Skip to main content

தவிர்க்க முடியாததா பிளாஸ்டிக்? ஒரு அலர்ட் பதிவு..! வழியெல்லாம் வாழ்வோம் #4

Published on 21/03/2018 | Edited on 22/03/2018
vazhiyellaam

 

உங்கள் குழந்தைகள் நலமா? - பாகம் 2

 

நம் குழந்தைகளின் உணவுமுறை பற்றி சில குறிப்புகளை சென்ற வாரம் பார்த்தோம். இவ்வாரம் உணவுகளை உண்ண, பானங்களை அருந்த நாம் பயன்படுத்தும் தட்டுகள், பாத்திரங்கள், குவளைகள், போத்தல்கள் (பாட்டில்கள்) பற்றிய சில அறிவியல் உண்மைகளை அலசலாம். 

 

முன்பெல்லாம் குளிர்பானங்களை அருந்த மட்டுமே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி கப்கள், டம்ளர்கள் போன்றவை இன்று அதிசூடான பானங்களைப் பருகவும் பயன்படுத்தப்பட்டு, குழந்தைகளின் உடலுக்குள் தேவையற்ற தீங்குகளை செலுத்துகின்றன. எண்ணற்ற தீமைகளை உள்ளடக்கிய நெகிழி பொருட்கள் சர்வ சாதாரணமாய் உணவுச்சந்தையில் வலம்வருகின்றன. கடைகளில் டீ, காபி, சூப் போன்ற சூடான பொருட்களை அருந்தவும், பள்ளிகளுக்கு குழந்தைகள் தண்ணீர் கொண்டு செல்ல பயன்படும் கொள்கலனாகவும், வீட்டில் பொருட்களை சேமிக்கும் பாத்திரங்கள் வகையாகவும் இந்த நெகிழி எனும் அரக்கன் நம் வாழ்வில் தவிர்க்க இயலா இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறான். 


இவ்வகையான நெகிழி பொருட்கள் மற்றும் மெழுகால் முலாம் பூசப்பட்ட காகிதப் பொருட்களின் தன்மைகளையும், அவற்றில் சூடான பானங்களை உருவத்தால் ஏற்படும் வேதியியல் மாற்றங்களையும், அம்மாற்றங்களால் நம் உடலுள் விளையும் தீங்குகள் பற்றியும் பார்க்கலாம்.  

 

vazhiyellaam


  
நெகிழி குவளைகள், பைகள்: 


இன்று அதிக அளவில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் எனப்படும் நெகிழியால் செய்யப்பட்ட தட்டுகள், பாத்திரங்கள், குவளைகள் போன்றவற்றால் உடலில் பல வேதியியல் மாற்றம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. ”பிளாஸ்டிக் நெகிழும் தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்பதற்காக ‘பிளாஸ்டிசைஸர்’ எனப்படும் கூட்டுப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. உணவுப் பொருட்களைச் சேமிப்பதற்கு என்றே  “ஃபுட் கிரேட் பிளாஸ்டிக்ஸ்”  என்ற தனி ரகம் உள்ளது. அதிலும் ‘உணவுத் தரக் கட்டுப்பாடு’ முறையின் கீழ் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற சட்டம். ”40 மைக்ரான்" அடர்த்திக்குக் கீழே உள்ள பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால், இன்னும்  பல உணவகங்களில் இந்தச் சட்டத்தை மதிக்காமல், சாம்பார், ரசம், சட்னி போன்ற உணவு வகைகளை மிக மெல்லிய (அதாவது 40 மைக்ரான் அடர்திக்கு குறைவான) பிளாஸ்டிக் பைகளில்தான் கட்டித் தருகிறார்கள். இது ஆபத்துக்கான காரணி. 

 

ஏனெனில், சூடான பானங்களை அல்லது பொருட்களை நெகிழியில் போடும்போது; நெகிழியில் இருக்கிற வேதிப்பொருள் உணவில் இருக்கும் வேதிப் பொருளுடன் கலக்கும். இந்த வேதியியல் விளைவுக்கு ‘மைக்ரேஷன்’ (மூலக்கூறுகளின் இடப்பெயர்ச்சி நிகழ்வு) என்று பெயர். இம்மாதிரியான இடப்பெயர்ச்சி நெகிழியைப் பயன்படுத்துகையில் மிக அதிகமாக உள்ளது. உணவு வகைகளில், காரத்தன்மை அதிகமாக இருந்தால், அது நெகிழியுடன் சேர்ந்து உடனடியாய் நச்சுத்தன்மை உடையதாக மாறும். அதாவது, நெகிழியில் உள்ள வேதிப்பொருட்களும், உணவுப் பொருட்களில் உள்ள வேதிப்பொருட்களும் சேர்ந்து உணவை நச்சுத்தன்மை உடையதாக மாற்றுகின்றன. இதனால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை போன்றவை அடிக்கடி ஏற்படுகின்றன. 

