ப்ளே ஆஃப் சுற்று நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்தான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கெடுத்துள்ளன. அனைத்து அணிகளும் தங்களுக்கான லீக் போட்டியில் முதல் 11 போட்டிகளை விளையாடி முடித்துள்ளன. இன்னும் சில லீக் போட்டிகளே எஞ்சியுள்ளதால், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்தான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ப்ளே ஆஃப் சுற்று நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்தான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ப்ளே ஆஃப் சுற்றில் முதல் தகுதிச்சுற்று ஆட்டம் நவம்பர் 5-ம் தேதி துபாயில் நடைபெற இருக்கிறது. இதில், தரவரிசைப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் மோதுகின்றன. எலிமினேட்டர் ஆட்டமானது நவம்பர் 6-ம் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதில், தரவரிசைப்பட்டியலில் 3-ஆவது மற்றும் 4-ஆவது இடங்களைப் பெற்ற அணிகள் மோதுகின்றன. இரண்டாவது தகுதி சுற்றானது நவம்பர் 8-ம் தேதி அபுதாபியில் நடைபெற இருக்கிறது. இதில், முதல் சுற்றில் தோல்வி பெற்ற அணியும், எலிமினேட்டர் ஆட்டத்தில் வென்ற அணியும் மோத உள்ளன. இறுதிப் போட்டியானது நவம்பர் 10ம் தேதி துபாயில் நடைபெற இருக்கிறது.
அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.