ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியான இந்தியன் பீரிமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அதே போல், பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி பெண்கள் பிரீமியர் லீக் (WPL) தொடர் கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டின் போது நடைபெற்ற பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.
அந்த வகையில், 2வது பெண்கள் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே - ஆப் சுற்றுக்குள் நுழையும். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த தொடர், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
லீக் பிரிவின் கடைசி போட்டி நேற்று (14-03-24) டெல்லியில் நடைபெற்றது. இதில், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய இந்த போட்டியில், டாஸ் வென்று குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை எடுத்தது. அதில் அதிகபட்சமாக பாரதி புல்மாலி 42 ரன்களை எடுத்திருந்தார். குஜராத் அணிக்கு எதிராக வீசப்பட்ட பந்து வீச்சில், மரிசன்னே கப், ஷிகா பாண்டே, மின்னு மணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து, 127 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடியது. அதில் டெல்லி அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்து அபாரமாக வெற்றி பெற்றது. இதில், டெல்லி அணியின் தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா 37 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் அடித்து 71 ரன்களை எடுத்திருந்தார்.
லீக் போட்டிகளின் முடிவில் டெல்லி அணி, 8 போட்டிகளில் 6 போட்டிகள் வெற்றி பெற்று 12 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3வது இடத்திலும் உள்ளன. முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில் புள்ளி பட்டியலில் முதலிடம் பெற்ற டெல்லி அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று (15-03-24) மாலை 7:30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்று பெறும் அணி, மார்ச் 17ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் டெல்லி அணியுடன் மோதவிருக்கிறது.