அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிட்டன. எஞ்சியுள்ள ஒரு இடத்தை பிடிப்பதற்கு கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்தே இளம் வீரர்கள் பலரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பெங்களூரு அணியைச் சேர்ந்த 20 வயது நிரம்பிய தேவ்தத் படிக்கல் தனது நிலையான ஆட்டத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பெங்களூரு அணி விளையாடிய 14 போட்டிகளிலும் களமிறங்கியுள்ள தேவ்தத் படிக்கல், 5 அரை சதங்களுடன் 472 ரன்கள் குவித்துள்ளார்.
இந்திய அணிக்கு அறிமுகமாகாமல் ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் 5 அரை சதங்கள் அடித்தது புதிய சாதனையாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு, ஷிகர் தவான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரே சீசனில் நான்கு அரை சதங்கள் அடித்ததே சிறந்த சாதனையாக இருந்தது.
இந்திய அணிக்கு அறிமுகமாகாமல், ஒரே சீசனில் 400 ரன்கள் அடித்த வீரர்கள் என்ற சாதனைப்பட்டியலில் சில தினங்களுக்கு முன்னர் தேவ்தத் படிக்கல் இணைந்தது குறிப்பிடத்தக்கது.