
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'(Tourist Family).மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்திருந்த இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்த இப்படம் இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து பேசியிருந்தது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பலனாக ஜப்பானில் வருகிற 25ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதனிடையே இப்படம் பலரது பாராட்டுகளை குவித்து வருகிறது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் இப்படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஒரு அற்புதமான திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலியைப் பார்த்தேன். மனதை தொட்டு விட்டது. நகைச்சுவையும் சிறப்பாக இருந்தது. ஆரம்பம் முதல் இறுதி வரை ஆர்வத்துடனே வைத்திருந்தது. அபிஷன் ஜீவிந்துடைய எழுத்தும் இயக்கமும் மிகச்சிறப்பாக இருந்தது. சமீப ஆண்டுகளில் சிறந்த சினிமா அனுபவத்தைக் கொடுத்ததற்காக நன்றி. படத்தை மிஸ் பண்ணிடாதீங்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.