
தயாரிப்பாளர் ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசனிடம் தனுஷ் படம் பண்ணி தருவதாக முன் பணம் பெற்றுக் கொண்டு இதுவரை கால்ஷீட் தரவில்லை என்ற குற்றச்சாட்டு கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. இது தொடர்பாக ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்கும் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணிக்கும் பிரச்சனை உருவானது. இருவரும் மாறி மாறி ஒருவரின் மீது ஒருவர் புகார்களை கூறி வந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று செய்தியாளர்களை சந்திக்கையில், “தனுஷ் பிரச்சனை தொடர்பாக ஆர்.கே.செல்வமணி, அவரை நாங்கள் அடியாளாக பயன்படுத்துவதாக ஒரு அபாண்ட குற்றச்சாட்டை முன் வைத்தார். அது முற்றிலும் தவறானது கண்டனத்துக்குறியது.
கதிரேசன் எங்க சங்க செயலாளர் மட்டும் இல்லை. அடிப்படையில் ஒரு உறுப்பினர். ஒரு உறுப்பினருக்கு ஏற்பட்ட பிரச்சனையை அவர் சங்கத்தில் அணுகி கடிதம் கொடுத்த பிறகு பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. நாங்களும் கதிரேசனும் கொடுத்த பணத்திற்கு வட்டிப் போட்டு அதை வாங்கி கொடுங்கள் என செல்வமணியிடம் கேட்கவில்லை. செல்வமணிதான் தனுஷ் தரப்பு பணம் தருவதாக எங்களிடம் சொன்னார். அதற்கு நாங்கள் படம் பண்ண தான் அட்வான்ஸ் கொடுத்தோம். 7 வருஷத்துக்கு முன்னாடி என்ன சம்பளம் வாங்கினாரோ அந்த சம்பளத்தின் அடிப்படையில் எங்களுக்கு படம் பண்ணி தர வேண்டும் என்று தான் கேட்டோம். இந்த பிரச்சனை நடிகர் சங்கத்துக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்குமான பிரச்சனை. நடுவில் செல்வமணி ஏன் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்” என்றனர்.