
சிதம்பரம் பகுதிகளில் டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பிகளை திருடிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 400 கிலோ காப்பர் வயர், 2 கார், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் உதவி ஆய்வளர் பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் உசுப்பூர் பாலம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் காப்பர் கம்பிகள் மூட்டையில் இருந்துள்ளது. காரில் இருந்த 2 பேரை காருடன் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் சிதம்பரம் அம்மாபேட்டை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கமலநாதன்(26), சிதம்பரம் பழைய புவனகிரி சாலை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்(47) ஆகியோர் என தெரிய வந்தது. அவர்கள் சிதம்பரம் பகுதியில் சிதம்பரம், புதுச்சத்திரம், கம்மாபுரம், அண்ணாமலை நகர் ஆகிய பகுதிகளில் 9 இடங்களில் டிரான்ஸ்பார்மரில் இருந்து காப்பர் வயர் திருடியதும், காப்பர் வயர்களை விற்க எடுத்துச் சென்றது தெரிய வந்தது. காவல்துறையினர் 2பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ 4 லட்சம் மதிப்பிலான சுமார் 400 கிலோ காப்பர் வயர்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய இரு சொகுசு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று 2 பேரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.