Skip to main content

திமுக ஒன்றியங்களைத் தட்டிப் பறிப்போம்!- விருதுநகர் மாவட்ட ஆளும் கட்சி கொக்கரிப்பு!

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

விருதுநகர் மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள் 200-ல் திமுக கூட்டணி 104 இடங்களைக் கைப்பற்றியது. அதே நேரத்தில், விருதுநகர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் 20- ல் 13 இடங்கள் அதிமுக வசமாகி உள்ளன. ஒரே மாவட்ட வாக்காளர்கள்தான்! ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாகவும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுகவுக்கும் ஆதரவாகவும் மாறி மாறி வாக்களித்துள்ளனர். அரசியல் கட்சிகள் சூட்சுமத்துடன் தேர்தல் வேலை பார்த்தால், வாக்காளர்களை தங்களின் திட்டத்துக்கு ஏற்ப வளைத்துவிட முடியும் என்பதற்கு விருதுநகர் மாவட்டமே உதாரணம்.   

virudhunagar district local body election elected candidates


விருதுநகர் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியைப் பொறுத்தமட்டிலும், அதிமுகவுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கை காட்டுபவரே தலைவர். அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தின் 2- வது வார்டில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த வசந்தி மான்ராஜுக்கே வாய்ப்பு அதிகமாக உள்ளது. துணைத் தலைவர் பதவிக்கு சிவகாசி வார்டுகளில் தேர்வான மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் முட்டிக்கொண்டாலும், விருதுநகர் மாவட்டத்தின் 7- வது வார்டில் வெற்றி பெற்ற, விருதுநகரைச் சேர்ந்த மச்சராஜா பெயரே பலமாக அடிபடுகிறது. அந்த அளவுக்கு, சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறாராம் மச்சராஜா.

virudhu nagar



நியாயமாகப் பார்த்தால், தேர்தல் வெற்றியின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள் 11-ல் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர் ஆகிய 7 ஒன்றியங்களில் திமுக தலைவர்களும், விருதுநகர், வெம்பக்கோட்டை ஆகிய இரண்டு ஒன்றியங்களில் அதிமுக தலைவர்களும் யூனியன் சேர்மன் நாற்காலியில் அமர வேண்டும். வத்திராயிருப்பும் நரிக்குடியும் மட்டுமே இழுபறி நிலையில் இருந்திருக்க வேண்டும். ஆளும்கட்சியின் சித்து விளையாட்டால், இவையனைத்தும் மாறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

virudhunagar district local body election elected candidates


வத்திராயிருப்பு ஒன்றியத்தில் அதிமுக கூட்டணியில் 6 உறுப்பினர்கள், திமுக கூட்டணியில் 6 உறுப்பினர்கள் தேர்வாகி சமநிலையில் இருந்தாலும், ஒரே ஒரு சுயேச்சை உறுப்பினரான, ஜான் பாண்டியனின் த.ம.மு.க.வைச் சேர்ந்த ரேகாவை, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தங்கள் பக்கம் இழுத்துவிட்டது. டிராக்டர் ஒன்றும் ரூ.30 லட்சமும் தருவதாகப் பேரத்தை முடித்திருக்கின்றனராம். அதிமுக சார்பில் போட்டியிட்டு 13-வது வார்டில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சிந்துமுருகனே இந்த ஒன்றியத்தின் தலைவர் என்று முடிவாகிவிட்டதாம். துணைத் தலைவர் பதவிக்கு,  10-வது வார்டு (அதிமுக) உறுப்பினர் பஞ்சவர்ணத்தின் பெயர் அடிபடுகிறது.  

virudhunagar district local body election elected candidates


நரிக்குடி ஒன்றியத்தில் அதிமுகவில் 5 உறுப்பினர்களும், திமுகவில் 6 உறுப்பினர்களும், அமமுகவில் ஒரு உறுப்பினரும், சுயேச்சைகள் இருவரும் தேர்வாகி உள்ளனர். அமமுக உறுப்பினர் இந்திராணி தரப்பில், இரண்டு கட்சிகள் பக்கமும் அவருடைய கணவர் ஜெயராஜ் காய் நகர்த்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.  இந்த ஒன்றியம் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஏரியா என்பதால், திமுக தரப்பில் 6- வது வார்டில் வெற்றி பெற்ற திமுக உறுப்பினர் அன்புச்செல்வியின் கணவர் ரமேஷ், லட்சங்களை வாரியிறைத்து சுயேச்சைகளை இழுப்பதில் மும்முரமாக இருக்கிறார். இவரைக் காட்டிலும், அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 14-வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் கையே இந்த ஒன்றியத்தில் ஓங்கியிருக்கிறது. ஏனென்றால், நரிக்குடி ஒன்றியத்தையும் தாண்டி, விருதுநகர் மாவட்டத்திலுள்ள திமுகவினருக்கும் படியளப்பவராக இருக்கிறார் இந்த ரவிச்சந்திரன். காரணம், மணலில் கோடி கோடியாகப் பணம் கொட்டுவதுதான். 4 வாக்குகளில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றதாக, அமமுக இந்திராணிக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் செல்வதாக மிரட்டியே தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கிறது அதிமுக.

virudhunagar district local body election elected candidates


ஆனாலும், ரூ.50 லட்சம் ரொக்கமும்,  தன் மனைவி இந்திராணிக்கு துணைத்தலைவர் பதவியும் கேட்டு, பேரம் நடத்தும் இரண்டு பெரிய கட்சிகளிடமும் அடம் பிடிக்கிறாராம் ஜெயராஜ். சுயேச்சைகள் இருவரையும் ரவிச்சந்திரன் மூலம் அதிமுக தரப்பில் எளிதில் வளைத்து விடக்கூடிய நிலையே இங்குள்ளது. ஆனாலும், அதிமுகவில் நரிக்குடி யூனியன் சேர்மன் வேட்பாளர் தோல்வியடைந்த நிலையில், பணபலத்தால் இந்த ஒன்றியத்தைக் கைப்பற்றினாலும், ஒதுக்கீட்டின் பிரகாரம் சுயேச்சை ஒருவரையே, அதிமுக தரப்பில் தலைவராக்கிட முடியும்.  இப்படி ஒரு இடியாப்பச் சிக்கல் ஆளும் கட்சிக்கு உள்ளது. சுயேச்சைகளை இழுப்பதற்கு ரூ.1 கோடி வரை பணத்தை இறைக்கும் திட்டத்தோடு, இரண்டு கட்சிகளுமே முனைப்பு காட்டி வருகின்றன. 

virudhunagar district local body election elected candidates


சாத்தூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள வெம்பக்கோட்டை ஒன்றியத்தில், எம்.எல்.ஏ. ராஜவர்மனின் சாதுர்யத்தால் 20-க்கு 20 என அனைத்தும் அதிமுக வசமாகிவிட, சாத்தூர் யூனியன் சேர்மன் சீட்டில் அதிமுக உறுப்பினரையே உட்கார வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம் எம்.எல்.ஏ. இத்தனைக்கும், சாத்தூர் ஒன்றியத்தில் 8 இடங்களைப் பிடித்திருக்கிறது திமுக. அதிமுக கூட்டணி வெற்றி பெற்றதோ 6 இடங்களில் மட்டுமே. எஞ்சியுள்ள சுயேச்சைகள் இருவரை மட்டுமல்ல, திமுக உறுப்பினர்களில் ஓரிருவரையும் தங்கள் பக்கம் இழுப்பதற்கு பிரயத்தனப்படுகிறது அதிமுக. உறுப்பினர்களின் தலைக்கு, தலா ரூ.30 லட்சம் வரை கொடுப்பதற்குத் தயாராகிவிட்டார்களாம் அதிமுக தரப்பில். 


மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் சுதாரித்த ஆளும் கட்சி,  ஒன்றியங்களில் கோட்டை விட்டதற்குக் காரணம் முழுக்க முழுக்க ஜாதி அரசியல் தான் என்கிறார்கள். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான பகைமையால், முன்னாள் அதிமுக எம்.பி.ராதாகிருஷ்ணன், சத்தமில்லாமல் திமுக தரப்போடு கைகோர்த்து, அமமுகவுக்கு வாக்குகளைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டதாக, அதிமுக தரப்பில் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த துரோகத்துக்கெல்லாம் ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறாராம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. சுயேச்சைகளை இழுப்பதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது.  திமுக உறுப்பினர்களை அதிமுக பக்கம் இழுத்து, நாம் யாரென்று காட்டுவோம் என்று சவாலே விட்டிருக்கிறாராம். 

virudhunagar district local body election elected candidates


திமுக, அதிமுக ஆகிய இரு தரப்புமே உஷாராகி, தங்களின் உறுப்பினர்களை திருச்செந்தூர், குற்றாலம் ஆகிய ஊர்களிலும், மாநிலம் கடந்து கேரளாவிலும் தங்கவைத்து, தங்கள் பிடியிலேயே வைத்திருக்கிறது. அந்த உறுப்பினர்களின் மொபைல்கள் ‘ஸ்விட்ச்- ஆப்’ நிலையிலேயே உள்ளன. பதவியேற்புக்காக 6- ஆம் தேதி மட்டும் அவர்களை விருதுநகர் மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர். இந்த ஒரு நாளில் அணி தாவல் போன்ற எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற விழிப்போடும், அடுத்து அவர்களை எங்கே அழைத்துச் செல்வது என்ற திட்டத்தோடும் உள்ளனர்.   

virudhunagar district local body election elected candidates



அருப்புக்கோட்டை ஒன்றியத்தில், அதிமுகவுக்கு ஒரே ஒரு உறுப்பினர்தான். திமுகவுக்கோ 10 உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர். திமுக மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் அரசியல் அனுபவத்தால் தான் இது சாத்தியமானது. தற்போது, திமுக உறுப்பினர்களையும் இழுத்து ஒன்றியங்களைத் தட்டிப் பறிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது ஆளும் கட்சி. திமுக மாவட்ட செயலாளர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆரும் தங்கம் தென்னரசுவும் காட்டும் முனைப்பில்தான், விருதுநகர் மாவட்ட திமுகவின் எதிர்காலம் உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்