Skip to main content

புற்றுநோயால் அவதிப்பட்ட மனைவியை 140 கி.மீ. சைக்கிளிலேயே மருத்துவமனைக்கு அழைத்து வந்த கணவர்!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லைகள் மூடப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த அறிவழகன் (65) என்பவரின் மனைவி மஞ்சுளா (60) புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். மஞ்சுளாவுக்கு நோய் முற்றிய நிலையில் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்க வேண்டும். அதனால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், தமிழகம்- புதுச்சேரி எல்லைகள் மூடப்பப்பட்டு, பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதனால் கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு எப்படிச் செல்வது என்று புரியாமல் தவித்திருக்கின்றனர் முதிய தம்பதியினர்.

 

Wife is 140 kms. Her husband who brought her on the bicycle!


ஊரடங்கு முடிந்த பிறகு செல்லலாம் என்றாலும் மஞ்சுளாவின் உடல் நிலை சீராக இல்லை. நோயால் மனைவி அவஸ்தை படுவதைப் பார்க்கும் துணிச்சல் அறிவழகனுக்கு இல்லை. அதனால் தனது மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று நினைத்த முதியவர் அறிவழகன் தன்னிடமிருந்த பழைய சைக்கிளில் மனைவி மஞ்சுளாவை சைக்கிளில் அமர வைத்து மாயவரம், சீர்காழி, சிதம்பரம், கடலூர் என 140 கிலோமீட்டர் தூரத்தை இரவு முழுக்க கடந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.
 

Wife is 140 kms. Her husband who brought her on the bicycle!


கரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகள் அனைத்தையும் நிறுத்தி வைத்திருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் முதியவர் அறிவழகன் சைக்கிளிலேயே வந்த தகவலைக் கேட்ட மருத்துவர்கள் வியந்து உடனே மஞ்சுளாவை மருத்துவமனையில் சேர்த்து அவருக்குத் தேவையான சிகிச்சைகளைக் கொடுத்திருக்கிறார்கள். இருவரையும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைத்த மருத்துவர்கள் அவர்களுக்குத் தங்கள் செலவில் உணவுகள், மருந்துகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.


 

http://onelink.to/nknapp



இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இருவரையும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இலவசமாக கும்பகோணம் அனுப்பி வைத்திருக்கின்றனர் ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள். சிகிச்சைகள் அனைத்தும் முடிந்ததும், 'எப்படி இவ்வளவு துணிச்சலாக சைக்கிளிலேயே அழைத்து வந்தீர் என அறிவழகனிடம் மருத்துவர்கள் கேட்க, "என் மனைவிதான் சார் எனக்கு எல்லாம். அவ இல்லன்னா நான் இல்ல” என்று கூறி நெகிழ வைத்திருக்கிறார்.

67 வயது முதியவரின் மன தைரியமும், மனைவி மீது வைத்திருக்கும் அன்பும் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் அழிவதில்லை!


 

சார்ந்த செய்திகள்