
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அதே சமயம் போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு - காஷ்மீரில் உள்ள ராஜோரி பகுதி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அந்த வகையில் இந்த பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு - காஷ்மீர் அரசு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ராஜோரியில் இருந்து ஒரு துயரச் செய்தி கிடைத்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் நிர்வாக சேவைகளில் அர்ப்பணிப்புள்ள அதிகாரியை நாம் இழந்துவிட்டோம்.
நேற்று தான் அவர் துணை முதல்வருடன் மாவட்டம் முழுவதும் சுற்றி வந்தார். நான் (முதல்வர் உமர் அப்துல்லா) தலைமை தாங்கிய ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொண்டார். இன்று ரஜோரி நகரத்தை குறிவைத்து பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்தியதில், நமது கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் எஸ். ராஜ் குமார் தாப்பா கொல்லப்பட்டார். அவரது வீட்டின் மீது பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கொடூரமான உயிரிழப்பு குறித்து எனது அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.