. ஆனால் எங்க மாமாவை பார்த்தால் மரியாதை கொடுப்பாங்க. அது எனக்கு ரொம்ப புடிக்கும். ஸ்கூல், காலேஜில் எஸ்.எஃப்.ஐ-பில் இருந்தேன். ஒரு நாள் எஸ்.எஃப்.ஐ மாநில மாநாட்டுக்கு சென்றேன். அதற்கு தலைமை தாங்கியவர் மேற்கு வங்காள முதலமைச்சர் ஜோதி பாசு. எல்லாரும் டீ வாங்குறதுக்காக வரிசையில் நிற்கிறோம், எனக்கு முன்னாடி அவர் நின்று கொண்டிருந்தார். ஒரு சி.எம். எப்படி இவ்ளோ எளிமையா இருக்கார்னு ஆச்சரியமா இருந்துச்சு.
பின்பு இயக்குநர்களை சந்தித்தேன். வெற்றிமாறனை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போதும் நிறைய முறை சிவப்பு சிந்தனை வந்து கொண்டே இருக்கும். அதே போன்று ராஜு முருகன், லெனின் பாரதி போன்ற இயக்குநர்கள் சிவப்பு சிந்தனையோடு இருப்பார்கள். அதை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கும். எல்லோருக்கும் எல்லாம் வேண்டும் என்று நினைக்கிறவன் தான் கம்யூனிஸ்ட். அப்படி பார்த்தால் கடவுளே கம்யூனிஸ்ட் தான். கம்யூனிஸ்டை பார்த்தால் எமாத்துரவன், திருடுபவன் பீது அடைவான். படத்தில் எதாவது ஒரு காட்சியில் ஓங்கிப் பேச வேண்டும் என்றால் அந்த இடத்தில் சிவப்பு சட்டை போட வேண்டும் என நினைப்பேன்.
கம்யூனிஸ்ட்டில் வலது இடது என இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தீ எப்போதும் தீ தான். அது ஒன்றாக இருந்தால் மிகப்பெரிய சக்தியாக வெளிவரும். அதை நம்புகிறவன் நான். அதனால் ஒன்றுசேர்வோம். பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவோம்” என்றார்.