Skip to main content

போலி மருத்துவ சீட்டை கொடுத்த இருவர்... கடைக்காரர் எடுத்த நடவடிக்கையால் சிறையில் அடைப்பு!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

Two people who gave fake medical slips ... Jailed due to action taken by the shopkeeper

 

கோவை ஒப்பணக்கார வீதியிலுள்ள கணேஷ் மெடிக்கல் ஷாப் என்கிற கடையை நடத்திவருபவர் விஜய் அலங்காரம். இவர் கடந்த முப்பது வருடங்களாக அதே பகுதியில் கடையை நடத்திவருகிறார். இந்த நிலையில், நேற்று (27.07.2021) வெரைட்டி ஹால் சாலை பகுதியைச் சேர்ந்த முகமது ரசூல் மற்றும் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய இருவரும் கணேஷ் மெடிக்கல் கடைக்குச் சென்றனர். பின்னர் பீளமேடு பகுதியில் உள்ள சுமித் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலின் மருந்துச் சீட்டைக் கொடுத்து, அதில் குறிப்பிட்டுள்ள இரண்டு மாத்திரைகளைக் கொடுக்க கடைக்காரரை வற்புறுத்தியுள்ளனர்.

 

இதனால் சந்தேகமடைந்த விஜய் அலங்காரம், சுமித் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலுக்கு ஃபோன் மூலம் தொடர்புகொண்டு, “இந்த மருந்து சீட்டு நீங்கள் கொடுத்ததுதானா?” என கேட்டுள்ளார். அதற்கு மருத்துவமனை நிர்வாகம், தவறான மருந்து சீட்டு என தெரிவித்தது. இதனால்  கடைக்காரர் மருந்துகள் எதுவும் தரவில்லை. இதனால்  வாக்குவாதம் முற்றிய நிலையில், விஜய் அலங்காரம் ஒப்பணக்கார வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையின் அடிப்படையில் போதைக்காகவே இந்த மாத்திரைகளைக் கேட்டோம் என ஒப்புக்கொண்டனர். இதையடுத்து முகமது ரசூல், சக்திவேல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கோவையில் துப்பாக்கியுடன் வலம் வரும் ரவுடிகள்; விசாரணையில் அம்பலமான சதித்திட்டம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
 police arrested the robbers who were crawling with guns in Coimbatore

கோவை மாவட்டத்தில் செல்வபுரம் காவல் துறையினர் சொக்கம்புதூர் முத்தண்ணன்குளம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை போலீசார் வழிமறித்தனர். ஆனால், வந்தவர்கள் வழக்கத்துக்கு மாறாக முகபாவனைகள் செய்யவே போலீசாருக்கு சந்தேகம் கிளம்பியுள்ளது. இதனால் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். 

விசாரணையில்.. அவர்கள் கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்ற செவிட்டு சஞ்சய், கோவை தீத்திபாளையம் அருள் நகரைச் சேர்ந்த ஜலாலுதீன், கோவை இடையர்பாளையம் பி.என்.டி காலனியைச் சேர்ந்த கிட்டான் என்ற சரவணக்குமார் என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் மூவரும் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும்.. இங்கே எதற்கு சுற்றித் திரிகிறீர்கள்.. என்ன விவகாரம் என போலீஸ் கேட்டபோது, அவர்கள் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளனர். இதனால் மேலும் சந்தேகமடைந்த போலீசார், அந்த கும்பலில் இருந்து சஞ்சய் குமாரை  சோதனை செய்தனர். அப்போது ஒரு கை துப்பாக்கி இருந்தது. இதைக் கண்டு அதிர்ந்த போலீசார், உடனடியாக அதை அவனிடம் இருந்து பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் பிரபல ரவுடி சஞ்சய் ராஜு என்பவரின் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அத்துடன் கடந்த ஆண்டு ரவுடி சஞ்சய் ராஜூ, ஆவாரம்பாளையத்தில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் வெளிவந்தது. மேலும், இதில் சம்மந்தப்பட்ட ரவுடி கும்பலின் தலைவன் சஞ்சய் ராஜ், தற்பொழுது கோவை சிறையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தற்பொழுது, இந்த கும்பலுக்கு இடையூறாக பொன் குமார் என்பவர் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி கடத்திச்சென்று கொலை செய்ய திட்டம் தீட்டி வந்ததாக, சிக்கியவர்கள் போலீசிடம் தெரிவித்தனர். அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கூட்டாளியான செல்வபுரம் வடக்கு ஹவுஸ்சிங் யூனிட்டை சேர்ந்த சல்பல்கான் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கோவையில் உள்ள காவல் நிலையங்களில் கொலை மிரட்டல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

மேலும் சஞ்சய் ராஜ், காஜா உசேன் ஆகியோர் மூளையாக செயல்பட்டு கொலை திட்டத்தை அரங்கேற்ற சதி செய்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கிலும் அவர்கள் இரண்டு பேரும் சேர்க்கப்பட்டு உள்ளனர், கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story

‘மிக கனமழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் கணிப்பு! 

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Chance of very heavy rain Meteorological Center forecast

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இன்று (26.06.2024) ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்படுகிறது. 12 முதல் 20 செ.மீ. வரை மழை பொழிவிற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் நாளை (27.06.2024) ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் இரு மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (26.06.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதே போன்று கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (26.06.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.