Andhra government implement scheme Rs.15,000 mother every school child

1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாயாருக்கு ரூ.15,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை ஆந்திரப் பிரதேச அரசு அமல்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜன சேனா - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் நடிகரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் துணை முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலோடு ஆந்திரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில், ‘சூப்பர் சிக்ஸ்’ என்ற நலத்திட்டங்களின்படி, பள்ளி மாணவர்களின் தாயாருக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில், ‘தல்லிகி வந்தனம்’ என்ற பெயரில் புதிய நலத்திட்டத்தை ஆந்திரப் பிரதேச அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பள்ளி செல்லும் ஒவ்வொரு மாணவரின் தாய் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 கிடைக்கும். ஒரு குடும்பத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் எத்தனை குழந்தைகள் இருந்தாலும், ஒவ்வொரு மாணவருக்கும் இந்த திட்டத்தின்படி கல்வி உதவித்தொகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சுமார் 67 லட்சம் மாணவர்களும், 43 லட்சம் தாய்மார்களும் பயனடைய வாய்ப்புள்ளதாக ஆந்திரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. பள்ளி கல்வியை மேம்படுத்துவதற்காகவும், அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதற்காகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் மற்றும் தனியார் உதவி பெறாத பள்ளிகள் மற்றும் ஜூனியர் கல்லூரிகளை சேர்ந்த குழந்தைகள் அனைவரும் இந்த திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீழ்ச்சியடைந்து வரும் பிறப்பு விகிதங்களை நிவர்த்தி செய்வதற்காகவும், எதிர்கால மக்கள்தொகை தேவைகளை நிர்வகிப்பதற்கும், அதிக குழந்தைகளைப் பெற குடும்பங்களை ஊக்குவிப்பதற்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பணம் வழங்குவது உள்பட இந்த திட்டத்தின் முழு வெளியீடு ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.