Skip to main content

பேச்சுவார்த்தை தோல்வி... தொடரும் கடும் மோதல்... தலிபான்களை சிறைபிடித்ததாக எதிர்ப்புக்குழு தகவல்!

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

taliban vs resistance force

 

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறிவிட்டதால், விரைவில் தலிபான்கள் தங்களது ஆட்சியை அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதற்கிடையே ஆப்கன் அதிபராகத் தன்னை அறிவித்துக்கொண்டுள்ள அம்ருல்லா சாலே, தலிபான் எதிர்ப்புக் குழு ஒன்றின் தலைவராக இருந்த அகமது ஷா மசூத்தின் மகனான அஹமத் மசூத்துடன் இணைந்து உருவாகியுள்ள போராளி குழு, தாலிபான்களால் இதுவரை கைப்பற்ற முடியாத பாஞ்ஷிர் பகுதியிலிருந்து தலிபான்களை எதிர்த்துவருகிறது.

 

இந்தசூழலில் சில தினங்களுக்கு முன்பு தலிபான்களுக்கும் - எதிர்ப்பு குழுவிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தநிலையில், திங்கட்கிழமை (30.08.2021) இரவு பாஞ்ஷிர் மீது தலிபான்கள் தாக்குதலைத் தொடங்கியதாகவும், இருதரப்புக்கும் நடந்த மோதலில் 7 முதல் 8 தலிபான்கள் உயிரிழந்ததாகவும் தலிபான் எதிர்ப்புக் குழு தலைவர் அஹமத் மசூத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

 

இதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமையும் நேற்றும் தலிபான்களுக்கும், எதிர்ப்புக் குழுவிற்கும் இடையே பாஞ்ஷிரின் நுழைவு வாயிலான குல்பஹார் பகுதியில் மோதல் நடைபெற்றதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் நேற்று, செவ்வாய்க்கிழமை இரவு நடந்த மோதலில் 34 தலிபான்கள் உயிரிழந்ததாகவும் 64 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

 

இந்தச் சூழலில் எதிர்ப்புக் குழுவுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தலிபான்கள் நேற்று அறிவித்தனர். எதிர்ப்புக் குழுவும் ‘தாங்கள் தொடர்ந்து சண்டையிடுவோம்’ என தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்றும் தலிபான்களுக்கும், எதிர்ப்பு குழுவுக்கும் கடும் மோதல் நடைபெற்றுள்ளது.

 

இதுதொடர்பாக தலிபான் தரப்பு, பாஞ்ஷிர் பகுதியில் எதிர்ப்புக் குழு தங்களைத் தாக்கியதாகவும், அதற்கு தாங்கள் கொடுத்த பதிலடியில் எதிர்ப்புக் குழுவிற்கு கடும் சேதாரம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் இந்த மோதல் குறித்து எதிர்ப்புக் குழுவின் செய்தி தொடர்பாளர், கடந்த 40 மணிநேரத்தில் தலிபான்கள் சில இடங்களில் தாக்குதலை நடத்தியதாகவும், எதிர்ப்புக் குழு பதில் தாக்குதல் நடத்தி தலிபான்களைத் தோற்கடித்ததாகவும், மோதலில் இதுவரை 115 தலிபான்கள் பலியானதாகவும் 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 55 தலிபான்களைத் தாங்கள் சிறை பிடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்