Skip to main content

கரோனா பரவல் எதிரொலி!!! வீரர்களை இடமாற்றிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்...

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

Australia

 

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் போட்டியையடுத்து 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடர் நடைபெறவுள்ளது. இறுதியாக இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

 

சிட்னியில் முகாமிட்டுள்ள இந்திய வீரர்கள், தங்களது கரோனா பரிசோதனையை நிறைவு செய்ததையடுத்து அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்டு பகுதியில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு ஆஸ்திரேலிய பகுதியில் உள்ள மாகாணங்கள் தங்களது எல்லையை மூடியுள்ளன. மேலும், பிற பகுதியில் இருந்து வரும் நபர்களை கட்டாய 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவும் தீர்மானித்துள்ளன.

 

இதனையடுத்து, இந்தியாவிற்கு எதிரான தொடரில் பங்கேற்கும் தெற்கு ஆஸ்திரேலிய பகுதியைச் சேர்ந்த வீரர்கள் பட்டியலிடப்பட்டு, தனி விமானம் மூலம் அவர்கள் சிட்னி நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். தற்போது சிட்னியில் தங்கவைக்கப்பட்டுள்ள இவ்வீரர்கள், விரைவில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.