Skip to main content

நிறம் மாறும் செங்கொடி தேசம் – வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 5 

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
vietnam-travel-series-part-5
டாங்

இந்திய ரெஸ்டாரென்ட்டில் சாப்பிட்டு முடித்த பின் பில் வந்தது. வாங்கிப் பார்த்தபோது மயக்கமே வந்துவிட்டதுன்னு போன பகுதியில் சொல்லியிருந்தேன். ஏன் தெரியுமா? மூன்று பராத்தா, ஒரு 300 எம்.எல் வாட்டர் பாட்டிலுக்கு 6.5 லட்சம் டாங். நம்மவூர் மதிப்புக்கு 1900 ரூபாய் சொச்சம். வாட்டர் பாட்டில் விலை 30 ஆயிரம் டாங். நம்மவூர் மதிப்புக்கு 90 ரூபாய் சொச்சம். 

6.5 லட்சம் டாங்கை கொடுத்துவிட்டு வெளியே வந்ததும், எங்களுக்காக நியமிக்கப்பட்ட உள்ளுர் டூர் கைடு, ஏறுங்க ஏறுங்க என அவசரப்படுத்தி காரில் ஏற்றிக்கொண்டு நம்மை அழைத்துச் சென்று ஒரு தொன்மையான கட்டடம் முன்பு இறக்கினார். ஏழு நூற்றாண்டுகளாக வியட்நாம் மக்களின் வாழ்வைப் பல்வேறு கட்டத்திற்கு மேல் நோக்கி நகர்த்திச் சென்ற கட்டடம் அது.

vietnam-travel-series-part-5
பல்கலைக்கழகம் நுழைவு வாயில்

1066 முதல் 1127 வரை டை கோ வியட் எனும் இன்றைய வியட்நாம்  நாட்டை ஆட்சி செய்த பேரரசர் லைநான்டங் ஆட்சிக் காலத்தில் 1070ல் கட்டப்பட்ட இந்த அறிவு மையம், 1076ல் இருந்து நாட்டின் பல்கலைக்கழகமாக செயல்பட்டு வந்தது. பண்டைய கால சிந்தனைக் கல்வி முறையான கன்பூசியனிசத்தை இந்த பல்கலைக்கழகம் போதித்தது. கன்பூசியனிசம், மனித நேயத்தை வலியுறுத்தும், சமூக நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும், சடங்கு நெறிமுறைகளின்படி எப்படி வாழ வேண்டும், பகுத்தறிவு சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதோடு போர்க்களத்தில் எப்படி இருக்க வேண்டும், போர்க்கள பயிற்சிகள் போன்றவை ஆகியவை அங்கு கற்றுத் தரப்பட்டுள்ளன. 

vietnam-travel-series-part-5
சு வான் ஆன்

ஆங்கிலத்தில் ‘கிரேட் வியட்’ எனப் பொருள்படும் அன்றைய ‘டை கோ வியட்’ நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த குறுநில மன்னர்கள், நாட்டின் அரசர்கள், பேரரசர் குடும்ப வாரிசுகள் இங்கு கல்வி பயின்றனர். இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த ஒருவரின் சிலை முன்பு அனேகமானோர் மரியாதை செலுத்தினர். யார் என வினவியபோது, அவர் பெயர் ‘சு வான் ஆன்’ என்பது தெரியவந்தது. 

சிறந்த கல்வியாளரான சு வான் ஆன், மன்னர் நடத்திய பெரிய தேர்வுகளில் வெற்றி பெற்றவர். அதன் மூலமாக அரசுப் பணிக்கு சென்றிருந்தால் பெரிய பதவிகள் வந்திருக்கும். ஆனால் அதனை மறுத்துவிட்ட அவர், தனது பகுதியில் கன்பூசியன் பள்ளியைத் திறந்து நடத்த துவங்கினார். நாடு முழுவதும் கன்பூசியன் கல்வியை, கொள்கையை பரப்பும் பணியில் ஈடுப்பட்டார்.

