Skip to main content

அமைச்சரின் டுபாக்கூர் ஆய்வும் -மக்களின் குமுறலும்!

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

திண்டுக்கல் மாவட்ட முள்ளிப்பாடி அய்யன் குளம் தூர்வாரும் மராமத்துப் பணியை ஆய்வு செய்ய நேற்று காலை வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிகாரிகள் மற்றும் ஆளும்கட்சிப் பிரமுகர்களின் கார்கள் புடைசூழ  கம்பீரமாக கிராமத்துக்குள் நுழைந்தார். அவர் வருகிறார் என்று காலை 10 மணியில் இருந்து ஏரியாவாசிகள் காத்திருந்தனர். 12 மணியளவில்தான் அமைச்சர் வந்தார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எப்படி ஆய்வுசெய்தார்? என்பதை எரியாவாசிகளே விவரிக்கத் தொடங்கினார்கள்.

 

minister

 

”அமைச்சர் கார்ல இருந்து இறங்கியதும் எங்கப்பா ஆய்வுக்குப் போகணும்?ன்னு கேட்க, அருகில் இருந்தவர்கள், அந்தக் கரைமேல் போகணும்ன்னு சொல்லி,அதை நோக்கிக் கை நீட்டினாங்க. அவ்வளவு தூராமா?ன்னு திகைச்ச அமைச்சர், மெதுவாக குளக்கரை நோக்கி நடக்க ஆரம்பிச்சார்.. அப்போது அவரோடு நடந்த அதிகாரியைப் பார்த்து...  ‘நீ... நீங்க ஏ.இ.யா? ஜே.இ.யா? என்று கேட்டார். அதிகாரியோ, அதற்கு பதில் சொல்லாமல்..  தூர் வாரும் திட்டம் பற்றி பேப்பர்களைப் பார்த்து, தகவல்களை மடமடன்னு வாசிச்சார்.  அமைச்சரோ அதை காதுகொடுத்துக் கேட்காமல், இன்னொருவரைப் பார்த்து “யாருப்பா இந்த வேலையைப் பார்க்கற விவசாயத் தலைவரு?’ன்னு கேட்டார்.

இதைக்கேட்டு அவர் முன் வந்த ஒரு விவசாயி, வெட்கத்தோடு தலைசொரிய...  அவரிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “நீ எந்தக் கட்சிப்பா?” என்றார். இதைக்கேட்டு திகைத்த அந்த விவசாயி, சுதாரித்துக்கொண்டு, ஐயா நான் நம்ம அம்மாக் கட்சிதான்ன்னு சொன்னார். இதைக் கேட்டு “குட்” என்றார் மந்திரி. பிறகு. சில பேப்பர்களை வாங்கி அதைப் படிப்பது போல் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் மந்திரி. அடுத்து ”யாருப்பா ஜே.சி.பி.? இங்க வா?ன்னு குரல் கொடுக்க, பக்கத்தில் வந்த அந்த எந்திரத்தின் அருகே நின்று கொண்டு ஜே.சி.பி.யை கவர் பண்ணி படம் போட்டோவ எடுப்பா “ என்றார். படம் எடுத்ததும் ”ஏப்பா" இந்தக் குளத்துக்கு தண்ணி எங்கிருந்து வருதுப்பா?” என்றபடியே காரை நோக்கி நடந்தார்.  அமைச்சருடன் வந்திருந்த மாவட்ட ஆட்சியர், வாயையே திறக்காமல் பரிதாபமா நின்னாரு. இப்படி அதிகாரிகள் புடைசூழ வந்து அமைச்சர் போட்டோ எடுத்துக்கிட்டுப் போன நிகழ்ச்சிக்குப் பேரு ஆய்வாம்” என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள்.

இந்த பெரிய குளத்தை பலரும் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அதனால் இந்தக் குளத்தை முதலில் அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று கவிஞர் ஆறுமுகம் குழந்தை உள்ளிட்ட ஏரியாவாசிகள் பலரும் தொடர்ந்து குரல்கொடுத்தும் எதுவும் நடக்கவில்லை. அதேபோல் அந்தப் பகுதியில் இருக்கும் பாறைக்குட்டை மராமத்துப்பணி, அங்குள்ள தனி நபர் ஒருவரின் தலையீட்டால் பாதியில் நிற்கிறதாம். இதற்கெல்லாம் விடிவு எப்போது? 

                                                                                                                                                                        -சூர்யா

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நெல்லை முபாரக்கின் பேச்சு - கண் கலங்கிய திண்டுக்கல் சீனிவாசன்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Nellie Mubarak's Speech-Dindigul Srinivasan sad

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சச்சிதானந்தமும், அதிமுக கூட்டணி வேட்பாளர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முகமது முபாரக், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளரான திலகபாமா ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர் நெல்லை முபாரக்கின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன் மற்றும்  நத்தம் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்கள். அப்போது அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக்கை ஆதரித்து திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் வீரர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என இரண்டு அமைச்சர்களும் கட்சி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் முபாரக் பேசுகையில், 'இரட்டை இலை சின்னம் எனது அருகில் உள்ளது. ஒன்று திண்டுக்கல் சீனிவாசன் மற்றொருவர் நத்தம் விஸ்வநாதன். எனது அப்பா 2015ல் இறந்துவிட்டார். எனது தாய் 2022 இறந்துவிட்டார். இப்படி தந்தை தாய் இல்லாமல் இருக்கிறேன். அவர்களுக்கு பதிலாக தந்தையும் தாயுமாக எனக்கு இரண்டு அப்பாக்கள் உள்ளனர். அதில் ஒருவர் சீனிவாசனும் மற்றொருவர் விஸ்வநாதனும் உள்ளனர். அதேபோல் அதிமுகவில் உள்ள தொண்டர்களும் என்னை அரவணைக்க உள்ளனர்' எனப் பேசினார். இவ்வாறு வேட்பாளர் பேசும்போது, தன்னையே அறியாமல் முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.