இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் மதச்சார்பின்மையும் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்கிற அடிப்படையில் "மதச்சார்பின்மையைப் பாதுகாப்போம்' என்ற முழக்கத்தோடு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் பேரணி திருச்சியில் நடைபெற்றது.
டி.வி.எஸ். டோல்கேட் அருகே தொடங்கிய பேரணி கல்லுக்குழி, தலைமை தபால் நிலையம், ஒத்தக்கடை வழியாகச் சென்று திருச்சி மாநகராட்சி அலுவலகமருகே நிறைவடைந்தது. பேரணிக்கு முன்பாக திருமாவள வன் தலைமையில் மதச்சார்பின்மையைப் பாது காக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இந்தப் பேரணியில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என் பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதுமிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக் கானோர் நீலநிற ஆடையணிந்து பேரணியில் பங்கேற்றனர். பேரணியின் நிறைவில் நடந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார்.
"தமிழ்நாடு அரசியலின் திசைவழியை தீர்மானிப்பவர்கள் விடுதலை சிறுத்தைகள். அகில இந்திய அளவில் மதச்சார்பின்மைக்கு எதிரானவர் கள் யள் மதச்சார்பின்மைக்கு ஆதரவானவர்கள் என்கிற கூர்மைப்படுத்தும் அரசியலை வி.சி.க.தான் செய்துவருகிறது. முதலமைச்சர் பதவி குறித்து கவலைப்படுபவர்கள் அல்ல நாங்கள்.
பூர்வகுடிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதுதான் அம்பேத்கரின் கனவு. எந்த நேரத்தில் எதைச் செய்யவேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அரசியல் களத்தில் சமகாலத்தில் எங்களோடு புறப்பட்டவர்கள் வழிதவறி காணாமல் போய்விட்டார்கள். ஆனால் வி.சி.க. தவிர்க்கமுடியாத அரசியல் கட்சியாக உள்ளது. எங்களுக்கு யாருடைய ஆலோசனை களும் தேவையில்லை.
கட்டட வேலை செய்பவர்கள், ஆடு -மாடு மேய்ப்பவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என அனைவரும் கோட் அணியவேண்டும் என்ப தால்தான் நான் பேரணிக்கு வரும் அனைவரை யும் கோட் சூட்டுடன் வர கூறினேன். அம்பேத் கர்போல் நடக்கவேண்டும், அம்பேத்கர் போல் உணரவேண்டும். ஜாதி வெறியைப் பேசுபவர்கள் அல்ல வி.சி.க. நாங்கள் ஆண்ட பரம்பரை அல்ல அறிவுப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.
அம்பேத்கரை தலைவராக ஏற்றுக்கொண்ட வர்கள் வி.சி.கவினர். வி.சி.க.வினர் எப்பக்கமோ அப்பக்கமே வெற்றி. தேர்தலைப் பற்றி கவலைப் படாமல் தேசத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள் நாம் என்பதற்கு சாட்சிதான் இந்தப் பேரணி''’என்றார்.
இந்த கூட்டத்தில் வி.சி.க. மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார், சிந்தனைச்செல்வன், வன்னி அரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ் பனையூர் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.