ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அணியில் ரோகித் ஷர்மாவை சேர்க்காதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல் சில தினங்களுக்கு முன்னால் வெளியானது. அதனைத் தொடர்ந்து, அணியில் ரோகித் ஷர்மாவை சேர்க்காதது, இளம் வீரர்கள் சிலரைப் புறக்கணித்தது என சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இது குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக், ரோகித் ஷர்மாவை தேர்வு செய்யாதது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் அவர், "நான் கிரிக்கெட் விளையாடிய போது, அணி தேர்வுக்குழு தலைவராக ஸ்ரீகாந்த் இருந்தார். அணி தேர்வு நாளன்று காயமடைந்தால் மட்டுமே அவர் அணியில் சேர்க்க மாட்டார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் நீண்ட நாள் தொடர். ரோகித் ஷர்மா அணியில் முக்கியமான வீரர். அவரின் இன்றைய காயத்தை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்திருந்தால், தேர்வுக்குழு அவர் மீது கடினமாக நடந்து கொண்டது என நினைக்கிறேன்.
அவரது காயத்தின் தன்மை குறித்து எனக்கும் தெரியவில்லை. ஊடகங்கள்தான் இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும். முதலில் காயம் என்று கூறினார்கள். உண்மையிலேயே காயம் என்றால் அவர் மைதானத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார். அவருக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை என நன்றாகத் தெரிகிறது. மும்பை அணி நிர்வாகம் அவரது காயத்தின் தன்மை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். ரோகித் ஷர்மா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவரது உடல்நிலை குறித்துக் கூற வேண்டும்". இவ்வாறு சேவாக் கூறினார்.