 

vazhiyellaam


 
அதுபோலவே கொழுப்புச்சத்து அதிகம் உள்ள அசைவ உணவுகளில் பிளாஸ்டிக் மிக வேகமாக 'மைக்ரேஷன்’ நடத்தும். அப்போது பிளாஸ்டிக்கின் வேதிப் பொருட்கள் அசைவப் பொருட்களுடன் கலந்து நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறிவிடும். இது புட் பாய்சன் எனப்படும் ஒருவகை தற்காலிக நச்சுத்தன்மைக்கு வழிகோலுகிறது.  எனவே பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்படும் உணவுப் பொருட்கள், குளிர்பானம் போன்றவற்றை முடிந்த வரை தவிர்த்துவிடுவதும் நல்லது. ஏனென்றால், குளிர்பானங்களில் உள்ள அமிலத்தன்மை  'மைக்ரேஷன்’ அளவை துரிதப்படுத்தி உடனடி ஒவ்வாமையை உண்டாக்குகின்றன. 


இட்லித் தட்டில் துணிக்குப் பதிலாக, பிளாஸ்டிக் பயன்படுத்தி இட்லி தயாரிக்கும் பல கடைகளும் இருப்பதாக செய்திகள் வருகின்றன. இவ்வாறு  தயார் செய்யப்படும் இட்லிகளை உண்ணும்போது  புற்றுநோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன. 

 

காகித குவளைகள்,  பைகள்: 

 

இப்போது நாகரீகம் என்ற பெயரிலும், மனித வளங்களைக் குறைத்து; வேலை செய்பவர்களுக்கான ஊதியத்தை மிச்சம் செய்வதற்காகவும், கடைகளில் பயன்படுத்தப்படும் ஒருவகை காகிதக் குவளைகள் (பேப்பர் கப்கள்) `யூஸ் அண்ட் த்ரோ’ ரக குவளைகள்.  இவற்றில் தண்ணீர் ஊற்றும்போது காகிதம் கரைந்து, பானங்கள் ஒழுகிவிடாமல் இருக்க குவளைகளில் மெழுகு தடவப்படுகிறது. மரப்பிசினில் இருந்து எடுக்கப்படும் மெழுகை மட்டுமே பேப்பர் கப் செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை அமெரிக்காவின் ‘எஃப்.டி.ஏ’ (Food and Drug Administration) ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்தியாவில் பெரும்பாலும் பெட்ரோ-கெமிக்கல் மெழுகுதான் பயன்படுத்தப்படுவதாக தெரியப்படுகிறது. டீ, காபி, சூப் போன்ற சூடான பானங்களை அருந்தும்போது, இந்த பெட்ரோ-கெமிக்கல் மெழுகும் அந்த பானத்துடன் கலந்து நம் வயிற்றுக்குள் சென்றுவிடுகிறது.  தொடர்ச்சியாக, தொடர்ந்து மெழுகு கலந்த சூடான பானங்களைக் குடிப்பதால் மஞ்சள்காமாலை, வயிற்றுப்புண், புற்றுநோய் போன்றவை ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என சில ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த மெழுகின் விளைவால் இளம் வயதினருக்கு உடல்பருமன், சர்க்கரைநோய் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். இவை பெண்களுக்கு பல்வேறு ஹார்மோன் பிரச்னைகளை  உண்டாக்குவதால், பருவமடைவதில் சிக்கல், மார்பகப் புற்றுநோய் போன்றவை  ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

 

ஸ்டைரோபோம் குவளைகள், பைகள்:

  
காகிதக் குவளைகள் போலவே, ஸ்டைரோபோம் எனப்படும்  இன்னொருவகை பைகளும், குவளைகளும்  உள்ளன.  இவ்வகை ஸ்டைரோபோம்களில் சூடான பானங்களை ஊற்றும்போது அல்லது மைக்ரோவேவ் அடுப்புகளில் ஸ்டைரோபோம் குவளைகளில் பொருட்களை வைத்து சூடேற்றும்போது, இவற்றில் உள்ள ஸ்டைரீன் எனப்படும் வேதிப்பொருள் பானங்களுள் இடம்பெயர்கிறது. எனவே பானங்களோடு ஸ்டைரீனையும் குழந்தைகள் உட்கொள்கின்றனர். தொடர்ந்து இவ்வகையில் ஸ்டைரீன் உட்கொள்ளும்போது, குழந்தைகளுக்கு தூக்கமின்மை, நரம்புமண்டலம் சார்ந்த பிரச்சனைகள், பிளேட்லெட்டுகள் எனப்படும் ரத்த சிறுதட்டுகளின் அளவு குறைதல் ஆகியவை ஏற்படுகின்றன.   மொத்தத்தில் நெகிழிகள் மற்றும் மெழுகு தோய்த்த காகிதக் குவளைகள் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்ல ஆரம்பித்து இறுதியில் உயிரை எடுக்கும் காரணிகளாகவே இருக்கின்றன.

(தொடரும்....)