காலிஸ்தான் பயங்கரவாதிகள் தங்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்று பல வருடங்களாக வலியுறுத்தி வருகின்றனர். இதில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வாழும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் காலிஸ்தானுக்கான கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இதில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் தலைமையில் காலிஸ்தான் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இருந்த ‘நீதிக்கான சீக்கியர்’ குழுவை, பிரிவினை ஏற்படுத்துவதன் காரணமாக உபா (UAPA) சட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு தடை செய்தது.
பஞ்சாப்பை சேர்ந்த நிஜார், 1997ல் கனடாவில் இடம்பெயர்ந்து காலிஸ்தான் டைகர் போர்ஸ் தலைவராகவும், சிக்ஸ் பார் ஜஸ்டிஸ் அமைப்பின் கனடா பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்த இரண்டு அமைப்புகளுமே, பிரிவினை தாக்குதலை ஏற்படுத்துவதன் காரணமாக இந்திய அரசால் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் ஆகும். இதற்கிடையில் தான், ஹர்தீப் சிங் கனடாவின் சுரே நகரின் குருத்துவாரா அருகில் மர்ம நபர்களால் கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். நிஜ்ஜார் படுகொலைக்கு, இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்க, அதற்கு இந்தியா மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்தியா - கனடா உறவு இடையே தூதரக ரீதியாக விரிசல் ஏற்பட்டுள்ளது.
பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலைக்கு சதி செய்ததாகக் கூறி, இந்தியர்களான கரன் பிரார், அமந்தீப் சிங், கமல்ப்ரீத் சிங் மற்றும் கரன்ப்ரீத் சிங் ஆகிய 4 பேரை கடந்த மே 2024ஆம் ஆண்டு கனடாவின் பல்வேறு பகுதிகளில் வைத்து கனடா போலீசார் கைது செய்தது. இது தொடர்பான விசாரணை கனடா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 4 இந்தியர்களுக்கு கனடா நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை பிரிட்டிஷ் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, அடுத்த விசாரணையை பிப்ரவரி 11ஆம் தேதி ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.