ஐபிஎல் 2024 இன் 4ஆவது லீக் ஆட்டம் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே மாலை தொடங்கியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் களம் இறங்கினர். பட்லர் 11 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றினார். அதைத் தொடர்ந்து அதிரடியாய் ஆடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வாலும் 24 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
பின்பு கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. அதிரடியாக விளையாடிய ரியன் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹெட்மயர் 5 ரன்களில் வெளியேறினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபக்கம் பொறுமையாக அதே நேரத்தில் தேவையான நேரத்தில் அதிரடி காட்டி ஆடிய சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்தார். அடுத்து வந்த ஜுரேல் தன் பங்கிற்கு 20 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 82 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். லக்னோ அணி தரப்பில் நவீன் 2 விக்கெட்டுகளும், மொஹ்சின் கான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களம் இறங்கியது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான டி காக் 4 ரன்களில் போல்ட் பந்து வீச்சில்ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த படிக்கல் ரன் எதுவும் எடுக்காமல் போல்ட் பந்தில் கிளீன் போல்டு ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஆயுஸ் படோனியும் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார்.
பின்னர் வந்த தீபக் ஹூடா ராகுலுடன் இணைந்து அணியை சரிவிலிருந்து ஓரளவு மீட்டார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஹூடா 26 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் கே.எல். ராகுல் தனக்கே உரிய பாணியில் எப்போதும் போல பொறுப்பாக ஆடினார். அவருக்கு துணை நின்ற நிக்கோலஸ் பூரன் வழக்கம் போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ராகுல் அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 3 ரன்களில் வெளியேறினார். பூரன் 4 சிக்ஸர்கள் உட்பட 64 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார்.
இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய போல்ட் 2 விக்கெட்டுகளும் சந்தீப், அஸ்வின், பர்கர் மற்றும் சஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.