Skip to main content

தண்டனை வழங்குவதற்கு நிகரான தமிழ்ச்சொல் தெரியுமா??? - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 7

Published on 08/06/2018 | Edited on 09/07/2018

ஐம்பதுக்கும் மேற்பட்ட அகராதிகள் வெளியாகியிருப்பினும் நமக்கேற்ற அகராதிகளைத் தேடித் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான அகராதிகள் வெளியாகியிருக்கும் என்று நினைக்கிறேன். தமிழில் அவ்வளவுக்கு வெளியாகவில்லை. ஓர் அகராதியைத் தேர்ந்தெடுப்பதற்குச் சில அளவுகோல்கள் இருக்கின்றன. முதலில் அதைத் தொகுத்த பெருமானின் தகுதிநிலையைப் பார்க்க வேண்டும். மொழிப்புலமையில் ஆழங்கால்பட்டவராக அவர் இருத்தல் வேண்டும். தமிழுக்கென்றே தம் வாழ்க்கையை ஈந்தவராக இருத்தல் நன்று.  அவ்வகையில் தமிழில் வெளியான தலைசிறந்த அகராதிகள் யாவும் தகுதி வாய்ந்த தமிழறிஞர் பெருமக்களால்தாம் தொகுக்கப்பட்டிருக்கின்றன. 

 

soller ulavu


 

 

 

அடுத்ததாக, ஓர் அகராதியை வெளியிட்டவர்கள் யார் என்று பார்க்க வேண்டும். தமிழ்நாட்டு அரசுக்குத் தம் ஆட்சிப் பரப்பின் மொழியைப் பேணிப் புரக்கும் பெரும்பொறுப்பு உண்டு. அதனால் தமிழ்நாட்டு அரசு வெளியிட்ட அகராதிகள் எனில் சிறப்பு. பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களின் மொழித்துறைகளும் மொழியாய்வு அமைப்புகளும் அகராதிகளை வெளியிடும் பொறுப்பை வகிக்கின்றன. அவ்வகையில் வெளியிடப்பட்ட அகராதிகள் எவையென்றும் பார்க்க வேண்டும். 

 

இவ்விரண்டும் இல்லாமல் தனிப்பட்ட புத்தக வெளியீட்டாளர்களும் அகராதிகளை வெளியிட்டிருக்கிறார்கள். தனிப்பட்ட எழுத்தாளர்களும் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுடைய முனைப்பும் உழைப்பும் எத்தகையது என்பதைக் கணித்தும் வாங்கலாம். ஒரு பதிப்பகம் என்றால் அங்கே கட்டாயம் திருக்குறள் உரைநூலும் தமிழகராதியும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்பது முற்காலத்தில் எழுதாத விதியாக இருந்தது. இன்றைக்கும்கூட எவ்வொரு பதிப்பாளும் இவ்விரண்டு நூல்களையும் வெளியிடுவதில் ஆர்வமுடையவராகவே இருக்கின்றார். திருக்குறள் உரைநூலும் தமிழ்மொழி அகராதியும் என்றைக்கும் விற்றுக்கொண்டே இருக்கும் நூல்கள் என்பது அவர்களுடைய வணிகக் கணக்கு. 

 

 

 

அகராதி நூல்களைப் பொறுத்தவரையில் காலத்தால் பழைமையானதை வாங்குவது சிறப்பு. அதற்காக, வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதியைத்தான் வாங்க வேண்டும் என்றில்லை. ஐம்பதாண்டுகள் பழைமையானதை வாங்கலாம். தற்காலத் தமிழகராதிகளை வாங்குவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவற்றில் இலக்கியத்தில் ஆளப்படும் சொற்கள் தொகுக்கப்பட்டிருக்கும் என்று சொல்வதில்லை. ஏனென்றால் தற்காலத் தமிழகராதிகள் தற்காலப் பயன்பாட்டில் உள்ள சொற்களைத்தாம் கணக்கில் எடுத்துக்கொள்ளும். எடுத்துக்காட்டாக, தற்காலத் தமிழகராதி ஒன்றில் “ஒறுத்தல்” என்ற சொல்லுக்குப் பொருள் இல்லை. தண்டனை வழங்குதல் என்பதற்கு நிகரான நற்றமிழ்ச்சொல் ஒறுத்தல் என்பது. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். 

 

 

 

பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அகராதிகளை முதற்கண் வாங்கலாம். சென்னைப் பல்கலைக் கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆகியவை வெளியிட்ட அகராதிகள் அச்சில் இருப்பின் பாய்ந்து வாங்கிவிட வேண்டும். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட “தமிழ் தமிழ் அகர முதலி” என்ற அகராதி சிறப்பாக இருக்கிறது. கு. சண்முகம் பிள்ளை தொகுத்தளித்த அவ்வகராதி எனக்கு மிகவும் பயன்படுகிறது. அந்நூலைத் தற்போது “உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்” வெளியிட்டிருக்கிறது. அதைத் தேடி வாங்குங்கள். அதன் விலை ஆயிரம் உரூபாய் என்று பார்த்ததாக நினைவு. தேவநேயப் பாவாணரும் அவர்வழியொற்றியவர்களும் தொகுத்த “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி” என்பதுதான் தமிழ் அகராதிகளில் தலையாயது. ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட நூற்பாகங்களால் ஆகிய அந்நூற்றொகுதியைப் பயன்படுத்துவதற்கு எடைத்தூக்கலில் பதக்கம் பெற்றிருக்க வேண்டும். “சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி” கிடைத்தால் எதை விற்றேனும் அதைப் பெறுக.


அபிதான சிந்தாமணி என்றொரு நூலும் இருக்கிறது. அது பெயர்ச்சொல்லகராதி எனப்படும். ஆ.சிங்காரவேலு முதலியாய் தொகுத்த அந்நூலில் பெயர்ச்சொல் விளக்கங்கள் இருக்கும். மொழியகராதியில் ‘கபிலர்’ என்ற சொல்லுக்கு விளக்கம் இராது. அபிதான சிந்தாமணியைப் போன்ற பெயர்ச்சொல்லகராதியில் விளக்கம் இருக்கும். ஆனால், பெயர்ச்சொல் அல்லாத பிற சொற்களுக்கு அபிதான சிந்தாமணியை நாடக்கூடாது.  

 

முந்தைய பகுதி:

திருக்குறளில் உள்ள இந்த சொல், தமிழ்ச் சொல்லா? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #6

 

அடுத்த பகுதி:

நூறு கதவுகளைத் திறக்கும் ஒற்றைத் திறவுகோல் -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #8