
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்திற்கு உட்பட்டது நெடுங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் பிரபல தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தப் பட்டாசு ஆலையில் நேற்று (26.04.2025) காலை 10.45 மணியளவில் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பட்டாசு தயாரிப்பதற்கான மருந்து கலவை தயார் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் உராய்வு ஏற்பட்டு திடீரென எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த வெடி விபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் 5 அறைகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. இதனால் அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பட்டாசு வெடி விபத்தில் சிக்கி சொக்கம்பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 51), கூமாப்பட்டியைச் சேர்ந்த திருவாய்மொழி (வயது 48) மற்றும் எம். சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (வயது 35) ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாக்கியலட்சுமி (வயது 55), கோமதி (வயது 55), பாத்திமுத்து (வயது 55), ராபியா பீவி (வயது 50), ராமசுப்பு (வயது 43), லட்சுமி (வயது 40), முனியம்மாள் ஆகியோருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.