Skip to main content

எம்.ஜி.ஆரின் பெயர் உதயசூரியன்…

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

திராவிட இயக்க எழுத்தாளர்களும் அதன் கவிஞர்களும் சம்பந்தப்பட்டால் படம் வெற்றிபெறும் என்ற அந்த இயக்கத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத படத் தயாரிப்பாளர்களும் நம்பிக்கொண்டிருந்த காலம். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேர்ந்துகொண்டார்.1957-இல் தி.மு.க.விற்கு உதயசூரியன் சின்னம் கிடைத்தது. இதே ஆண்டில் சக்கரவர்த்தித் திருமகன். இதில் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தின் பெயர் உதயசூரியன். வெற்றிமேல் வெற்றி குவிக்கும் மாவீரன் பாத்திரம். சட்டசபை தேர்தலிலில் தி.மு.க. 15 இடங்களைப் பெற்றது. அடுத்து புதுமைப்பித்தன். அமைச்சரின் அடிமையான அரசனை பைத்தியக்கார வேடத்தில் வெல்லும் கதை. இது மு.கருணாநிதியின் நாடகம். 1959இல் அண்ணாவின் சிறுகதைக்கு இராம. அரங்கண்ணல் வசனம் எழுதிய "தாய் மகளுக்குக் கட்டிய தாலி'யில் நடித்தார். 1960இல் கண்ணதாசன் வசனத்தில் மன்னாதி மன்னனில் "அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா' என்று பாடினார், அச்சம் இல்லாமல்.அண்ணாவின் திரைக்கதை வசனத்தில் "நல்லவன் வாழ்வான்' படத்தில் நடித்தார். "ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான். அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்' என்று பாடினார். ஒருவனே தேவன் என்றது அண்ணாதான்.

mgr image

1958 இல் இவரது சொந்தப்படம் நாடோடி மன்னன்'. எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் இவரது சொந்தக் கம்பெனி. இதன் சின்னமாக ஆணும் பெண்ணுமாக இருவர் தங்கள் கைகளில் தி.மு.கழகக் கொடியைப் பற்றியிருந்தனர்.ஆதித்திராவிடர் வாழ்வைச் சீரோடு விளக்கும் செந்தமிழே வணக்கம் என்று துவக்கப்பாடல் பாடப்பட்டது. திராவிட இனங்களின் கூட்டு முழக்கமாகவும் ஓர் காட்சியில் ஒரு பாட்டு சேர்க்கப்பட்டது. பார்புகழும் உதயசூரியனே!என்று சுரதாவும் ஒரு பாடல் எழுதியிருந்தார். எங்கள் திராவிட பூங்காவில் மலர்ந்த வேந்தே என்று அப்பாடல் நிர்ணயித்தது.நானே போடப்போறேன் சட்டம் - பொதுவில் நன்மை பயக்கம் திட்டம்என்று பட்டுக்கோட்டையின் பாடலுக்குக் காதலனாகத் தி.மு.கழகத்தையும் காதலிலியாக மக்களையும் ஒப்பிட்டு உட்பொருள் கொண்டனர்.படமும் மாபெரும் வெற்றி பெற்றது. மதுரை விழாவில் முத்து, 110 சவரனில் தங்கவாளைப் பரிசளித்தார். அண்ணாவும் கருணாநிதியும் அவரைப் பாராட்டினர். இயக்கக் கொள்கை, இலட்சிய விளக்கம், மயக்கும் மடமையைக் கொளுத்தும் மார்க்கம் கலையில் காணச் செயல்முறை வகுத்தார் என்று கலைஞர் பாடினார்.

1961-இல் "அரசிளங்குமரி'க்குக் கருணாநிதி வசனம் எழுத எம்.ஜி.ஆர். நடித்தார். 1962 இல் "ராணி சம்யுக்தா' படத்தில், உதய சூரியன் மலரும் போது உனது கண்கள் மலரட்டும் என்று கண்ணதாசனின் பாடலைப் பாடினார். 1963இல் காஞ்சித் தலைவன் என்ற படத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார். இது அண்ணாவுக்கான பட்டமானது. கலைஞர் கதை வசனம். வடபுலத்துப் படையெடுப்பை எதிர்த்துக் கிளம்பும் கதை, பாடல். இப்படித்தான் இவரது புரட்சி வேடத்தைத் தன் படங்களில் போட்டுக் கொண்டார். ஆனால் அவ்வப்போது வேடம் கலையும், மேல் பூச்சு உதிரும். இவர் ஏழைத் தொழிலாளியாக முதலாளி களின் அநியாயத்தை எதிர்ப்பார். வில்லன்களைத் தண்டிக்காமல் மக்களிடமோ சட்டத்திடமோ ஒப்படைத்து விடுவார் அல்லது திருத்திவிடுவார். எல்லா ஆபத்துகளையும் முறியடித்து வெற்றிபெறுவார். கடைசியில் வில்லன் மகளைத் திருமணம் செய்து கொள்வார். ஆடுபகை குட்டி உறவு கதைகள்தான். எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் அடித்தட்டு நாயகனாக தான் இருக்கின்ற அமைப்புக்குள் எது நியாயம் என்று கருதப்படுகிறதோ அதையே வழங்குவதன் மூலம், நிலவும் முறையை விமர்சிப்பதற்கு மாறாக அதனை மறு உறுதிப்படுத்து வதோடு, அதை நிலைநாட்டவும் செய்கிறார். ஆகவே, இது மனம் மாறிய, சுரண்டல்காரர்களால் உருவாக்கப்பட்ட சொத்து, அதிகார உறவுகளால் ஆன உலகமே ஆகும். ஆகவே, எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் புகழ் என்பது சொத்துகள் உடைய நாயகனுக்கு உரியது.

mgr kalaingnar dmk image

அது சொத்தற்றவர்களுக்கு இல்லை. இது வீரகாவியக் கதைப்பாடல்களில் ஒருவர் காண்பதற்கு முற்றிலும் எதிர்மறையானதாகும். சுருக்கமாக, புரட்சிகரமான நாட்டுப்புற நாயகர்களைக் கருத்தியல்ரீதியாக மதிப்புக் குறைக்கப்பட்ட வடிவத்தில் எம்.ஜி.ஆர் திரையில் அடையாளப்படுத்துகிறார். எதிர்ப்பதற்குப் பதிலாக மேல்தட்டு மதிப்பீடுகளுக்கு எம்.ஜி.ஆர். எனும் நாயகன் தலைவணங்குவதன் மூலம், திரை ஊடகத்தின் மூலம் பிரச்சாரம் செய்யும் அதே சமயம் அடித்தட்டு மக்களின் போராட்டத்தின் மேல் பூச்சை மட்டும் தொடர்ந்து தனதாகத் தக்கவைத்துக் கொள்கிறார்.

 

எழுதியவர் : காவ்யா சண்முகசுந்தரம் .