
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்திய எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அதன்படி நேற்று (09.05.2025) இரவும் பாகிஸ்தான் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை அனுப்பி இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஜம்மு, ஸ்ரீநகர், பாரமுல்லா, பதான்கோட், பிரோஸ்பூர் உள்ளிட்ட 26 இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தாக்குதல் முயற்சிகளை இந்தியப் படைகள் முறியடித்தன. இந்நிலையில் பாகிஸ்தான் ட்ரோன்களை தொடர்ந்து பயன்படுத்தி இந்தியப் பகுதிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாகப் பாகிஸ்தானின் எந்த இடத்திலிருந்து இந்த ட்ரோன்கள் ஏவப்படுகிறது என்பதைக் கண்டறிந்து தற்போது அந்த இடத்தை இந்திய ராணுவம் தாக்கி அளித்திருக்கிறது.
இதில் இந்திய பாதுகாப்புப் படையினரும் முக்கிய பங்காற்றியுள்ளனர். அதாவது இந்திய பாதுகாப்புப் படையினரின், ‘ஸ்வாதி வெப்பன் லொக்கேட்டிங் ரேடார்’ (Swathi Weapon Locating Radar) என்ற அதிநவீன கருவி உள்ளது. அந்த கருவியைப் பயன்படுத்தி பாகிஸ்தான் பகுதிகளில் எங்கிருந்து எல்லாம் ஏவுகணைகள் டிரோன்கள் ஏவப்படுகிறது என்பதை இந்த கருவி மூலம் கண்டறிந்துள்ளனர். அதன் பின்னர் அந்த இடங்களை அழித்திருக்கின்றனர். இது தொடர்பான காட்சிகளும் வெளியாகியுள்ளன.