
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 25வது போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று (11.04.2025) இரவு நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்லத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பு 103 ரன்களை மட்டுமே குவித்தது.
சென்னை அணியில் அதிகபட்சமாக சிவம் துபே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார். விஜய் சங்கர் 21 பந்துகளில் 29 ரன்களையும், ராகுல் திரிபாதி 16 பந்துகளில் 22 ரன்களையும் எடுத்தனர். எனவே கொல்கத்தா அணி வெற்றி பெற 104 ரன்களை சென்னை அணி இலக்காக நிர்ணயித்தது. அதனைத் தொடர்ந்து 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணி களம் இறங்கியது. அதன்படி கொல்கத்தா அணி 10 ஓவர்கள் 1 பந்தில் 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்களை விளாசி வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் 18 பந்துகளில் 44 ரன்களை குவித்தார். குயின்டன் டி காக் 16 பந்துகளில் 23 ரன்களை குவித்தார். மேலும் அஜிங்க்யா ரஹானே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 20 ரன்களையும் குவித்தார். இதனால் சென்னை அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் தனது அற்புதமான ஆட்டத்திற்காக இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை கொல்கத்த அனியை சேர்ந்த சுனில் நரேன் வென்றார்.
இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி 3 போட்டிகளில் வெற்றியையும், 3இல் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியளில் 3வது இடத்தில் உள்ளது. அதே சமயம் சென்னை அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் வெற்றியையும், 5இல் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியளில் 9வது இடத்தில் உள்ளது. முன்னதாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கையில் காயம் அடைந்திருந்தார். இதனையடுத்து அந்த அணிக்கு கேப்டனாக தோணி நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 18 வருட ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் சென்னை அணி முதல் முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் மிகக்குறைவான (103) ரன்னை பதிவு செய்தது இந்த போட்டி அகும். அதே போன்று ஒரு இன்னிங்ஸில் ஸ்பின்னர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது முதல் முறையாகும். அதோடு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி 3 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைவதும் முதல் முறையாகும்.