சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிலையில், மாவட்டங்களில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் அறிவாலயத்தில் பஞ்சாயத்தாக நடப்பதும், அதிக சீட்டுகளுக்காக கூட்டணிக் கட்சிகள் நெருக்கத் துவங்கியிருப்பதுமான நெருக்கடிகள் தி.மு.க. தலைமையை மிரட்டிக் கொண்டிருக்கின்றன. இவைகளை முதல்வர் ஸ்டாலின் எப்படி சமாளிக்கப் போகிறார்? என்கிற கேள்வி தி.மு.க. அமைச்சர்களிடம் எதிரொலித்தபடி இருக்கிறது.
"வெல்வோம் 200; படைப்போம் வரலாறு' எனும் தாரக மந்திரத்தை உயர்த்தி பிடித்து இலக்கை நோக்கிப் பாய்ச்சல் காட்டி வரும் தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து கடந்த 1 வருடத்துக்கு முன்பிலிருந்தே 200 இடங்களை வெல்வதற்கான பணிகளைத் துவக்கிவிட்டது.
ஒருங்கிணைப்பின் யோசனையின் பேரில் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களும், அதனைத் தொடர்ந்து, தி.மு.க.வின் அமைப்பு ரீதியிலான மாவட்டங்கள் மற்றும் ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு அதற்குப் புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகள் மட்டும் போதாது என தமிழ்நாட்டை எட்டு மண்டலங்களாகப் பிரித்து, 8 பேரை மண்டலப் பொறுப்பாளர் களாக நியமித்தார் ஸ்டாலின். மண்டலப் பொறுப்பாளர்களும், முதற்கட்ட ஆலோசனைக் கூட்டங்களையும் ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தி முடித்திருக்கிறார்கள். ஆனால், இந்த ஆய்வுக்கூட்டங்களில் பல்வேறு பிரச்சனைகள் வெடித்து, அறிவாலயத்தில் புகார்களாக குவிகின்றன.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "மண்டல பொறுப் பாளர்கள் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் ஏகப்பட்ட பிரச் சினைகள் வெடிக்கின்றன. அதனை மண்டல பொறுப்பாளர் களாக இருக்கும் அமைச்சர்கள் சமாளித்து வருகிறார்கள். ஆய்வுக் கூட்டங்களில் சமாளிக்க முடியாத பிரச்சனைகள், அறிவாலயத்துக்குப் போகிறது. அங்கு பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படுகின்றன.
கடந்த வாரம் வேலூர் மாவட்ட பஞ்சாயத்து ஒன்று... அமைச்சர் எ.வ. வேலு, தாயகம் கவி, ஆஸ்டின் முன்னிலையில் அறிவாலயத்தில் நடந்தது. வேலூர் மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கார்த்தி கேயன், நந்தகுமார் மற்றும் எம்.பி. கதிர்ஆனந்த், ஒன்றிய செயலாளர் கள், நிர்வாகிகள் இதில் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடந்தது.
அப்போது, காண்ட்ராக்டர்களிடமிருந்து வசூலிக்கும் கமிஷன் தொகையை, வார்டு உறுப்பினர்களுக்கு ஏன் பிரித்துக் கொடுப்பதில்லை? இதுபற்றி நிறைய புகார்கள் வருகின்றன. 18 ஆம் தேதிக்குள் சேரவேண்டியவர்களுக்கு சேர வேண் டும் என எம்.எல்.ஏ. கார்த்திகேயனுக்கு உத்தரவிடப் பட்டது. ஆனால், கார்த்திகேயனோ, "18-ந்தேதி என் னால் தரமுடியாது. மருத்துவமனை கட்டப்பட்ட தில் வரவேண்டிய தொகை வரவில்லை; வந்ததும் மொத்தமாக கொடுக்கிறேன்'னு சொல்லியிருக்கிறார்.
அந்த சமயத்தில், "கதிர்ஆனந்த் 24 சதவீதம் கமிசன் வாங்குகிறார்; பிரித்துத் தருவதில்லை. இப்படியிருந்தால் தேர்தல் வேலைகளை எப்படி கட்சிக்காரர்கள் சீரியசாக எடுத்துக்கொள்வார் கள்'னு, எம்.எல்.ஏ. நந்தகுமார் குற்றம்சாட்ட, அவரை ஒருமையில் விமர்சித்ததுடன், "நீ அடிச்ச கமிசன் தொகையில் யார், யாருக்கு பிரித்துக் கொடுத்தே? பட்டியல் போடு! யாருக்குமே நீ கொடுக்கலை. ஆனா, கூட்டுறவு சங்கத்திற்கு சொந்த மான நிலங்கள், சொத்துக்கள், காம்ப்ளக்ஸ்கள் என நீ வாங்கிக் குவித்ததை நான் சொல்லட்டுமா?' என டென்சனானார் கதிர்ஆனந்த். உடனே நந்தகுமா ரும் மல்லுக்கட்ட... விசாரணை ரசாபாசமானது.
