அமெரிக்காவில் சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும் கவுதம் அதானி மீது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்கா நீதிமன்ற நீதிபதி, அதானி லஞ்சம் கொடுக்க சம்மதித்தது உண்மை தான் என்ற பரபரப்பு கருத்தை தெரிவித்து, அதானிக்கு பிடிவாரண்ட் பிறபித்து உத்தரவிட்டார். அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுத்திருப்பதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் அதானியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அதானி வழக்கு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி ஒருவர், அந்நாட்டின் அட்டர்னல் ஜெனரலுக்கு காட்டமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சார்பில் 5 முறை எம்.பியான லான்ஸ் குடன், அந்நாட்டு அட்டர்னல் ஜெனரலான மெரிக் பி கார்லாண்டிற்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, ‘வெளிநாட்டு நிறுவனங்கள் மீது நீதித் துறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கு மற்றும் விசாரணை போன்ற நடவடிக்கைகள், அமெரிக்காவின் வலுவான கூட்டணியில் ஒன்றான இந்தியா போன்ற நெருக்கமான நாடுகளின் ஒத்துழைப்பை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. அதோடு பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்.
பலவீனமான அதிகார வரம்பு மற்றும் அமெரிக்க நலன்களுக்கு தொடர்பு கொண்ட வழக்குகளைத் தொடருவதற்குப் பதிலாக, மோசமான நடிகர்களை உள்நாட்டில் தண்டிப்பதில் நீதித்துறை கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்காவின் அதிகரிக்கும் வன்முறை குற்றங்கள், பொருளாதார உளவு உள்ளிட்ட உண்மையான அச்சுறுத்தல்களை நாம் புறக்கணித்து, நமது பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பவர்களைப் பின்தொடரும்போது, அது நம் நாட்டில் முதலீடு செய்ய நம்பிக்கையுள்ள மதிப்புமிக்க புதிய முதலீட்டாளர்களை அசெளகரியப்படுத்துகிறது.
பல்லாயிரக்கணக்கான டாலர்களை முதலீடு செய்து அமெரிக்கர்களுக்கு பல்லாயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கும் நிறுவனங்களை குறிவைப்பது அமெரிக்காவிற்கு மட்டுமே தீங்கு விளைவிக்கும். நீதித்துறை தனது அதிகார வரம்பு அறிந்து செயல்பட வேண்டும். ஒரு வேளை இந்தியா, அதானியை நாடு கடத்த முடியாது என்று மறுத்துவிட்டால் என்ன செய்வீர்கள்?. அதானி மீதான குற்றச்சாட்டுகளில் உள்ள லஞ்சங்கள், இந்தியாவில் உள்ள இந்திய மாநில அரசு அதிகாரிகளுக்கு, இந்திய நிறுவனத்தின் இந்திய நிர்வாகிகளால் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எந்த அமெரிக்ககர்களுக்கு எந்தவிதமான சம்பந்தம் இல்லை. இதுவே ஜார்ஜ் சோரஸ் சம்பந்தப்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் மீது புகார் கூறினால் நீதித்துறை கண்டுக்கொள்வது இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.