சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டத்தில் உள்ள சர்கான் என்ற இடத்தில் தனியார் இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆலையின் புகைபோக்கி இன்று (09.01.2025) மாலை திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் ஆலை நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரும்பு உருக்கு ஆலை இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முங்கேலி மாவட்ட ஆட்சியர் ராகுல் தியோ கூறுகையில், “ இரும்பு உருக்கு ஆலையின் புகைபோக்கி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் அங்கிருந்த தொழிலாளர்கள் சிக்கினர். சுமார் நான்கு தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். மனோஜ்குமார் என்ற தொழிலாளி உயிரிழந்துள்ளார். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மாவட்ட நிர்வாகத்தின் குழுக்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.