வேலு உள்ளிட்டவர்கள் அவரை சமாதானப்படுத்தியும் அடங்காத நந்தகுமார், காட்பாடியையும் (துரைமுருகனின் தொகுதி) என்னிடம் கொடுங்க; நான் பார்த்துகிறேன் எனச் சொன்னதும், மேலும் கோபப்பட்டார் கதிர் ஆனந்த். அவருக்கு ஆதரவாக, காட்பாடி ஒன்றி யத்தின் இரண்டு செயலாளர்கள் களமிறங்க, மற்ற நிர்வாகிகள் நந்தகுமாருக்கு ஆதரவாகப் பேச... பிரச்சினை பூதாகரமானது.
அதேசமயம், வேலூர் மேயர் சுஜாதாவிற்கு, "வேலூர் தொகுதியை இந்த முறை உங்களுக்கு வாங்கித் தருகிறேன்' என ஏற்கனவே நந்தகுமார் வாக்குறுதி தந்திருப்பதால் நந்தகுமாருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் சுஜாதா. அவரிடமும் கதிர்ஆனந்த் கோபமாக வெடித்தார். அமைச்சர் வேலு, கூச்சல் குழப்பத்தை கட்டுப்படுத்தி, பிரித்துக் கொடுக்கப்பட வேண்டியதை விரைவில் கொடுக்கவேண்டும் என கட்டளையிட்டுவிட்டு, பஞ்சாயத்தை முடித்து வைத்தார்.
வேலூர் விவகாரம் இப்படியிருக்க... செங்கல்பட்டு தொகுதி குறித்த ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் மண்டல பொறுப்பாளர் ஆ.ராசா தலைமையிலும், அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையிலும் நடந்தது. தொகுதிக்குள் சம்பந்தப் பட்ட ஊராட்சி தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து தி.மு.க.வினர் குற்றம்சாட்டினர். குறிப்பாக, அஞ்சூர் ராஜேந்திரன், அவர் சார்ந்த ஊராட்சி தலைவரான அ.தி.மு.க. தேவராஜ் நிறைய முறைகேடுகள் செய்வதாகவும், அதனை மாவட்டம் தட்டிக்கேட்க மறுக்கிறார் என்றும் குற்றம்சாட்ட, "உன்னால் அங்கு ஜெயிக்க முடியலை; இப்போ நீ பேச வந்துட்டே' என்று ராஜேந்திரனை பேச விடாமல் தடுத்து விட்டார் தா.மோ.அன்பரசன்.
அதேபோல காஞ்சி வடக்கு மாவட்டத்தில் தி.மு.க. மா.செ., எம்.எல்.ஏ.க்கள், ஒ.செ.க்களுக்கு எதிராக மாவட்ட நிர்வாகிகளிடம் பிரச்சினைகள் வெடித்தபடி இருக்கிறது. இதுகுறித்த புகார் களையும் ஆ.ராசா கண்டுகொள்ளாததால், அறிவாலயத்தில் புகார்கள் குவிகின்றன.
அறிவாலயத்தில் குவியும் இந்த புகார்கள் மீது கட்சித் தலைமை ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். இல்லையெனில், தேர்தல் நேரத்தில் களத்தில் நிற்கும் அடிமட்ட நிர்வாகிகளின் அதிருப்திகள் தி.மு.க.வுக்கு எதிராகப் போக வாய்ப்பிருக்கிறது என உளவுத்துறை நோட் போட்டிருக்கிறது. இதனையடுத்தே மண்டலப் பொறுப்பாளர்களை அழைத்து ஆலோசித் தார் முதல்வர் ஸ்டாலின்” என்று சுட்டிக் காட்டுகிறார்கள் தி.மு.க.வின் மேலிடத் தொடர்பாளர்கள்.
இந்த நிலையில்தான், மதுரையில் நடந்த பொதுக்குழுவில் அறிவித்தபடி நிர்வாகிகள் ஒன் டூ ஒன் சந்திப்பை, "உடன்பிறப்பே வா' எனும் தலைப்பில் நடத்திவருகிறார் ஸ்டாலின். மேலும், துணை முதல்வர் உதயநிதி உட்பட 8 மண்டல பொறுப்பாளர்களுடன் இது குறித்து கடந்த 14-ந்தேதி விரிவான ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். அதில், ஆய்வுக்கூட்டத்தில் நடந்த சம்பவங்கள், குற்றச்சாட்டுகள், பிரச்சனை கள் அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளன. அது குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி யிருக்கிறார் ஸ்டாலின். இப்படிப்பட்ட சூழலில், அதிக சீட்டுகளைக் கேட்டு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியிருக் கிறார்கள். தி.மு.க.வின் வெற்றிக்கு காரணியாக இருப்பதில் கூட்டணி பலம் முக்கியமாக இருக்கிறது. இதனை உணர்ந்துள்ள கூட்டணிக் கட்சிகள், இந்த முறை அதிக சீட்டுகளை கைப்பற்றியாக வேண்டும் எனத் தீர்மானித்துள்ளன.
காங்கிரஸ் கட்சியில் மேலிட பொறுப்பாளர் களின் தலைமையில் அடிக்கடி தேர்தல் தொடர் பான ஆலோசனைக்கூட்டங்களை நடத்தி வருகிறார் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை. அந்த கூட்டங்களில், கலைஞர் காலத்தில் நாம் பெற்றதைப் போல அதிக இடங்களை தி.மு.க.விடம் இந்தமுறை பெறவேண்டும். கூட்டணி பலத்தில் தான் தி.மு.க.வின் வெற்றி அடங்கியுள்ளது. ஒரு வேளை 2021 தேர்தலில் ஒதுக்கப்பட்ட எண்ணிக் கையையே தி.மு.க. ஒதுக்கினால் ஒப்புக்கொள்ளக் கூடாது. மாற்றுக் கூட்டணியை பற்றி நாம் ஆலோசிக்க வேண்டும் என பகிரங்கமாகவே பேசுகின்றனர். இதனையடுத்து கூடுதல் சீட்டுகள் கேட்பது எங்களின் உரிமை என செல்வப் பெருந்தகையும் பொதுவெளியில் பேசிவருகிறார்.
அதேபோல, ஒவ்வொரு தேர்தலிலும் அதிக இடங்களைக் கேட்பதும், அதனை பெறுவதற்கான முயற்சிகளை எடுப்பதும் கூட்டணிக் கட்சிகளுக்கு வழக்கமானதுதான்; வாடிக்கையானதுதான். இவைகளை கருத்தில் கொண்டு திமுகவிடம் பேசுவோம் என்கிறார் வி.சி.க. தலைவர் திருமாவளவன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "கடந்த தேர்தலில் அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி ஜெயித்துவிடக் கூடாது என்பதால் தி.மு.க. ஒதுக்கிய குறைவான சீட்டுகளை ஏற்றுக்கொண்டோம். 6 சீட்டுகள் ஒதுக்கியதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. அத்தகைய சூழல் இந்த முறை தொடரக்கூடாது. அதனால் தி.மு.க. கூட்டணியில் அதிக இடங்களை கேட்போம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் எந்த கட்சியும் வெற்றிபெற முடியாது. கூட்டணி மாறும் சூழலை தி.மு.க. உருவாக்காது என நினைக்கிறோம்'' ” என்று பேசியுள்ளார்.
அதேபோல, அண்மையில் செய்தியாளர் களை சந்தித்த ம.தி.மு.க.வின் முதன்மைச் செய லாளர் துரை வைகோ, ‘"வைகோவுக்கு மீண்டும் ராஜ்யசபா சீட்டை தி.மு.க. ஒதுக்கவில்லை. இதனால் சட்டமன்றத் தேர்தலில் அதிக சீட்டு களை கேட்போம். அது கிடைக்காது போனால் அன்றைய சூழல்களுக்கேற்ப உயர்மட்ட குழுவில் விவாதிப்போம்''’என்று சொல்லியிருக்கிறார்.
தி.மு.க. கூட்டணியின் பிரதான கட்சிகள் தி.மு.க.வை மிரட்டிப் பார்ப்பதாகவும் நெருக்கடி கொடுப்பதாகவும் தி.மு.க.விடம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. (விஜய்) கட்சிகளின் தலைமைகள், தி.மு.க. கூட் டணி கட்சிகள் எங்களை நோக்கி வரும் என்று சொல்லிவருவதும், மாற்றுக் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் இருப்பதையும் வைத்து தி.மு.க.வை கூட்டணிக் கட்சிகள் மிரட்டிப் பார்க்கின்றன. இத னை தலைவர் (ஸ்டாலின்) எப்படி சமாளிக்கப் போகிறாரோ? என்கிறார்கள் தி.மு.க. மா.செ.க்கள்.
மாவட்டங்களில் தி.மு.க.வில் நடக்கும் மோதல்கள், கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிகள் ஆகியவை முதல்வர் ஸ்டாலினின் 200 இடங்கள் இலக்குக்கு சவாலாக மாறியிருக்கிறது. இதனை சமாளிப்பதில்தான் ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் இருக்கிறது.