சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கேதர் ஜாதவ். அடிப்படையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனான அவரை, கேப்டன் ஆல்ரவுண்டராக தோனி பயன்படுத்துவார் என்பதால் அவர்மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல். சீசனில், மும்பையுடன் சென்னை அணி மோதியபோது, ஹார்ம்ஸ்டிரிங் காயம் காரணமாக கேதர் ஜாதவ் வெளியேறினார். அதன்பிறகு கடைசி ஓவரில் காயத்துடன் களமிறங்கி, சிக்ஸர், பவுண்டரி என விளாசி சென்னை அணியை வெற்றிபெறச் செய்தார். ஆனால், அதன்பிறகு நடந்த எந்த போட்டிகளிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. அவரது விலகல் சென்னை அணியின் மிடில் ஆர்டருக்கு மிகப்பெரிய நெருக்கடியைத் தந்திருப்பதாக அணி பயிற்சியாளர் மைக்கேல் ஹஸியே பேசியிருந்தார்.
இந்நிலையில், நீண்ட ஓய்வுக்குப் பிறகு மீண்டும் களத்திற்கு வரயிருப்பதாக, கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு எந்த அப்டேட்டையும் நான் சமூக வலைதளத்தில் பதிவிடவில்லை. அதன்பிறகுதான் என்னை ஊக்கப்படுத்துபவர்கள் மற்றும் எனது பலம் நீங்கள்தான் என்பதை உணர்ந்தேன். என் ஃபிட்னஸ் தொடர்பாக தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். கூடிய விரைவில் முழு உடல்தகுதியுடன் களத்திற்கு வருவேன்’ என பதிவிட்டுள்ளார். அவர் கடந்த ஜூன் 15ஆம் தேதி யோ-யோ தேர்வில் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.