பேரரசர் லைநான்டங் ஆட்சிக் காலமெல்லாம் முடிந்து 1314 முதல் 1329 வரை ஆட்சி செய்த பேரரசர் ட்ரன் மிங் டோங், தனது மகன் ட்ரன் ஹெய்ன் டோங்குவுக்கு கன்பூசியனிசம் கல்வியைப் போதிக்க ஹனாய் பல்கலைக்கழகத்தில் சேர்த்தார். ட்ரன் ஹெய்ன் டோங்குவுக்கு கன்பூசியனிசத்தை போதிக்க சு வான் ஆன் அரசரால் நியமிக்கப்பட்டார். ஹனாய் பல்கலைக்கழகத்தின் உயர் பொறுப்பான மாண்டரின் எனும் பதவியில் இருந்த சு வான் ஆன், மன்னருக்கு நீதி ஆலோசனை வழங்கும் குழுவிலும் முக்கியப் பங்கு வகித்தார். 

vietnam-travel-series-part-5
பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி

போர்த்துகீசியர்கள் அதிகார அமைப்பில், கட்டளையிடுபவரை குறிக்கப் பயன்படுத்தும் சொல்லான மாண்டரின் பிற்காலத்தில் சீனா எடுத்துக்கொண்டது. சீன ஆட்சியின் கீழ் வியட்நாம் 800 ஆண்டுகள் இருந்ததால், சீன சொற்கள் பல வியட்நாம் ஆட்சியாளர்களின் பயன்பாட்டிற்கும் வந்தது. கன்பூசியன் ஆசிரியராக இருந்து, பேரரசரின் மகனுக்காக பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்டு, வியட்நாம் கல்வித்துறையின் உயர் பொறுப்பான மாண்டரின் பொறுப்பில் செயல்பட்டு, மன்னரின் ஆலோசனைக் குழுவிலும் முக்கியப் பங்கு வகித்த சு வான் ஆனின் புகழ் வியட்நாம் முழுக்க பரவியது. வியட்நாமை தாண்டி சீனாவில் இவரின் கல்வித்திறன் பரவியது. 

ஹனாய் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிய சு வான் ஆன், பல்கலைக்கழகத்தில் ஊழல் செய்த 7 அலுவலர்களைத் தண்டிக்கச் சொல்லி மன்னரிடம் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், அப்போது மன்னராக இருந்தவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் தனது பணியை ராஜினாமா செய்த சு வான் ஆன், தொடர்ந்து கல்வி கற்பிப்பதிலும், புத்தகங்களை எழுதுவதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவரைப் போற்றும் விதமாகவே ஹனாய் பல்கலைக்கழகத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. 

vietnam-travel-series-part-5
சு வான் ஆன் பெயரில் உயர் நிலைப் பள்ளி

இன்றைய வியட்நாமின் முக்கிய நகரங்களான ஹனாய், ஹோ சிமின், ஹீயூ ஆகிய பகுதிகளில் சு வான் ஆன் பெயரில் உயர் நிலைப் பள்ளிகள் உள்ளன. படிப்பில் மிகத் திறமையான மாணவர்கள் மட்டுமே இங்கு சேர முடியும். இங்கு படித்தவர்களில் சிலர் பிற்காலத்தில் வியட்நாமின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், ராணுவ உயர் அதிகாரிகள் பொறுப்புகளில் இருந்துள்ளனர். இருந்தும் வருகின்றனர். பலர் அரசின் பொறுப்புகளில் இருக்கின்றனர். 

இவர் பணியாற்றிய இந்த வியட்நாம் பல்கலைக்கழகம், தற்போது இலக்கிய கோவில் என அழைக்கப்படுகிறது. இதன் வளாகத்தில் தியன் குவாங் என்கிற கிணறு உள்ளது. அது இலக்கிய கிணறு என்றும் அழைக்கப்படுகிறது. 1076 முதல் 700 ஆண்டுகள் கடந்து இயங்கி வந்த அந்தப் பல்கலைக்கழகம், 1802 ஆம் ஆண்டு ‘நகுயன் வம்சம் யூ’ நகரத்தில் புதிய கல்விச் சாலையை உருவாக்கியதால் இது தனது தன்மையை இழக்க துவங்கியது. அதன்பின் இது பிரெஞ்ச் ஆட்சிக் காலத்தில் நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டது. அதன்பின் இப்போது நாட்டின் மதிப்புமிக்க வரலாற்றுச் சின்னமாக பராமரிக்கப்படுகிறது.

நிறம் மாறும் செங்கொடி தேசம்! – வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 4