Skip to main content

'மீதியை நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம்'- பதிலளிக்காமல் நகர்ந்த ஜெயக்குமார்

Published on 14/04/2025 | Edited on 14/04/2025
"We can take care of the rest tomorrow" - Jayakumar moved on without answering

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துவதற்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது செய்தியாளர்கள் 'அதிமுக பாஜக கட்டுப்பட்டில் வந்துவிட்டதாக திருமாவளவன் விமர்சித்துள்ளாரே' என்ற கேள்விக்கு, ''திருமாவளவன் ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக கூட்டணி அமைந்தால் அதிமுகவில் இருந்து விளங்குவதாக சொன்னார் என்று அவருடைய கருத்தைச் சொல்லி இருக்கிறார். நான் எந்த நேரத்திலும் அந்த மாதிரி சொல்லவில்லை. திட்டமிட்டு ஒரு பொய் செய்தியைப் பரப்புகிறார்கள். இயக்கத்தில் இருந்து விலகுவதாக நான் எப்போது சொன்னேன். நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்த செய்தியை வேண்டுமென்று சமூக வலைத்தளங்களில் நான்கு நாட்களாக ட்ரெண்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள். மீம்ஸ் போடுவது, கார்டு போடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஒரு வகையில் என்னால் யூடியூபர்களுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது. அதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி.

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை எங்கள் குடும்பம் திராவிட குடும்பம். என் அப்பாவுடைய அண்ணன் இயற்பெயர் தேசிங்கு. ஆனால் அவர் இன்றும் வடசென்னை பெரியார் என்று அழைக்கப்டுகிறார். இந்தி எதிர்ப்பு போராட்டம்; சுதந்திரப் போராட்டம் என அண்ணாவால் அடையாளம் கட்டப்பட்டு சென்னை மாநகராட்சியில் கவுன்சிலராக சீட்டு கொடுத்து நிலைக் குழு தலைவர்; சிறுசேமிப்பு துணை தலைவர் என இருந்தவர். இப்படி 75 ஆண்டுகால  நீண்டநெடிய திராவிட பாரம்பரியம் கொண்ட குடும்பம். தன்மானத்தோடு வாழ்ந்த குடும்பம். பதவிக்காக யார் வீட்டு வாசக்காலிலும் நிற்கும் பழக்கம் எங்கள் குடும்பத்திற்கும், எங்களின் சில பேருக்கும் கிடையாது. அதிமுக எங்களை அடையாளம் காட்டியது. அந்தஸ்தை கொடுத்தது. உலகம் முழுக்க என்னை தெரிகிறது என்றால் என்னை அடையாளம் காட்டியது யாரு அதிமுகவின் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தான். எனவே வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார்; அண்ணா; எம்ஜிஆர்; ஜெயலலிதா ஆகியோர் வழியில் என்னுடைய பயணம் தொடரும்'' என்றார்.

தொடர்ச்சியாக செய்தியாளர்கள் அதிமுக-பாஜக கூட்டணி குறித்த கேள்வி எழுப்ப 'மீதியை நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம்' என சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

சார்ந்த செய்திகள்