Skip to main content

பப்லிசிட்டிக்காகத்தான் அந்தப் பையன் இப்படி செய்கிறான்!  - குறும்பட விழா சர்ச்சையில் குற்றம் சாட்டப்பட்டவர் விளக்கம்   

Published on 03/09/2018 | Edited on 03/09/2018

சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்ட  குறும்பட விழா குறித்து, விழாவை ஏற்பாடு செய்தவர்கள் விருது வழங்குவதில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாகவும் இத்தகைய விழாக்களே பங்கேற்பவர்களிடம் நுழைவுக் கட்டணம் வாங்கி ஏமாற்றவும்தான் நடத்தப்படுகின்றன என்றும் அவ்விழாவில் பங்கேற்ற ஐந்து குறும்பட இயக்குனர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது "இந்த விழா முழுக்க முழுக்க ஏமாற்று வேலையாகவே நடத்தப்பட்டது. கலந்துகொண்டவர்களிடம் நுழைவுக்கட்டணம் பெற்றுக்கொண்டு விழாவில் முக்கிய சினிமா பிரபலங்கள் முன்னிலையில் படங்கள் திரையிடப்படும் என்றார்கள், கடைசியில் எதுவுமே நடக்கவில்லை. இதில் சிறந்த படத்துக்கான விருது பெற்றவரும் நிகழ்ச்சியை நடத்திய சேகர், ஆசிரியராக இருக்கும் 'அச்சாரம்' பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருப்பவர்தான். அவர்களுக்குள்ளேயே பரிசுகளைக் கொடுத்துக்கொண்டு எங்களை ஏமாற்றுகிறார்கள்" என்று குற்றம் சாட்டினர். இந்த விழாவின் நடுவராக பங்குபெற்ற இயக்குனர் கே.பாக்யராஜ் தனது கருத்தைத் தெரிவித்தார். இதற்கு முன்பு திருச்சியில் நடந்த ஒரு குறும்படவிழாவிலும் இத்தகைய ஏமாற்று வேலை நடந்ததாக இவர்கள் குற்றம் சாட்டினர். அந்த வீடியோ நக்கீரன் ஸ்டுடியோ (NAKKHEERAN STUDIO) யூ-ட்யூப் சேனலில் வெளியானது. (வீடியோ லிங்க் கீழே)

 

 

 


இதற்கு மறுப்பு தெரிவித்தும், அவர் பக்க நியாயத்தை விவரித்தும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சேகர் நம்மிடம் அளித்த விளக்கம் :

 

sekar

 

 

"இந்த விழாவில் மொத்தம் 45 பேர் கலந்துகொண்டனர். இதற்கு நுழைவுக் கட்டணமாய் ஒவ்வொருவரிடமும் தலா ஆயிரம் ரூபாய் வசூலிக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சியை நடத்த எனக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவானது. இந்த நிகழ்ச்சிக்கு இயக்குனர் பாக்யராஜ் தலைமை ஏற்றார். அவர்தான் முதல் படத்திற்கான விருதையும் வழங்கினார். அதில் எங்கள் தலையீடு எதுவும் இல்லை. குறும்படங்களை விழாவில் திரையிடாததற்கு காரணம், சிறப்பு விருந்தினர்களின் நேரமின்மைதான். முதலில் நான்கு மணிநேரம் வருகிறேன் என்று கூறிய பாக்யராஜ் சார், கடைசியில் ஒரு மணிநேரம் மட்டுமே இருக்க முடியும் என்று கூறிவிட்டார். அதனால்தான் திரையிட முடியவில்லை. எங்கள் விளக்கத்தை ஏற்காமல் நிகழ்விலேயே இந்த ஐந்து பேரும் பிரச்சனை செய்தனர். இவர்களில் புஷ்பநாதன் என்பவர் ஏற்கனவே திருச்சியில் நடந்த ஒரு விழாவிலும் பிரச்சனை செய்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் எங்கள் நிகழ்ச்சி நடப்பதற்கு முதல் நாள் பிரசாத் ஸ்டுடியோவில் லிங்குசாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியிலும் பிரச்சனை செய்து இருக்கிறார்.

அவர்கள் சொல்லுவதுபோல் எங்கள் ஆசிரியர்  குழுவின் நபருக்குதான் பரிசு கிடைக்கவேண்டும் என்றும் நாங்கள் நினைக்கவில்லை, மேலும் இந்த நிகழ்ச்சிக்காக போட்டியாளர்களிடம் இருந்து படங்களை பெறும்போது, பரிசு பெற்ற ரஞ்சித் குமார்  என்பவர்  எங்கள் பத்திரிகையில் சேரவே இல்லை என்பதுதான் உண்மை. மேலும் இவர்களின் முக்கிய கோரிக்கை பாக்யராஜ் முன்னிலையில் தங்கள் படத்தை திரையிடப்பட வேன்டும் என்பதே, அதற்கும் நான், முதல் பரிசு பெறும் படம் மட்டுமே அவர்முன் திரையிடப்படும் என்றும் தெளிவான விளக்கத்தை அளித்துவிட்டேன். இதை மீறியும் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதற்கும் நான் நேரில் சென்று பதில் அளித்தேன். இவ்வளவு நடந்தும் அவர்கள் மீண்டும் பிரச்சனை கிளப்புகிறார்கள் என்றால், அவர்கள் பப்லிசிட்டிக்காகத்தான் இப்படி செய்கிறார்கள். இந்த விழாவில் கலந்துகொண்ட மற்ற நாற்பது பேருமே மகிழ்ச்சியாக இருந்தார்கள். அதில் ரமணா என்பவருக்கு  நான் எடுக்கப்போகும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தரப்போகிறேன். நான் 1991இல் இருந்து பாக்யராஜ் சாரிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவன், பல முக்கிய தமிழ் படங்களை விநியோகித்தவன், பல சிறிய படங்கள் வெளியாக உதவியிருக்கிறேன். சினிமா கனவுடன் வளரும் இளைஞர்களுக்கு உதவவே இந்த விழாவை ஏற்பாடு செய்தேன். கடைசியில் அது எனக்கே எதிராக அமைந்துவிட்டது" என்றார்.  

 

சார்ந்த செய்திகள்