4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.
அந்த வகையில், மகாராஸ்டிரா மாநிலத்தில் உள்ள மைதானத்தில் நேற்று (19-10-23) இந்தியா - பங்களாதேஷ் அணிகள் உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் மோதின. இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிக் கொண்டிருந்தது. அந்த இன்னிங்சில் 9வது ஓவரில் பாண்ட்யா பந்து வீச அழைக்கப்பட்டார். அவர் தனது இரண்டாவது பந்தை வீசிய பின்பு மூன்றாவது பந்தை வீசினார். அப்போது, பங்களாதேஷ் அணியின் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ், பந்தை நேர்பகுதியில் அடித்தார். அதில், அந்த பந்தை தடுக்க தயாரான பாண்ட்யா கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவரது இடது கணுக்கால் அடிபட்டது. வலியால் துடித்த் பாண்ட்யாவுக்கு மைதானத்திலேயே முதலுதவி வழங்கப்பட்டது. இருப்பினும், வலி அதிகமாக இருந்த காரணத்தினால் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
அதை தொடர்ந்து, ஸ்கேன் எடுத்து காயத்தின் தன்மையை அறிய அருகில் உள்ள மருத்துவமனைக்கு பாண்ட்யா அழைத்து செல்லப்பட்டார். இதற்கிடையே, எஞ்சிய மூன்று பந்துகளையும் விராட் கோலி வீசி முடித்தார். மேலும், பாண்ட்யாவுக்கு பதில் சூர்யகுமார் யாதவ் பீல்டிங் செய்தார். இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்படும் ஹர்திக் பாண்ட்யா காயத்தில் சிக்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டிகளில், ஹர்திக் பாண்ட்யா இதுவரை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.