
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பிலாப்புஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் இராமநாதன் மகன் வீரபாண்டி (20). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் படிப்பு செலவிற்காக வீரபாண்டி விடுமுறை நாட்களில் சக நண்பர்களுடன் சேர்ந்து பலாப் பழம் பறிப்பது உள்ளிட்ட கூலி வேலைகளுக்குச் சென்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தனது படிப்பை கவனித்து வந்துள்ளார். தற்போது வரை அவர் கூலி வேலை செய்து சேமித்த பணத்திலேயே தான் படித்துக் கொண்டிருந்தார். இன்னும் சில தினங்களில் படிப்பு முடியவுள்ள நிலையில் கடைசியாக கல்லூரிக்குக் கட்ட வேண்டிய பணத்தையும் கூட, வேறு யாரிடமும் வாங்காமல் சேர்த்து வைத்துள்ளார்.
இந்த நிலையில்தான் கடந்த ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து பலாப்பழ வியாபாரி குத்தகைக்கு வங்கிய பலா மரங்களில் பலாப் பழம் பறிக்கச் சென்றுள்ளார். அப்போது, மாங்காடு பூச்சிகடை பகுதியில் பலாத் தோப்பில் ஒரு பலா மரத்தில் வீரபாண்டி ஏறி பலாப் பழம் பறித்துக் கொண்டிருந்த போது மிதமான தூறல் விழுந்ததால் மரங்களுக்கு இடையே சென்ற மின்கம்பிகளில் மரக்கிளை உரசி மின்சாரம் தாக்கியதில் அலறல் சத்தத்துடன் கீழே விழுந்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கபத்த்தின அவரை மீட்டு அருகே உள்ள வடக்காடு அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர், அங்கு வரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே வீரபாண்டி உயிரிழ்ந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தாய், சகோதரி உள்ளிட்ட உறவினர்கள் வீரபாண்டி உடலை கட்டிப்பிடித்துக் கதறியது அனைவரையும் கலங்க வைத்தது.

கல்லூரி மாணவர் உயிரிழந்த தகவல் அறிந்து ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சருமான மெய்யநாதன் வீரபாண்டி வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறியதுடன் முதலமைச்சர் நிவாரண நிதி பெற நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றார். இதனையடுத்து, முதலமைச்சர் பார்வைக்கு அமைச்சர் மெய்யநாதன் கொண்டு சென்று முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கக் கோரியிருந்தார்.
இந்த நிலையில் அமைச்சரின் கோரிக்கையையடுத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த கல்லூரி மாணவன் வீரபாண்டியனை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி முதலமைச்சர் நிவாரண நிதி ரூ.3 லட்சம் நிதி வழங்கவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த நிதிக்கான காசோலையை எதிர்வரும் சனிக்கிழமை அமைச்சர் மெய்யநாதன் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.