உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் படால் பாபு. இவருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த ஷனா ராணி என்ற பெண்ணிற்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு தொடர்ந்து பேசி வந்துள்ளனர். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காதலி ஷனா ராணியை கரம் பிடிப்பதற்காக படால் பாபு இந்திய எல்லையைக் கடந்து சட்ட விரோதமாகப் பாகிஸ்தானுக்கு நுழைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மண்டி பஹாவுதீன் பகுதியில் வைத்து அந்நாட்டு போலீசார் அவரை கைது செய்தனர். அவர்களிடம் தானும் ஷனா ராணியும் இரண்டு ஆண்டிற்கும் மேலாக காதலித்துவருவதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ளவே பாகிஸ்தான் வந்தேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஷனா ராணியை அழைத்து விசாரித்த போது அப்படி ஒரு எண்ணம் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார். அதன் பின் படால்பாபுவை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் 10 ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.