
பாராளுமன்றத்தில் பாஜக அரசின் மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கப்போவதில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களிடம் கூறியது: ‘’மத்திய பாஜக அரசு மீது தெலுங்குதேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதிமுக ஆதரிக்கப் போவதில்லை. தமிழக பிரச்னைக்காக காவிரி மேலாண்மை வாரியம், காவிரி முறைப்படுத்தும் குழு அமைக்கக் கோரி கடந்த முறை நடந்த கூட்டத்தொடரின்போது பாராளுமன்றத்தை 22 நாள்கள் முடக்கினோம். அப்போது நமக்காக தெலுங்குதேசம் உள்ளிட்ட எந்த கட்சியும் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படாததற்காக, அவர்களின் பிரச்னைக்காக அக்கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது. அதை அதிமுக ஆதரிக்காது.
கர்நாடகா அரசு, காவிரியில் இருந்து ஜூலை மாதத்திற்கு 31.24 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும். இப்போது அங்கு மழை பெய்வதால் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. காவிரி ஒழுங்காற்றுக்குழு விதிகளின்படி நமக்குச் சேர வேண்டிய தண்ணீரைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.’’