Skip to main content

நாங்களும் உலக சாதனையாளர்கள்தான்... விளையாட்டில் சாதித்துவரும் பெண்கள்...!

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டாக இருக்க அதன் சிறப்பம்சங்கள் மட்டுமே காரணமல்ல. வணிகம் தான் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. ஒவ்வொரு ஓவருக்கு ஒரு முறையும் சில விளம்பரங்களை ஒளிபரப்ப முடியும். வேறெந்த விளையாட்டிலும் அது சாத்தியம் இல்லாத ஒன்று. அதிகம் வணிகம் சார்ந்த விளையாட்டாக இருப்பதால், கிரிக்கெட் இந்தியாவில் மற்ற விளையாட்டுகளை ஓரம்கட்டிவிட்டது. பல நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களை நாம் அதிகம் அறியாமல் போனதற்கு வணிகத்தை மையமாக கொண்ட கிரிக்கெட்டே முக்கியக் காரணம். 

 

rampal

 

மேலும் வேதனை என்னவென்றால் மற்ற விளையாட்டுகளில் உலகில் நம்பர் 1, உலக தரவரிசைகளில் டாப் 10-ல் இருப்பவர்கள், பதக்கங்களை பெறுபவர்கள்கூட அதிகமாக அறியப்படவில்லை. இதிலும் மகளிர் என்றால் இன்னும் அவர்களுக்கு தடைகளும், சோதனைகளும் அதிகம். ஆனால் இவற்றை கடந்து உலகளவில் சாதித்தவர்கள் சிலர் உண்டு. வறுமை, கேலி, கிண்டல்கள், உடல்ரீதியான பிரச்சனைகள், பாலின வேறுபாடுகள், பாலியல் வற்புறுத்தல்கள் போன்ற பலவற்றை கடந்து சாதித்தவர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது. 

 

ராணி ராம்பால் – ஹாக்கி

 

rampal

 

14 வயதில் இந்தியா ஹாக்கி அணியில் இடம்பிடித்தவர். தற்போது இந்திய ஹாக்கி அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். 2010-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 7 கோல் அடித்து 'சிறந்த இளம் வீரர்' என்ற விருதை பெற்றார். ஹரியானாவில் கட்ட பஞ்சயாத்து நடைபெறும் கிராமத்தில் இருந்து வந்தவர். கடும் எதிர்ப்புகளை தாண்டி இவரது பெற்றோர் இவரை சிறு வயதில் ஹாக்கி அகாடமியில் சேர்த்தனர். இவரது தந்தை குதிரை வண்டி ஓட்டுபவர். 



மேரி கோம் – குத்துச்சண்டை
 

இந்திய விளையாட்டு துறையில் இவரை போல வேறெந்த மகளிரும் தடைகளை சந்தித்திருக்க மாட்டார்கள். அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து உலகின் நம்பர் 1 குத்துச்சண்டை வீரர் என்ற இடத்தை அடைந்தவர். ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். 2014-ல் இவரின் வாழ்க்கை, படமாக வெளியிடப்பட்டது. அதில் மேரி கோமாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். பத்ம புஷன், அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இவருடைய பெற்றோர் குத்தகை விவசாயம் செய்து வந்தனர்.
 


சாக்சி மாலிக் – மல்யுத்தம்
 

2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவை தன் பக்கம் ஈர்த்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீரர் ஆவார். தடைகளாக இருந்த பல சமூக காரணிகளை கடந்து மல்யுத்தத்தில் சாதித்து வருகிறார்.
 


மிதாலி ராஜ் – கிரிக்கெட்
 

பி.பி.சி.-ன் உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் 2017-ஆம் ஆண்டு இவர் இடம் பிடித்தார். 1999 முதல் தேசிய அணியில் உள்ளவர். 20-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். லேடி கிரிக்கெட்டின் சச்சின் எனப் போற்றபடுபவர்.


தீபிகா குமாரி – வில்வித்தை

 

deepika

 

தீபிகா தற்போது உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இதற்கு முன்னாள் முதல் இடத்தில் இருந்தார். பத்ம ஸ்ரீ, அர்ஜூனா விருது பெற்றவர். இவரது தந்தை ஆட்டோ ரிக்ஷா டிரைவர்.

 


சாய்னா நேவால் – பேட்மின்டன்
 

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால். பேட்மிட்டன் தரவரிசை பட்டியலில் முதலிடம் வகித்த முதல் பெண். 20-க்கும் மேற்பட்ட சர்வதேச டைட்டில்களை பெற்றுள்ளார். கராத்தேவில் பிரவுன் பெல்ட் வாங்கியுள்ளார். இவரது தந்தை கடன் மற்றும் லோன் வாங்கி பேட்மிட்டன் பயிற்சி பெற ஊக்குவித்தார்.  
 


தன்யா சச்தேவ் – செஸ்
 

பல சர்வதேச மாஸ்டர் மற்றும் பெண் கிராண்ட்மாஸ்டர் டைட்டில்களை வென்றவர். ஆசிய பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்றார். 8 வயதில் சர்வதேச டைட்டில் வென்ற பெருமைக்குரியவர். 2009-ஆம் ஆண்டு அர்ஜூனா விருது பெற்றார்.  


கீதா பகாட் – மல்யுத்தம்
 

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கீதா பல சமூகப் பிரச்சனைகள், குழந்தை திருமணம் அதிகமுள்ள பகுதியிலிருந்து வந்து சாதனை படைத்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 2010-ஆம் ஆண்டு மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் வென்றார். இவரின் விளையாட்டு வாழ்க்கை அமீர் கான் நடித்த “தங்கல்” என்ற படமாக வெளிவந்து சிறப்பான வரவேற்பை பெற்றது.  

 

பி.வி. சிந்து – பேட்மின்டன்
 

ஒலிம்பிக்கில் பேட்மின்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர். தற்போது 3-வது இடத்தில் உள்ளார். பத்ம ஸ்ரீ, அர்ஜூனா விருது பெற்றவர். 2018-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 
 

ஜுலன் கோஸ்வாமி – கிரிக்கெட்டர்

 

jhulan


  
கிரிக்கெட்டில் வேகப்பந்து வீசுவது என்பது மிகவும் சவாலான ஒன்று. அதிலும் மகளிருக்கு மிகவும் சிரமமான ஒன்று. ஆனால் சிறுவயதிலிருந்தே ஆர்வம் கொண்டு அதில் சாதித்தும் காட்டியவர். தற்போது உலகில் நம்பர் 1 பவுலராக இருந்து வருகிறார். பத்ம ஸ்ரீ, அர்ஜூனா விருது பெற்றவர். மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர். 
 

தீபா கர்மகார் – ஜிம்னாஸ்டிக்ஸ்
 

2016-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் நூலிழையில் வெண்கல பதக்கத்தை நழுவவிட்டார். 2014-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றார். சர்வதேச அளவில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார். இந்தியாவின் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் இருந்து வந்து சாதித்து காட்டியவர்.  


தீபிகா பல்லிகல் – ஸ்குவாஷ்

 

கிரிக்கெட்டால் மற்ற விளையாட்டுகள் மூழ்கடிக்கப்பட்ட காரணத்தால் கிரிக்கெட்டை வெறுத்தவர். இவர் ஸ்குவாஷ் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்தியர். பத்ம ஸ்ரீ, அர்ஜூனா விருது பெற்றவர். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் அங்கமாக இருந்தார். இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவி.