Skip to main content

பாகிஸ்தானை சாய்த்த ஜிம்பாப்வே; உலகக் கோப்பையில் அசத்தல் வெற்றி 

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

Zimbabwe beat Pakistan; Crazy World Cup win

 

அக்டோபர் 16ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கிய 8-வது 20 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன. 

 

சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வான அனைத்து அணிகளும் தங்களது முதல் போட்டியை விளையாடிவிட்ட நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. நேற்று நடந்த இரு போட்டிகளில் இந்திய அணி நெதர்லாந்தையும் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே அணியையும் எதிர்கொண்டது. இதில் நெதர்லாந்து அணியுடன் மோதிய இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

 

இதனை அடுத்து பாகிஸ்தான் உடனான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மதிவீரே மற்றும் எர்வின் ஆரம்பம் முதலே பொறுமையாக ஆடினர். ஷேன் வில்லியம்ஸ் சிறிது அதிரடி காட்ட ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்தது. 

 

பின் 131 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் சொற்ப ரன்களில் வெளியேற ஷான் மசூத் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். 44 ரன்களில் ஷான் மசூத் ஆட்டமிழக்க பின் வந்த பாகிஸ்தான் அணி வீரர்கள் ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். முடிவில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 129 ரன்களை மட்டுமே எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

 

ஆட்டநாயகனாக 3 விக்கெட்கள் வீழ்த்திய சிக்கந்தர் ரசா தேர்வு செய்யப்பட்டார். முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை சென்று தோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.