
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியான எம்புரான் படம் பல்வேறு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இப்படத்தில் சில காட்சிகள் 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை சித்தரிப்பதாக சொல்லி வலதுசாரி அமைப்புகள், முல்லை பெரியாறு அணை குறித்து தவறான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ச்சியாக பிரித்விராஜ் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக தமிழக விவசாயிகள் கூறினர்.
இதையடுத்து படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளும் முல்லை பெரியாறு அணை தொடர்பான காட்சிகளும் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இருப்பினும் இந்த படத்திற்கு எதிர்ப்பு குரல்கள் ஓயாத நிலை இருக்கிறது. இந்த சூழலில் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளரான கோகுலம் கோபாலன் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். வரி ஏய்பு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை நிறைவடைந்த இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது படத்தின் இயக்குநரான நடிகர் பிரித்விராஜ் சிக்கலில் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு வருமான வரித்துறையினர் 2022ஆம் ஆண்டு அவர் இணை தயாரிப்பு செய்து நடித்த ‘ஜன கண மன’, ‘கடுவா’ மற்றும் ‘கோல்ட்’ ஆகிய படங்களில் அவர் பெற்ற ஊதியம் தொடர்பான விவரங்களைக் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் பிரித்விராஜ் பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
2022ஆம் ஆண்டு வரி ஏய்ப்பு, சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வெளிநாடுகளில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ததாக சந்தேகிக்கப்படும் தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உட்பட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனைகளின் ஒரு பகுதியாக பிரித்விராஜின் வளாகங்களும் ஆய்வு செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவும் இப்போது பிரித்விராஜுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.